04
Jul
2025

அவரவர் தகுதி என்பது அவரவர் உருவாக்கிக் கொள்வது அது அடுத்தவர்கள் கொடுத்தால் நிற்காது. அவரவர் தகுதியை அவரவர் உணர்ந்து அதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயங்கரமான தோல்விகளோ, நீக்க முடியாத துன்பங்களோ, தாங்க முடியாத அவமானங்களோ ஏற்படாது பலர் தாங்களே தற்கொலையால் மாய்த்துக் கொள்வதற்குக் காரணம் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு அதனால் தானே துன்பத்தையும், அவமானத்தையும் வரவழைத்துக் கொண்டு தாழ்வு மனப்பான்மையால், தன்னம்பிக்கை இல்லாததால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இன்று எந்த மனிதர்களையாவது நீங்கள் சந்தித்து உங்க ஸ்டேட்டஸ் என்ன? என்று கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்? அவர்களுக்கு அது என்ன என்றே தெரியாது! தனக்கென்று தானே ஒரு தகுதியை ஏற்படுத்திக் கொள்ளத் தெரியாத தலைமுறைகள்தான் இன்று தலையெடுத்திருக்கிறது. அப்பன் சொத்தில் வாழ்கின்ற குழந்தைகளும், கணவனின் நிழலில் மறைகின்ற பணத்திமிரில் அலைகின்ற வாரிசுகளும், பதவியைத் தவறாகப் பயன்படுத்துகின்ற அதிகாரிகளும், அதுதான் தனது தகுதி என்று எண்ணுகின்ற கூட்டமும், மதத்தின் அடையாளங்களில் மாறுவேடம் போட்டுக் கொண்டு மக்களை மடையர்களாக்கி தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் தகுதி என எண்ணிக் கொள்கிறார்கள்.
ஆனால் இப்போதுள்ள தலைமுறையிடம் ஸ்டேட்டஸ் என்ன என்று கேட்டால்? அவர்கள் உடனே நினைப்பது அலைபேசியில் தினந்தோறும் தான் வைக்கின்ற ஸ்டேட்டஸ்சைத் தவிர வேறொரு சிந்தனை அவர்களுக்கு கிடையாது. அதனைப் பொழுதுபோக்காகவும், இரசனையாகவும் மனதில் பட்டதையும், எதையோ பிறருக்குச் சொல்ல விரும்புவதையும் நீங்கள் பார்க்கலாம்.
சிலரிடம் கேட்டுப்பாருங்கள் நான் எப்போதும் என்னுடைய அலைபேசியில் ஸ்டேட்டஸ் வைப்பதில்லை. ஏனென்றால் அதற்கு எங்கே நேரமிருக்கிறது? என்பார்கள் இவர்கள் சமுதாயத்தோடு எப்போதும் தன்னை ஒட்டிக் கொள்ள மாட்டார்கள். சமுதாயத்தை அவர்கள் பெரிதாக எண்ணிக் கொள்வதுமில்லை. சமுதாயமும் நம்மைப் பெரிதாக எண்ணும் என்ற எண்ணமும் இல்லாதவர்கள். மேலும் இவர்கள் கூறுவது நாங்கள் ஸ்டேட்டஸ் வைத்து என்ன ஆகப்போகிறது? என்று தனக்குத்தானே தன்னைக் குறுக்கிக் கொள்வார்கள்.
இன்னும் சிலர் எனக்கு ஸ்டேட்டஸ் வைக்கத் தெரியாது என்பார்கள். இவர்கள் உலகப் பொருட்களில் தனக்குத் தேவை எவ்வளவோ அவ்வளவு மட்டும் பயன்படுத்திக் கொள்பவர்கள். அதற்குமேல் நமக்கு எதற்கு? என்று கிணற்றுத்தவளையைப் போல தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். இது நாகரீக உலகம்! ஊடகம் எவ்வாறு வளர்ந்திருக்கிறது! அதற்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள். இவர்கள் எப்போதும் கற்கால மனிதர்களாகவே தன்னைக் காட்டிக்கொள்வார்கள்.
சிலர் தனது ஸ்டேட்டஸில் தினந்தோறும் தாங்கள் சென்று வந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், தாங்களது பொழுதுபோக்குகள், விழாக்கள், வாங்கிய பரிசுகள், பாராட்டுக்கள் இவற்றையே அதிகமாக வெளிப்படுத்துவார்கள். இவர்கள் ஒருவகையான குழந்தைகள், குழந்தைகள் தாங்களை அப்படியே வெளிப்படுத்தாது! ஏற்றுக் கொள்ளாது. எனவே தன்னை அப்படியே அன்றைய நாளில் நடப்பதை வெளிப்படுத்தாமல் சிறப்பாக இருப்பதை மட்டுமே படம்பிடித்துக் காட்டுவார்கள். மற்றவர்களைவிட நாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் என்று தன்னை வெளிப்படுத்த நினைப்பார்கள். இது ஒரு வகையான குழந்தைத்தனம்.
காரணம் இவர்கள் மனநிலை பிறரைவிட உயர்ந்து நின்றால்தான் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என நினைப்பவர்கள் இது தப்பில்லைதான் ஆனாலும் சில நேரங்களில் இது உச்சம் பெறும்போது தன்னை மிஞ்சி நிற்பவர்களை ஏதாவது ஒரு வழியில் மட்டம் தட்ட நினைக்கும். அது சில நேரங்களில் போட்டி, பொறாமையைக்கூட உருவாக்கிவிடும்.
சிலர் எப்போதும் இரசனைக்குரிய காட்சிகளிலும், பாடல்களிலும் காலத்தைக் கழிப்பார்கள். இவர்கள் இசைப்பிரியர்களாக, அல்லது மலரும் நினைவுகளாக கற்பனை நாயகர்களாக இருப்பார்கள். இவர்கள் ரசனை உள்ளவர்களாக எண்ணிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் ஆழ்மனதில் ஆறாத காயங்களை மறைக்க, நடைமுறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமலும் அதனால் நாம் படும் வேதனைகள் பிறருக்குத் தெரியக்கூடாது என்றும் சிரித்த முகத்தோடு காட்சித்தருவது போன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரசித்துக் கொண்டும் இருக்கிறேன் என்பதுபோல் தன்னைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அழுகைகளுடன் கூடிய ஆனந்தம் என்பதுபோல அவர்கள் மனதிற்குள் அழுவது கண்ணீரில் தெரியாது.
சிலர் அரிதான காட்சிகளை எடுத்து தனது ஸ்டேட்டஸில் வைத்திருப்பார்கள். இவர்கள் இதன் மூலம் சொல்ல வருவது உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வதாக இருக்கலாம் அல்லது தனக்கு அது இன்பம் தந்தது அது பிறருக்கும் தரட்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். இவர்கள் தன் மகிழ்ச்சியையோ, துக்கததையோ உடனே பிறரோடு பகிர்ந்து கொள்வார்கள்.
சிலர் இலட்சியவாதிகள் இவர்கள் எப்போதுமல்ல, எப்போதாவது தனது கொள்கைக்கேற்ற காட்சி கிடைத்தால் துணிவுடன் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். இவர்கள் பிறரது விருப்பு வெறுப்புகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். விவசாயம், தொழிலாளர் வர்க்கம், பெண்ணுரிமை, அகச்சுதந்திரம் எனத் துணிவோடு பேசுவார்கள் இவர்கள் எப்போதும் போராளிகள்! இலட்சியவாதிகள்.
சிலர் தங்களுடைய ஸ்டேட்டஸில் விளம்பரங்களையே வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தாங்கள் விளம்பரங்கள் மூலம் தங்களுக்கும் விளம்பரம் தேடிக் கொள்ள ஆசைப்படுவார்கள்.
சிலர் ஆன்மீகக் கருத்துகளை, ஆன்மீகப் பாடல்களை மட்டுமே பதிவு செய்வார்கள். பொதுவாக ஆன்மீகம் என்பது ஒருவகையான போதை அதனை அதிகமாகக் கையிலெடுப்பவர்கள் எதையோ ஒன்றை மறைக்கிறவர்கள் அல்லது ஏதோ ஒன்றை மறக்கத் துடிப்பவர்கள். பிறரிடம் தமது தேவைகளைத் திணித்து அவற்றை நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் கேள்விகேட்க முடியாதபடி அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்று அதற்காக அவர்கள்போட வேண்டிய முகமூடி ஆன்மீகம் ஆகும். இவர்களை அவ்வளவு எளிதில் நாம் ஏமாந்து விடுவோம்.
சிலருடைய ஸ்டேட்டஸில் எப்போதும் அறிவுரைகள் இருக்கும் அது அவர்களுக்கு அல்ல எதிரில் இருப்பவர்களுக்கு மட்டும்தான். அறிவுரை சொல்லும் தகுதி தனக்கு இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள். பிறரைத் திருத்தவே எண்ணி தன்னைக் கெடுத்துக்கொள்வார்கள். ஒன்றைச் சொல்லும் முன் அதனை சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதனைக் கூட அறியாத முட்டாள்கள், தன்னை குருவாக நினைப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இதில் கோபம், வக்கிரம், குத்திக் காட்டல், போதனைகள் அதெல்லாம் யாருக்கு? முதலில் கண்ணாடி முன்னால் நின்று உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுங்கள் நீங்கள் திருந்;திவிட்டால் இந்த உலகமே திருத்தி விடும் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
பொதுவாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் புத்தி சொல்ல வேண்டாமே? ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு கலைநயத்தோடு செய்யுங்கள். அதனைக் காண்பவர்களுக்கு உள்ளத்தில் ஒரு சந்தோசக் காற்று சாரலாய் வந்து செல்லட்டும். அதில் மொத்தமாய் நனைந்து கண்களைமூடி காட்சிகளை உருவாக்கி சொர்க்கலோகத்தில் சுற்றி வரும் அனுபவத்தைப் பெறுவோம்! கொடுப்போம்! பேணிக்காப்போம்!
“தகுதிக்கு மீறி
ஆசைப்படுவது
தரித்திரம்”