26

Apr

2026

நீதி தேவதை – ரேவதி

உலகையே உலுக்க வைத்த லாக்-அப் மரணத்தின் தீர்ப்பைக் கண்டு உலகமே திகைத்துப் போய் நிற்கிறது. சாத்தான்குளத்தில் ஒன்பது சாத்தான்கள் சேர்ந்து அரங்கேற்றிய இந்த அசிங்கத்தை செய்தவர்களுக்கு இத்தகைய தீர்ப்பு கிடைக்குமா? என்பதுதான் அனைவருக்கும் வியப்பு!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் லாக்-அப்-ல் வைத்து அடித்தே கொன்ற காக்கிச்சட்டைகளை கிழித்தெரிந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. ஒரு காக்கி இருந்தாலே உண்மையைப் புதைக்கத் துடிக்கிற உலகத்தில் ஒன்பது காக்கிகளைத் தோலுரித்துத் தூக்கிலிடப் பணித்த அந்தத் தூய நீதிபதி யார்? காரணம் என்ன?

நீதி சாகவில்லை. அது வேலிகளையே வீதியில் வீசி எறிந்துவிட்டது. காரணம் ஒரு நீதிதேவதை நேரில் வந்து சாட்சி சொன்னது. இந்த இரத்தம் குடிக்கும் ஒநாய்களுக்கு மத்தியில் எனக்குள் துடிப்பது இறைச்சித் துண்டல்ல அது இதயம்! என்று எப்படி இந்த உலகிற்கு முதன்மைக்காவலர் ரேவதி நிரூபித்தார்?

நான் சந்திக்கத் துடிக்கின்ற ஒரு நீதி தேவதைதான் இந்த ரேவதி. தன்னைச் சுற்றித் தான்தோன்றித் தனமாக அலைந்த இரும்பு இதயங்களை கம்பி எண்ண வைக்கும் அந்தத் துணிச்சல் இந்தத் தமிழச்சிக்கு எப்படி வந்தது?

தனக்கும், தனது இரு குழந்தைகளுக்கும் உயிருக்கு உத்தரவாதம் அளித்தால் உண்மைகளைக் கக்குவேன் என்று அனல் பறக்கும் வாதத்தோடு உண்மையென்ற நெருப்பை உலகிற்கு அறிவித்தாள். இதனால் அந்தப் பாவத்தை செய்த பாதகர்கள் பற்றி எறிந்து கொண்டு இருக்கிறார்கள்.பதறித் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கும் நீதிதேவதை ரேவதிக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உத்தரவாதம் கொடுக்க, அந்த கொடுங்கோல் அரக்கர்கள் செய்த கொடுமைகளைக் கொட்டித் தீர்த்தாள்.

சாத்தான்குளத்து காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸபெக்டர் பால்துரை, போலிஸ்காரர்கள் முருகன், முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, சாமத்துரை எனப்பத்து பேர் கைதாகினார்கள். அதில் பால்துரை கொரோனா காலத்தில் இறந்ததால் இப்போது 9பேர் சிறையிலிருக்கிறார்கள்.

தந்தை, மகன் இருவருக்கும் நிலுவையில் எந்த வழக்குகளும், இல்லாதபோது அவர்களை காவல்நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து நிர்வாணமாக்கி தந்தைக்கு முன் மகனையும், மகனுக்கு முன் தந்தையையும் கொடூரமாகத் தாக்கி குரல்வளையை நெறித்து, மர்ம உறுப்பை பூட்ஸ் காலால் உதைத்து, லத்திகள், இரும்புக் கம்பிகளால், கொடூரமாகத் தாக்கி போலிஸ் நண்பர்கள் என்ற புறம்போக்கு நாய்களையும் ஏவிவிட்டு நினைத்துப்பார்க்க முடியாத, நெஞ்சம் பதறுகின்ற, கொடுமைகளை அந்த காவல்துறையினர் இந்த பாவத்தைச் செய்து முடித்தனர்.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தைப் பொறுக்க முடியாமல் ஒரு காக்கிச் சட்டைக்குள் இதயமும் வைத்திருந்த முதன்மைக் காவலர் நீதிதேவதை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு தோன்றி நேரில் வந்த தேவதையாக மனச்சாட்சி என்ற தேரில் வந்து இறங்கினாள். இதனால் நீதிதேவதை நேரில் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நிதர்சன உண்மையாக நீதிபதியின் நெஞ்சில் பதிய வைத்தாள் அந்த காவல் நிலையத்தின் முதன்மைக் காவலர் ரேவதி.

இந்த அரக்கர்கள் அரங்கேற்றிய அடிகளையெல்லாம் பொறுக்க முடியாமல் அந்த இரு உயிர்களும் துடிக்க ஆரம்பித்தது. இடைவெளி விட்டு விட்டு அடிக்க அடிக்க தவணை முறையில் உயிர்கள் அந்த உடலைவிட்டு வெளியேறிக் கொண்டு இருந்தது.

கொடுமை, அட்டூழியம், அகங்காரம், ஆணவம், திமிர் போன்ற அத்தனையும் பொருந்திய ஒன்பது உடல்ள் அந்தக் காக்கிச் சட்டையைக் கேடயமாக அணிந்து கொண்டு முதலில் அவர்கள் அடித்த அடியில் அவர்கள் சட்டைகள் கிழிந்தது. நேரம் ஆக ஆக அவர்கள் சதையும் கிழிந்தது, இரத்த நாளங்கள் வெடிக்க, குருதி ஆறாகக் கொட்ட அவர்கள் இரத்தத்திற்குள் அந்த உடம்புகள் கிடந்தது. உயிர் பிரிந்து உடல்கள் மரணித்துக் கிடந்தது.

ஒன்பது காக்கிகளும் உடன் குரைக்கும் எடுபிடிகளும் உண்மையை மறைக்க ஒராயிரம் வழிகளைத் தேடினார்கள். ஆனால் கூடவே ஒரு நீதிதேவதை நின்று கொண்டிருந்ததை அந்த முட்டாள்களின் கண்ணுக்குத் தெரியவில்லை.

அவர்கள் அடிவாங்கும்போதே அவர்கள் மீது இரக்கப்பட்ட இந்த ரேவதி குடிக்கக் காபி வாங்கிக் கொடுத்தாள். அதையும் குடிக்கவிடாமல் அந்தக் கொடூர இன்ஸ்பெக்டர் தட்டி விடுகிறார். அனைத்தையும் பொறுக்க முடியாமல் எமனோடு போராடும் அந்த உயிர்களைத் தடுத்து நிறுத்த மீண்டும் ரேவதி தண்ணீர் கொடுக்கிறாள். முதலுதவி செய்ய முயன்று பார்க்கிறாள் முடியவில்லை. அந்தக் காக்கிகள் எமனை அவர்கள் அடிகள் மூலம் இலவசமாக அழைக்கிறார்கள். பின்பு இவர்களுக்கு இதுதான் எமனாகப் போகிறது என்று தெரியாமல் தானாய் வந்து தூண்டிலில் மாட்டுகிறது இந்தத் திமிர் பிடித்தத் திமிங்கலங்கள்.

இந்த இரு மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் நீதி மகள் ரேவதியை எண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நீதி செத்துவிடக் கூடாது என்பதற்காகத் தனியாகப் போராடிய நவீன ஜான்சி ராணி இவள். மொத்தமாகக் காக்கிச் சட்டைக்கு களங்கம் விளைவிக்கத் துடித்தபோது ஒற்றை மகளாய் காக்கிச் சட்டையை தூக்கி நிறுத்தி இருக்கிறாள் சபாஷ்.

இந்த ரேவதிக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்? உடனிருந்த உயிர்க் கொல்லிகளைத் தோலை உரித்துத் தொங்க விட்டிருக்கிறாள். ரேவதி நீ வாழ்க! நீ இருக்கும் வரை நீதி சாகாது! துணிச்சலுள்ள பெண்களுக்கெல்லாம் ரேவதி என்ற பெயரை வைக்கச் சொல்லுங்கள். இந்த அத்துமீறும் ஆண்களை எல்லாம் அடக்கச் சொல்லுங்கள். இவள் ஒருத்தி போதும் இனிவரும் காலம் நீதி சாகாது! இவள்போல் பெண் வேணுமென்று இந்தப் பூமி தவமிருக்கிறது. வாழும் பெண்களில், சுற்றியிருப்பவர்களின் உறவுக்கு நொறுங்காமல் எப்போதும் நீதிக்காகத் துணிகின்ற பெண்கள் எத்தனைபேர்? உங்கள் வீட்டில் தெருவில், உறவில் பட்டியலிடுங்கள்.

ஐயா காவல் ஆய்வாளர்களே! இனிமேல் நீங்கள் காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது உடல் தகுதிக்கு வைக்கிற பயிற்சியோடு மனதிற்கும் கொஞ்சம், நேர்மையையும், உண்மையும் இருக்கிறதா? என சோதித்துப் பார்;க்கவும். அப்படியென்றால் உண்மையாக உழைக்கின்ற காவலர்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம்!

“பெண்கள் பேச வேண்டிய
இடத்தில் பேசவும்
பேசக் கூடாத இடத்தில்
பேசாமலும் இருந்தாலே
பிரச்சனைகள் பூமிக்கு இல்லை”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES