11

Jul

2025

அரசாங்க அடியாட்கள்…

உலகமே உறைந்து போய் கிடக்கிறது. மனிதநேயம் மறுபடியும் கண்முன் செத்துக் கிடக்கிறது. காவல்துறை களங்கப்பட்டுக் நிற்கிறது. திருப்புவனம் கோவில் காவலர் அஜித் குமார் கொலைவழக்கு அனைவரையும் குலைநடுங்க வைக்கிறது.

அதற்காக அனைவரும் காவல்துறைக்கே களங்கம் வந்தது போல் அவர்கள் மீது விழுந்து பிராண்டி விடாதீர்கள்! ஏனென்றால் கருப்பு ஆடுகள் கலக்காத எந்தத்துறையும் இந்தியாவில் இல்லை. நீதித்துறையே நெஞ்சு வெடித்துக் கிடக்கிறது. ஆன்மீகத் துறை அம்மணமாய்த் திரிகிறது. கல்வித்துறை போக்சோ சட்டத்தில் புதைந்து கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சவக்குழியில் கிடக்கிறது. அரசியல் சாக்கடை என்பது அம்பலமாகிவிட்டது.

அப்படியென்றால் யார் இங்கு நேர்மையாளர்கள்? இங்கு பாதிக்குமேல் நேர்மையாளர்கள்தான். ஆனால் அவர்கள் பயந்தாங்கொள்ளிகள்! தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் தற்குறிகள். அதனால்தான் அயோக்கியர்களின் ஆட்டம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறது.

அஜீத் குமார் என்ற காவலாளி கொலைவழக்கு தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.அவரது கொலையில் நடந்தது என்ன? ஒரு பெண்ணின் கௌரவப் பிரச்சனைக்காக ஒரு காவலாளி கொல்லப்பட்டு இருக்கிறார். நிகிதா என்ற பெண்மணியின் நகைகள் காணாமல் போனதற்கா இவ்வளவு களேபரம்! இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஏழைகள் என்றால் இவர்களுக்குக் கிள்ளுக் கீரையா? என்ற பல கேள்விகள் எழும்புகிறது.

நிகிதா என்ற பெண் ஒரு மோசடிப்பேர் வழி என்கிறீர்கள்! அப்படியென்றால் ஏன் இந்நாள் வரை விட்டு வைத்தீர்கள்? அவர்கள் நகைகள் காணாமல் போகவில்லை! அப்படியென்றால் எதற்கு இந்த நாடகம்? அவர் F.I.R பதிவு செய்யவில்லை என்கிறீர்கள் பிறகு எதற்கு இந்த அதிகாரப் பாய்ச்சல். எதற்கு இந்த அடியாட்களின் அராஜகம்? காக்கிச்சட்டை போடாத காவாலிகளை கட்டவிழ்த்து விட்டது யார்?

ஒரு தவறினை அதன் முளையிலே கிள்ளி எறியாவிட்டால் அது அலையாகி, சுனாமியாகி எத்தனை பேரைக் காவு வாங்கி விடுகிறது. இப்போதாவது எண்ணிப் பார்க்கிறீர்களா? இந்தப் பெண்மணி கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்களாமே! அப்படியென்றால் இப்படிக் கருப்பு ஆடுகளை மேயவிட்டு மேய்ந்து கொண்டிருந்தவர்கள் யார்? இவர் உயர்பதவியில் இருந்தவர்களின் குடும்பத்தில் வளர்ந்தவர் என்று சொன்னார்கள். இந்தத்தறுதலைக்குத் தகப்பனாய் இருப்பவர் எப்படி சமூகத்தில் உயர்பதவியில் இருக்க முடியும்? அது அடங்கப்பிடாரியா? இல்லை இது அரசாங்கக் கோளாரா?.

கட்டிய கணவனையே கதற விட்டவள்! அதற்காக காவல் உயர் அதிகாரிகளை ஏவிவிட்டவள் எப்படி கண்ணியமுள்ள பெண்ணாக இருக்க முடியும்? அதற்கு ஏன் காவல்துறை காவடி தூக்க வேண்டும்? காவல் தெய்வங்கள் கறிசோறுக்கு அலைவது எவ்வளவு கண்ணியக் குறைவு. மோசடி வழக்கை முடித்து வைக்காமல் அவள் முந்தானைப் பிடித்து அலைந்து கொண்டிருந்தது யார்?

இவ்வளவு பரபரப்பிற்கு மத்தியிலும் ஒரு நம்பிக்கை மனதிற்குள் விழுந்தது என்றால் அது இளம் வழக்கறிஞர்கள் இருவர் இந்தக் கேசை எடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தை தன் குடும்பமாகப் பாவித்து மிரட்டலுக்கும், அரட்டலுக்கும் அஞ்சாமல் துணிவோடு போராடியதையும் அராஜகத்தையும் அத்துமீறலையும் வெளிக் கொண்டு வந்த கார்த்திக்ராஜா போன்றவர்கள் இளைய தலைமுறைக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதற்கு தமிழக முதல்வரே அமைச்சர் பெரிய கருப்பன் மூலமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தொடர்பு கொண்டு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது மக்களாட்சியை மனதில் நிறுத்தியது. ஆனால் நமது கட்சியால் ஏதும் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கை C.B.C.I.Dயிடம் ஒப்படைத்ததால் அத்தோடு விட்டுவிடாதீர்கள். அவர்களிலும் சில மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல.

குற்றவாளிகளில் தன்னைக் காத்துக் கொள்ள சாதியை கையில் எடுப்பார்கள். அதையே துணிந்து, தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் மதவெறியைத் தூண்ட வேண்டும். ஒரு குற்றவாளி எங்காவது தன்னை சாதியாக, மதரீதியாக வெளிப்படுத்தினால் மறுவிசாரனையின்றி மரண தண்டனையே கொடுக்கலாம். காரணம் இந்த மண்ணில் சாதியையும் மதத்தையும் ஒழித்து விட்டீர்கள் என்றால் பாதிக் குற்றங்கள் இங்கு காணாமல் போய்விடும்.

எத்தனையோ பேர் கண்ணீரோடு தாங்கள் பாதிக்கப்பட்டதை கூறும்போதும் இந்தக் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறதே! காவல்துறை கண்ணியமானவர்கள்தான் இங்கு பல நேர்மையான அதிகாரிகளும் உண்டு. அதனால் அவர்கள் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலாலும், கொடுக்கின்ற குடைச்சல்களாலும், தருகின்ற இடமாற்றங்களாலும் அவர்களில் சிலர் தடுமாறுகிறார்கள். சிலர் தடமாறுகிறார்கள்.

இந்த நீதி செத்துப் போகாமல் இருப்பதற்குக் காரணம் ஒரு மனிதன் செத்துப் பிழைத்து ஒரு பாத்ரூமில் இருந்து எடுத்த காணொளியைப் பயன்படுத்தி சாட்சியாய் மாற்றியது. அதில் நாட்டுக்குள்ளே நான்கு மிருகங்கள் அவரை நையப் புடைத்தது. எங்கோ இருந்து ஏவிவிடுகிறவர்களுக்கு வேலை செய்கிற தற்குறிப்படைகளாம்! மன்னிக்கவும் தனிப்படைகளாம்? யாரிடமோ நல்ல பெயர் வாங்க தன் பெயரைக் கெடுத்துக் கொண்ட தரங்கெட்ட மனிதர்கள். மனதிற்கு ஆறுதல் அவர்கள் காக்கி உடை அணியமாட்டார்களாம். அவர்கள் மட்டும் அணிந்தால் அந்தக்கறையை எந்தக் கங்கையில் போய் கழுவினாலும் அவர்கள் கர்மத்தைக் கழுவ முடியாது.

ஏவி விட்டவுடன் கடிக்கவரும் இருகால் உள்ள……. இதயம் இல்லாதவர்கள் மட்டுமல்ல முன்னால் என்ன நடக்கிறது என்று தெரியாத மூளை இல்லாதவர்கள். காவல்துறை எங்கள் நண்பன் என்று சொன்னவர்களே உங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க வேண்டுமென்றால் ஆறறிவுள்ள மனிதர்களை அதிகமாகப் பயன்படுத்துங்கள் ஏவிவிட்டவுடன் பாய்கின்ற நாய்கள் எதற்கு? அவைகளைக் கொஞ்சம் கட்டிப்போடுங்கள் மோப்பம் பிடிக்கட்டும் அது கடித்துவிடாதபடி மக்களைக் காப்பாற்றுங்கள்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளே வெளியே வாருங்கள். உங்களுக்கு முன் இருக்கும் கூண்டுகளை உடைத்துக் கொண்டு வாருங்கள். ஒரு பொண்ணுக்காக எத்தனை பொறுக்கிகள் வேலை செய்திருக்கிறார்கள் எனக் கண்டறிந்து நெருப்பிலிடுங்கள். கறுப்புப் பணங்களைத் தேடுவதைவிட உங்களோடு குடியிருக்கும் கருப்பு ஆடுகளின் காக்கிச் சட்டைகளைக் கழற்றுங்கள். குற்றவாளிகளை வெளியில் தேடாதீர்கள் கூட இருப்பவர்களை எடுங்கள் இவர்களால் வளர்ந்தவர்கள்தான், வளர்த்துவிட்டவர்கள்தான் இந்தப் பாரதத்தில் பரவிக் கிடக்கும் பயங்கரவாதிகள்.

அரசியல்வாதிகளின் அடிமைகளை அப்புறப்படுத்துங்கள். உயர் பதவிக்காய் பாதம் கழுவுபவர்களை உதறித்தள்ளுங்கள். மொட்டைக் கடிதம் எழுதுபவர்களின் கட்டை விரல்களை வெட்டி எறியுங்கள். உடனிருப்பவர்களை காட்டிக் கொடுப்பவர்களையும் அதிகாரிகளின் அந்தப்புரத்திற்கு ஆள்பிடிப்பவர்களையும் காரித்துப்புங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அது உங்களுக்கு உரியது அதனைக் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள் தவறினால் கையில் துப்பாக்கியை ஏந்துங்கள்.

இது பாரததேசம் இராமனுக்கு மனைவியாக இருந்தாலும் தன் தூய்மையை நிரூபிக்க சீதை தீயில் இறங்கிய தேசம். உங்கள் களங்கத்தை நீங்களே கழுவ உடனே களத்தில் இறங்குங்கள். நம் பொறுப்புகளைப் புதுப்பிக்க மனச்சாட்சி என்ற நெருப்புக்குள் இறங்குவோம். இந்தத் தேசத்திற்கு எந்தப் பணியில் இருந்தாலும் களங்கமில்லாதவர்கள் என காட்டி நிற்போம் பெண்ணையும், மண்ணையும் அழித்துவிடாதீர்கள். எந்தப் பெண்ணாலும் நீங்கள் அழிந்து விடாதீர்கள்.

நிகிதாவிற்கு நெருப்பு அவரே வைத்துக் கொண்டதுதான். அதனை நெருப்பு என்று தெரியாமலேயே அனைவரும் வளர்த்துவிட்டார்கள். இப்போது அவர் எரிந்த கொண்டு இருக்கிறார். மற்றவர்கள் குளிர் காய்கிறார்கள். அந்த நெருப்பு உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

“நீ பற்ற வைத்த நெருப்பு
தன்னை வளர்த்துக் கொள்ள
உன்னைக் கேட்டு நிற்கும்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES