17
Jul
2026

வணக்கம்…
வாழ்ந்து முடித்து வாழ்க்கையின் ஓரத்தில் நிற்பவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளின் அனுபவங்களைக் கையில் எடுத்து, இனிவருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கை வழித்தடமாக இருக்கும் என்ற நோக்கில்… முதிர் வயதில் இருக்கின்ற என் நினைவுகளை அசைபோடும்போது கண்ணீர் மட்டுமே கரை இல்லாமல் புரண்டு வருகின்றது துடைக்கக்கூட என் விரல்களுக்குத் துணிவு இல்லை.
பெண்ணாய்ப் பிறப்பது பெருந்தவம் என்றார்கள். வயதான நிலையில் இருக்கின்ற எனக்குத்தான் தெரியும் பெண்ணாய்ப் பிறப்பது எவ்வளவு பாவம் என்று? மண்ணுக்குக்கூட பெண்ணின் பெயரை வைத்துப் போற்றிய இச்சமூகம் பெண்ணை மட்டும் மண்ணாய்ப் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. பெண்குழந்தை பிறக்கும்போதே முகத்தைச் சுழிக்கிற இச்சமூகம் பெண்களை கடைசிவரை சிரிக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது. பயமுறுத்துகிறது. காரணம் பொம்பள சிரிச்சா போச்சு! புகையிலை விரிச்சாப் போச்சு!.
குடும்பச் சுமையிலிருந்து குழந்தைச் சுமைவரை அனைத்துச் சுமைகளையும் கடைசிவரைச் சலிக்காமல் சுமக்கின்ற பெண்களை அவர்களது குடும்பத்திலிருக்கிறவர்கள் மட்டுமே சுமையாகப் பார்க்கிறார்கள். சொத்துரிமை என்பது பெண்களுக்கு இல்லை என்ற கொள்கையுடைய இச்சமூகம் சமையலறை, படுக்கையறை என்பதை மட்டும் பெண்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, அனுபவிக்க மட்டுமே ஆண்கள் என்ற அவலநிலையயை வைத்துவிட்டார்கள் இங்கு இதுதான் வாழ்க்கைச் சட்டம் என வகுத்து வைத்தார்கள்.
பெண்களுக்கு எதிரி இந்தச் சமூகம்தான் என்று கூறிவிட்டு பெண்களை உயிரோடு சிதைத்துக் கொண்டிருப்பது குடும்பங்கள்தான் என்பதனை மறக்கடிக்கச் செய்து விட்டார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது வெற்றிக்குப் பின்னால்; ஒரு ஆண் இருப்பான்;. அவன், தகப்பனாக, கணவனாக, மகனாக என்று வீர முழக்கமிடுவார்கள். ஆனால் நெஞ்சைத் தொட்டுச் சொல்லிப் பாருங்கள் இவர்கள் மூவர் மட்டும் இல்லையென்றால் இன்று ஒவ்வொரு பெண்களின் சாதனைக்கும் உலகமே மலைத்துப் போய் நிற்கும்.
எத்தனையோ பெண் குழந்தைகளின் திறமைகள் சொந்தத் தகப்பனால் ஒடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ கணவர்களால் பெண்கள் கூண்டுக் கிளியாய் முடக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ குழந்தைகளுக்காகப் பெண்கள் வேலைக்காரியாய் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சமுதாயம் பெண்களுக்கு அத்தனைச் சன்னல்களையும்; திறந்துவிட்ட போதும் குடும்பம் அவளைச் சம்சாரமாக்கித்தானே சமாதியாக்கி விடுகிறது. பெண்கள் குடும்பத்தலைவி என்ற பட்டத்தோடு வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்படுகிறாள்.
பெண்களின் சாதனைகள் எல்லாம் கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தானே! இந்தச் சமுதாயம் பெண்களை, மாணவியாக, மருத்துவராக, பொறியியல் வல்லுவனராக, விஞ்ஞானியாக, மேனேஜராக, வங்கி அலுவலராக, பாடகராக, நாட்டியப் பேரொளியாக, ஆசிரியையாக, அரசு அலுவலராக, அரசியல்வாதியாக எனப் பல்வேறு நாற்காலிகளில் அமர வைத்து பட்டாபிசேகம் செய்து அழகு பார்க்கிறது. ஆனால் குடும்பம் மட்டுமே உலகம் கொடுத்த மரியாதையையெல்லாம் உதறிவிட்டு சமயலறையைக் காட்டி சமையல்காரியாக்கியது. உறவுகளைக் காட்டி வேலைக்காரியாக்கியது. இச்சையைத் தீர்க்க ஊமையாக்கியது. வாரிசைச் சுமக்க வாடகைக் கொடுத்தது. ஒரு வேலைக்காரியாய் மாலைபோட்டு வீட்டுக்கு அழைத்து வந்தது. எதற்கும் ஊதியம் கேட்கக்கூடாது என்பதற்காகக் கழுத்தில் ஒரு தாலி கட்டப்பட்டது. அது கல்யாணம் என கட்டாயமாக்கப்பட்டது.
ஒரு பெண்ணை இந்தச் சமூகம் அரசியல் தலைவியாக்கி அழகு பார்க்கிறது. ஆனால் அவளது குடும்பம் மட்டுமே அவளை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு ஆண்கள் அரசியல்வாதியாக அதிகாரம் இருப்பதாக ஆடித் தீர்க்கிறது. இங்கு சாதனைப் பெண்கள் என்று சிலரை அடையாளம் காட்டுகிறார்கள்;. அன்னைத் தெரசாள், ஜெயலலிதா, மம்தாபானர்ச்சி, அன்னை இந்திராகாந்தி என்று இவர்கள் எல்லாம் குடும்பத்தை உடைத்துக் கொண்டு அந்த பந்தத்தின் கட்டுகளை அகற்றிவிட்டு தனக்கென ஒரு வானத்தைத் தானே உருவாக்கிக் கொண்டார்கள்.
ஒரு குடும்பத்தின் நோக்கம் பெண் குழந்தையைப் படிக்க வைத்து, பல்வேறு திறன்களில் வளரவைத்து பறந்த வானில் பறக்க விடுவது அல்ல. யாருக்காவது ஒருவனுக்கு மனைவி என்ற பெயரில் வேலைக்காரியாய் அனுப்புவது. கல்யாணம் என்ற பெயரில் அந்த கருமத்தை அரங்கேற்றுவது. எல்லா நாடுகளிலும் திருமணப்பந்தங்கள் உண்டு. ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் சரியான அடிமையை கல்யாணம் என்ற பெயரில் ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கிறது.
பெண்குழந்தைகளை அதிகம் படிக்க வைத்தால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று யார் சொல்வது? குடும்பமா? சமூகமா? புருசனைவிட அதிகப் படிப்போ, ஊதியமோ இருந்துவிடக் கூடாது என்று எதிர்பார்ப்பது குடும்பமா? சமூகமா? ஆண்பிள்ளை என்றால் அப்படி இப்படித்தான் இருப்பான்! நாம்தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று பெண்ணுக்குப் போதிப்பது குடும்பமா? சமூகமா? இந்த வருடத்திலும் குழந்தை இல்லையென்றால் அவனுக்கு இன்னொரு திருமணம் செய்துவிட வேண்டியதுதான் என்று பெண்களை மலடியாக்குவது குடும்பமா? சமூகமா?
ஆணவக் கொலை! வரதட்சனைகக் கொடுமை!, சந்தேகக் கொலை! என்று அரங்கேற்றுவது குடும்பமா? சமூகமா? பெண்ணுக்குப் பேய்ப்பிடித்திருக்கிறது, பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள், காலம், நேரம் சரியில்லை, அவள் சடங்கான நேரம் சரியில்லை என்று அத்தனை குற்றச்சாட்டுகளையும் பெண்கள் மீது அள்ளி வீசுவது குடும்பமா? சமூகமா? இன்று பெண் குழந்தைகள் மீது ஏவி விடப்படுகின்ற பாலியல் வன்முறைகளும், அலுவலகங்களில் அரங்கேறுகிற பாலியல் சீண்டல்களும், அதிகார ஆள்பலம் இருக்கின்ற நிலையில் உருவாக்கப்படுகின்ற பாலியல் பலாத்காரங்களும், சமூகத்தில் நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. ஆனால் அது ஒவ்வொரு வீட்டுக் குழந்தைகளின் வளர்ப்பு சரியில்லை என்பதைத்தான் நமது வாழ்க்கை முறை காட்டுகிறது.
எனது நோக்கம் குடும்பங்களைக் குறைசொல்வது அல்ல. எங்கள் குடும்பங்களில் பெண்குழந்தைகள் இப்படி இல்லை அவர்கள் நினைத்ததை யார் மனதும் பாதிக்கப்படாமல் முழுச் சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்; என்று சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!
என்ன இருந்தாலும் பெண்குழந்தை பெண் குழந்தைதானே! இன்னொரு வீட்டுக்கு வாழப்போகிற பெண்தானே! நாலுபேரு நாலு விதமாகப் பேசிவிடக் கூடாதல்லவா? என்று புளித்துப் போன பழைய பஞ்சாங்கத்தைப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்களால்தான் இந்த நாடு நாசமாகப் போகிறது. கட்டுப்பாடுகளை விதிக்கும் தகப்பன், சந்தேகப்படும் கணவன், கண்டுகொள்ளாத மகன் இவர்களுடன் வாழும் ஒரு பெண் இந்தப் பூமியில் இருப்பதைவிட போய்ச் சேருவது நலம்! உற்சாகமூட்டுகிற தந்தை! உடனிருக்கிற கணவன்! உதவிசெய்யும் மகன்! இம்மூன்றும் பெண்களுக்குக் கிடைத்தால் அதுதான் வரம், அவர்கள் வாழும் நாட்கள் சொர்க்கம்!.
உங்கள் வாழ்க்கையிலும் பெண்கள் உங்களால் உயர்ந்தவர்கள், மகிழ்ந்தவர்கள் பெண்ணியத்தால் பெருமைப்பட்டவர்கள் எத்தனைபேர்? முடிந்தமட்டும் உதவுங்கள், முன்னேற உடனிருங்கள்! நீங்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமாகும். மண்ணில் மரங்கள் வாடினால் கூட தண்ணீர் ஊற்றச் சொல்லிக் கொடுத்த இச்சமூகம் நம் வீட்டுப் பெண்களின் மனங்கள் வாடும்போது கூட அன்பை ஊற்றச் சொல்லாத அவல நிலையில் வாழ்கிறோம்.. அந்தோ….பரிதாபம்….!
வலியோடு விடைபெறுகிறேன்
திருமதி வசந்தா….
“வேதங்களே ஆனாலும்
பாதகம் செய்யும்போது
பார்த்துக் கொண்டிருப்பதா?
பழி தீர்க்க வேண்டும்!”