10
Oct
2025

“வே” என்று தமிழில் ஒரு எழுத்து உண்டு இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த எழுத்தின் பொருளும் பயனும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ் ஒரு கடல் என்பார்கள். அதில் ஒரு துளி இந்த ‘வே’ என்ற எழுத்து இதற்குப் பல புலவர்கள் பல காலங்களில் பல விளக்கங்களைச் சொல்லி இருக்கிறார்கள். சில காலத்தால் அழிந்து விட்டது. சில காவியமாகியும் அழிந்திருக்கிறது. சில கதைகள் கட்டுரைகளாகி மறைந்திருக்கிறது. இருப்பினும் எனக்குக் கிடைத்த மயிலிறகின் சிறு தோகையை எடுத்துக் கொண்டு இதுதான் மயில் என்று சொல்லாமல் இதுவும் மயிலின்… என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
“வே” என்ற சொல்லுக்கு மறை அல்லது மறைவாய் இருத்தல் என்று பொருளாகும். அதாவது “வே” என்றால் மறை அதாவது வேதம் என்று பொருள். வேதத்தில் சொல்லப்பட்ட அத்தனையும் மறைவாய்த்தான் இருக்கும். இதனை அனுபவிக்க மட்டுமே முடியும் ஆராயக்கூடாது. இதனை நிருபிப்பதற்காக ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. அதில் பலனும் இருக்காது.
நமக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது அது கண்ணுக்குத் தெரியாமல் நம்மை ஆட்கொண்டு நம்மை வழிநடத்துகிறது. வேதத்தில் இருக்கின்ற வாழ்கின்ற கடவுள்கள் அனைவரும் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனை அனைவரும் புரியும்படியாகக் கூற வேண்டுமென்றால் வேர்களை எடுத்துக் கொள்வோம். இவை அனைத்தும் நம் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் பரவி நிற்கும். ஆனால் நம் கண்முன் தெரிகின்ற மரத்தை அதுதான் தாங்கி நிற்கும். அதற்குத் தானே தண்ணீரை எடுத்துச் சென்று அதுதான் அந்த மரத்தையே வாழ வைக்கும். வேர்கள் எப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து மரத்தைத் தாங்கி நின்று வாழ வைக்கிறதோ அதுபோல இறைவன் வேதங்களில் மறைந்து நின்று நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான். வேர்கள் மண்ணுக்குள் மறைந்து கிடப்பது போல மனதிற்குள் மறைந்து கிடப்பவன் இறைவன்.
வேடன், இவன் காட்டுக்குள் சென்று வேட்டையாடச் செல்லும் மனிதன் மறைந்து இருந்து தாக்குவதால் அவனை வேடன் என்கிறோம். நேருக்கு நேராக மோதுபவர்களை வீரர்கள் என்று போரில் சண்டையிடுபவர்களைப் போர் வீரர்கள் என்று அழைப்பார்கள். ஆனால் பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ தெரியாமல் பதுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு வேட்டைப் பொருளைக் கைக் கொள்வதால் இவர்கள் வேடன் எனப்படுகிறார்கள்.
விலங்குகளில் வேங்கையானது பதுங்கிப் பதுங்கிப் பாயும். சிங்கத்தைப் போல் கர்சித்து வேட்டையாடுவதில்லை. மறைவாகப் பதுங்கி ஊர்ந்து சென்று பாய்வதால் இதனை வேங்கை என்கிறோம். வேட்டை என்பதும் இரைக்குத் தெரியாமல் வலையை வைத்தோ, அல்லது எலிப்பொறிக்குள் வைத்தோ அல்லது தூண்டில் தெரியாமல் புழுவுக்குள் மறைத்து வைத்து வேட்டையாடுவதால் இதனை வேட்டை என்கிறோம். இதன் பொருள் எல்லாம் மறைத்து வைத்திருத்தல் என்பதுதான்.

வேலி என்பதும் சுற்றிலும், சுவர்களால், தட்டிகளால் மரம் செடி கொடிகளால் மறைக்கப்பட்டு அந்த மறைவிற்குள் இருப்பதால் அதனை மறைத்து வைத்திருப்பதால் அதற்குப் பெயர் வேலி எனப்படும் தொடக்கக் காலத்தில் மனிதன் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான் குகைக்குள் இருளாய் இருந்த காரணத்தால் அதே போன்று தட்டிகள் அமைத்து வெயிலிலும், மழையிலும் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கூரை அமைத்தலை வேய்தல் என்கிறோம். பொதுவாக மனிதன் மறைவாய் இருக்கும் நோக்கத்திற்காக அதாவது உடைமாற்ற உபாதைகளைக் கழிக்க மறைவை ஏற்படுத்த கூரை அமைத்தலே வேய்தல் எனப்படும்.
வேது பிடித்தல் என்ற ஒரு பழக்கம் நம் தமிழர்களிடம் உண்டு அதாவது பல்வேறு மூலிகைகளைப் பறித்து வந்து அதனை வெந்நீரில் போட்டு அதன் ஆவியைத் தன்னை மூடிக்கொண்டு ஆவிபிடித்து நமது உடம்பிலுள்ள சளி, இருமல், தலைவலி, உடம்பு வலி போன்றவற்றிற்கு மருத்துவ நிவாரணியாக தன்னை மறைத்துக் கொண்டு பிடிப்பதை வேது பிடித்தல் என்கிறோம்.
வேய்குழல் என்பது பெண்களின் நீளமான கூந்தல், பெண்கள் தங்கள் கூந்தல்களை முழங்கால் வரை வளர்த்தெடுப்பார்கள். அதாவது தொடக்கக் காலத்தில் ஆணாதிக்கம் நிறைந்த இந்தச் சமூகத்தில் பெண்களை அவமானப்படுத்த நினைக்கும் ஆண்கள் அவர்களை நிர்வாணப் படுத்துவார்கள். அவ்வாறு எதிரிகள் பகைவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்த எண்ணும்போது பெண்கள் தங்களின் கூந்தலை முன்பக்கமாக சரியவிட்டு மார்பகத்தை மறைத்து முன்பகுதி முழங்கால் வரை ஆடைபோல் படரவிட்டு தன் அங்கங்களை மறைத்துக் கொள்வதால் அதனை வேய்குழல் என அழைக்கிறோம்.
வேட்டி என்ற ஆடையும் உங்களுக்குத் தெரியும் சமுதாயத்திற்குள் நாம் பழகும்போது பிறரிடமிருந்து தனது பாகங்களையும் உடலுறுப்புகளையும் மறைத்து வைத்து தனது மானத்தைக் காப்பதால் அதனை வேட்டி என்கிறோம்.

வேதம் என்பதும் மறைபொருள் அதாவது ஒவ்வொன்றும் தத்துவங்கள் வாழ்க்கைக்குத் தேவையான படிக்கட்டுகள் அதனை நாம் நம்ப வேண்டும் அது மறைந்து இருக்கிறது ஆராயக்கூடாது. அனுபத்தால் அனுபவிக்க வேண்டும் என்பதால்தான் இதனை வேதம் என்கிறோம்.
ஒரு பொருள் தன் கண்முன் தோன்றி அது இயக்கத்தால் நம் கண்ணை விட்டு மறைவதைக் கூறுவது வேகம் எனப்படும். வேகமாகச் செல்கின்ற எதுவும் இயங்கி அந்த இடத்தில் இருந்து மெல்ல மெல்ல நம் கண்ணை விட்டு மறைவதைத்தான் வேகம் என்கிறோம்.
வேம்பு பார்ப்பதற்கு பசுமையாக இருக்கும். முத்துக்கள் வெண்மையாக இருக்கும். பழத்தை சுவைக்கும்போது இனிப்புக் கூடத் தென்படும் ஆனால் அவற்றிற்குள் இவற்றில் எந்த சம்பந்தமும் இல்லாமல் முழுமையாகக் கசப்பு மறைந்து இருப்பதால் அதற்கு வேம்பு எனப்படும்.

கண்ணுக்குத் தெரியாத இறைவனிடம், மனதிற்குள் வைத்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குப் பெயர் வேண்டல். கண்ணுக்குத் தெரியாத இறைவனை கண்முன் கொண்டுவருவதும் யாருக்கும் தெரியாமல் உறவாடவும் நாம் நடத்தும் யாகத்திற்குப் பெயர் வேள்வி எனப்படும்.
வே என்றால் எரியும், நெருப்பு, இது விறகு, எண்ணெய், பொருட்களில் மறைந்திருக்கிறது பற்ற வைத்தவுடன் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் எரியும் நெருப்பை “வே” என்றும் வேக்காடு என்றும் அழைக்கிறோம்.
யாருக்கும் தெரியாமல் எதுவென்றும் புரியாமல் மனதிற்குள் இருக்கும் சோகம் நம்மை வாட்டி எடுப்பதற்குப் பெயர்தான் வேதனை என்கிறோம். சோகம் நம்மை வாட்டி எடுப்பதற்குப் பெயர்தான் வேதனை என்கிறோம். வேதன் என்றால் கடவுள் மறைவாய் இருப்பவன் வேதாளம் என்றால் ஆவியாய் மறைவாய் இருப்பது! வேதாகமம் என்பது மறைபொருளை உள்ளடக்கியது. வேதியியல் ஆராய்ச்சியே இரண்டு மூன்று பொருட்கள் மறைந்து கரைந்து புதிய வடிவம் தருவதுதானே!
வேய்குழல் என்றால் புல்லாங்குழல் கண்ணுக்குத் தெரியாத காற்று அதில் உருண்டோடி வந்து காதுகளுக்கு மட்டும் கேட்கும் இசையைக் கொடுப்பதால்தான் அதன் பெயர் வேய்குழல்.

வேவு பார்த்தால் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் நம்மை கண்டுபிடிக்க முடியாமல் மறைந்து இருந்து அவர்களைக் கண்காணிப்பது வேவு பார்த்தல் எனப்படும்.
வேளாண்மை என்பது மண்ணுக்குள் விதையை மறைத்து வைத்து பயிர் செய்து சாகுபடி செய்வதாகும். வேனல் என்பது வெப்பம் சூரிய ஒளியில் நாம் செல்லும் போது அது நமக்கே தெரியாமல் நமது உடம்பிற்குள் சென்று வியர்வையை வெளிக் கொணர்வது உடம்பு சூடாவது உள்ளுக்குள் புழுக்கமாக மாற்றுவதால் அதனை வேலை என்கிறோம்.
வேசம் தனது உண்மையான முகத்தையோ, குணத்தையோ மறைத்துக் கொள்பவர்களை வேடதாரி என்கிறோம். தனது நண்பன் உறவுகள் கூட கண்டுபிடிக்க முடியாமல், போட்டி பொறாமை, வஞ்சகம், சூது போன்றவற்றை மனதில் மறைத்து வைத்து உடனிருப்பவர்களைத் தக்க நேரத்தில் ஒழித்து விடுபவர்களை வேடதாரி என்கிறோம். எனவே “வே” என்ற ஒரு எழுத்து மறைந்திருத்தல், மறைக்கப்பட்ட பொருள் என்ற பொருள் உள்ள நம் இனிய தமிழைக் கொண்டாடுவோம்.
“பிறர் மகிழ்விற்காக
வேடமிட்டால் நாடகம்
உன் தேவைக்காய்
நடித்தால் பாதகம்”