11
Apr
2026

நாடு கெட்டுப் போச்சு, நாகரீகம் நரகத்திற்குக் கூட்டிப் போகுது. கலாச்சாரம் கற்பழிக்கப்படுகிறது. சமுதாயம் சாக்கடையில் கிடக்கிறது. போதையில் பூமியே தலைகீழாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஜாலியாக வந்தது. ஊரையே காலி செய்து கொண்டிருக்கிறது. உடல் வலிக்கு மருந்து என்று சொன்னார்கள். உயிர் குடிக்கும் உயிர் கொல்லியாக ஊத்திக்கொடுத்துக் கொன்றார்கள். விசத்தைவிடக் கொடியது இது. ஏனென்றால் விசம் குடித்தவனை மட்டுமே கொல்லும். குடி குடும்பத்தையே கொல்லும் என்பது அறியாததல்ல. குடி என்ற கொடிய அரக்கனை நாம் ஏன் இன்னும் கொல்லாமல் கொஞ்சிக் கொண்டிருக்கிறோம்?
குடி மெல்லப் பரவி நச்சுக் காற்றாய் நம்மைச் சுற்றி வந்துவிட்டது. இதன் தாக்கம் உயிர் சேதம், பொருள் சேதம், விபத்துக்கள், கொலைகள், கற்பழிப்புகள் என அத்தனைக்கும் வித்தாக குடி அமைந்து விட்டது. குடியின் காரணமாகப் பல குடும்பங்கள் பிரிந்து விட்டது. திருமணம் நின்றுவிட்டது. நோய்கள் பெருகிவிட்டது. மரணங்கள் அதிகரித்து விட்டது. இன்னும் ஏன் இவற்றிலிருந்து விடுபடாமல் மானிடச் சமூகம் மயங்கிக் கிடக்கிறது?
மெதுவாகக் கொல்லும் விசம் என்று தெரிந்தும் ஏன் நாம் அதனை எதிர்க்க மறுக்கிறோம். அதிகாரிகளும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்? இன்று அரசியல் களத்தில் மதுவுக்குத் தடை விதிப்போம்! என்று எவரும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லையே ஏன்? மதுவால் அதிகமாகக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்றால்! குடும்பப் பெண்கள் மதுக்கடைகளை மூடுகின்ற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று களமிறங்கிப் போராட வரவில்லையே ஏன்?

ஆங்காங்கு சில சமூக நலவாதிகள் மட்டுமே மதுவுக்கும், போதைக்கும் எதிராக மரணப் போராட்டங்கள் நடத்துகின்றார்கள், மற்றவர்கள், விதியே என்று வீதியில் அலைகிறார்கள். இதற்கு யார் தான் முடிவு கட்டுவது? மெல்ல மெல்ல நம்மை முடித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் இருந்தால் அந்த கடவுள் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது.
இன்று இந்த அரக்கனுக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமென்றால் அரசியல்வாதிகள் தான் அதிக அக்கரை காட்ட வேண்டும். ஆனால் இங்கு குடிமக்கள் அதிகமாகி விட்டதாலும் அந்த குடியை வைத்துத்தான் மக்களை எளிதில் ஏமாற்றலாம் என்பதாலும் அந்த குடியின் மூலமாகத்தான் கொள்ளை இலாபம் அடிக்கலாம் என நினைப்பதாலும் அரசியல்வாதிகள் இதனைப் பற்றிப் பேசினால் ஆபத்து ஏற்படும் என பயப்படுகிறார்கள். இது தெரிந்திருந்தும் இதற்குக் காரணமாக அரசியல்வாதிகள் இருப்பதால் அவர்கள் இதைப் பற்றி பேசினால் சாத்தான் வேதம் ஒதுவது போலாகும்.

இதற்கு முன் குடித்தார்கள் என்றால் அத்திப் பூத்தாற்போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் யாராவது யாருக்கும் தெரியாமல் கள்ளு குடிப்பார்கள். அப்படிக் குடிப்பது வெளியில் தெரிந்தால் குடும்பத்திலிருந்து அனைவரும் கண்டிப்பார்கள். பொதுவெளியில் இடையூறு செய்தால் ஊருக்குப் பொதுவான இடத்தில் கட்டிவைத்து அடிப்பார்கள். தண்டனைகளும், அவமானங்களும் அதிகமானதால் அதனை தொடுவதற்கே பயந்தார்கள். ஆனால் இன்று காலம் தலைகீழாக மாறிவிட்டது. நாகரீகத்தின் வெளிப்பாடு போதையில் தடுமாறுவது என்றாகிவிட்டது.
அன்று கள்ளுக்கடை 10 கீ.மிக்கு ஒன்று என்று இருந்தது. ஆனால் இன்று 10 கி.மீட்டருக்குள் நூறு கடைகள் பார்கள் தோன்றிவிட்டது. இதனால் யாரும் எளிதில் வாங்கலாம் என்ற இழிநிலைக்கு வந்து விட்டோம். ஒரு காலத்தில் முக்கியத் திருவிழாக்கள் அன்று 3000 கோடி சரக்கு விற்பனையானது என்று சொல்லப்பட்டது இன்று 52,000 கோடி விற்பனை ஆகிறது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்தக் குடியினால் குடும்பத்தலைவன் மானம், மரியாதையை இழக்கிறான். இதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமுதாயத்தால் வெறுக்கப்படுகிறார்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.

ஒருவர் குடிப்பதனால் அவரது குடும்ப வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாடிக்கிடக்கிறார்கள். தற்கொலையும் செய்கிறார்கள்.
ஒருவர் குடிப்பதனால் அந்தக் குடும்பத்தில் சேமிப்பு இல்லாமல் போய் விடுகிறது, இதனால் வீடு கட்டுதல், திருமணம், ஆகிய நல்ல காரியங்கள் நடைபெறாமல் தடைபட்டுப் போகிறது குடும்பங்கள் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கிறது.
குடியின் காரணமாகப் பல்வேறு வியாதிகள் வருகிறது. இதனால் உடல் நலிவுற்றுப் போவதுடன் அளவுக்கு மிஞ்சிய மருத்துவச் செலவுகளாலும் குடும்பங்கள் சீர்குலைந்து போகிறது.

குடியின் காரணமாகக் கடன் தொல்லையால் குடும்பங்கள் தற்கொலைகள் செய்கின்றன அல்லது ஊரை விட்டே ஒடிவிடுகின்றனர்.
குடியின் காரணமாகப் போதை தலைக்கேறிப் பல்வேறு விபத்துக்களால் தானும் செத்து, எதிரில் வருகிறவர்களையும் எமனிடம் அனுப்பிவிடுகிறார்கள். அருகில் நிற்கின்ற பெண்களை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள்.

குடி மட்டுமே பெண்களை போதைக்குப் பயன்படுத்தத் தேடும். நட்பை எதிரியாய் சாடும். அடிதடி மட்டுமே வீரம் எனக்கொள்ளும். அவதூறான வார்த்தைகள், அசிங்கப்பட வைப்பதுமே ஆறறிவு என நினைக்கும்.
இந்த குடி மட்டுமே மனிதனை மீண்டும் மிருகமாக்கும். இதற்குமுன் குடித்தவர்களை அசிங்கமாகப் பார்த்தவர்கள் இன்று குடிக்காதவர்களைக் கேவலமாகப் பார்க்கிற சமுதாயமாக மாறி விட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை விரைவில் அடைந்தது குடியில் மட்டும்தான். அதிகம் சம்பாதிக்க தொழில் நிறுவனம் இங்கு வந்தது. அந்தப் பணத்தைக் கொண்டு குடிப்பதை இரசிக்க ஊடகம் உற்சாகப்படுத்துகிறது.
ஆன்மீகம் குடியில் திளைக்கிறது. அறம்போதிக்கும் அடியார்களும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டங்கள் குடியில் மூழ்கிக் கிடக்கிறது. வெற்றியடைந்தவனும், தோல்வியடைந்தவனும் ஆறுதல் தேடுவதும், அடைக்கலமாவதும் குடியில் மட்டுமே.
இந்தக் குடியின் கொடுமையை இன்னும் மக்களுக்குப் புரியவில்லை இன்று சராசரி ஒரு மணி நேரத்திற்கு ஒரு மனிதன் குடியால் அழிகிறான். வருடத்திற்கு 2,60,000 பேர் குடியால் மட்டுமே அழிகிறார்கள். இதையெல்லாம் கண்மூடி வேடிக்கை பார்க்கிறோம்.

பூமிக்கே வந்த சாபக்கேடு இந்தக் குடி இந்த ஆபத்தை இன்னும் இந்த மானிடச் சமூகம் அறியவில்லை. இன்று குடி அதிகரிக்க அதிகரிக்க ஆண்கள் ஆண்மையற்றவர்களாக மலட்டுத்தன்மைக்கு மாறி வருகிறார்கள். ஊருக்கு ஊர் இருந்த செயற்கை கருத்தரிப்பு மையம் இன்று தெருவிற்குத் தெரு வந்துவிட்டது. பெட்ரோல், டீசலுக்கு வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்கின்றவர்கள் இனிமேல் ஆண்களுக்கு அயல்நாட்டைக் கையேந்தும் அவல நிலைமைக்கு வந்துவிடக் கூடாது.
பேருக்குக் குடித்தவர்கள் எல்லாம் இப்போது பேர் கெட்டுப்போகும் அளவிற்குக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். 1000பேர் குடித்துக் கொண்டிருந்த இடங்களில் இப்போது 18,000 பேர் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வயது வரம்பு இல்லாமல் மரபையும் மறந்து மரண வாசலுக்கு இச்சமூகம் சென்று கொண்டிருக்கிறது.
ஆண்களாய் இல்லாமல் ஆண்கள் பெருகும் இச்சமூதாயத்தை யோசித்துப்பாருங்கள். அப்படியென்றால் திருமணம் தேவைப்படாது தாம்பத்தியத்திற்கு, மருத்துவச் சான்றிதழ் வேண்டும், பெயருக்கு முன்னால் பெற்றோர் எழுத்து எதற்கு? குடும்பம் இல்லையென்றால் சமுதாயம் எதற்கு? சடங்குகள் எதற்கு? உறவுகள் எதற்கு? ஏன் இந்த உலகமே எதற்கு? அனைவரும் யோசியுங்கள்!

குடியை ஒழிக்க குரலை எழுப்புவோம். குடியில்லாத குடியரசை அமைக்கும் அரசைத் தேர்ந்தெடுப்போம். குடிக்காத ஆண்களோடு குடும்பம் நடத்துவோம். குடியைத் தடுக்க விவாகரத்தை ஆதரிப்போம் அனுமதிப்போம். குடிப்பவர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தண்டனையை அதிகரிப்போம்! குடிப்பவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்போம். அதனைத் தடுக்க வேண்டியவர்கள் தடுத்தால், ஒடுக்க வேண்டியவர்கள் ஒடுக்கினால், வெறுக்க வேண்டியவர்கள் வெறுத்தால், சமுதாயமே குடிகாரர்களைத் தண்டிக்கத் துணிந்தால் இந்தக் குடியை குழியில் தள்ளலாம்;. இல்லையென்றால் நாமும் தள்ளாடுவோம்! நாளும் தடம் மாறுவோம்!
“பாதையில்லாத
பயணத்தவிட…
போதையில் பயணமே
ஆபத்தானது
அழிவுக்குறியது…”