14

Sep

2023

கூட வாழ்ந்த குலதெய்வம்…

சில காலங்களுக்கு முன்னால் அலைபேசியில் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தது என்னுடைய நண்பனின் மனைவி திடிரென்று இறந்து விட்டார்கள் என்று. நானும் உடனே சென்று துக்கம் விசாரிக்க முடியவில்லை. அவனும் அவனது மனைவி மீது அதிகமாக அன்போ, அரவணைப்போ மரியாதையோ பெரிதாக இருந்ததுபோல் எனக்குத் தெரியவில்லை. அதனால் அவனுக்கு பெரியதாக ஒரு ஆறுதல் தேவைப்படாது என்று நானும் எண்ணிக் கொண்டேன். இதனால் சில மாதங்கள் கழித்து வாய்ப்புக் கிடைக்கும் போது அவனது இல்லம் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என் உயிரையே உலுக்கி விட்டது. ஏனென்றால் அவன் இப்போது என் நண்பனாகவே தெரியவில்லை உடைந்து உருக்குலைந்து எலும்பும் தோலுமாக எனக்கு முன்னே ஒரு ஜீவன் நின்றது.! அவ்வளவு தான்.

என்னைக் கண்டவுடன் கட்டிப்பிடித்து கதறி அழுதான். அவன் மனைவியை நினைத்து உருகினான், புலம்பினான் என்னால் அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவன் அழுகை என் வாயையும் அடைத்துவிட்டது. நண்பா உதிரும் வரை முடியின் அருமை தெரியவில்லை. அழகை இழக்கிறேன். அவிழும் வரை ஆடையின் அருமை தெரியவில்லை. மானத்தை இழக்கிறேன். குறையும் வரை பார்வையின் அருமை தெரியவில்லை குருடனாகிறேன். அவள் இருக்கும் வரை அவளின் அருமை தெரியாமலேயே இருந்து விட்டேன். அதனால் இப்போது நான் நடைபிணமாக…

நண்பா துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் என்னை அழச்சொல்கிறார்கள். அவள் இருக்கும் வரை அவள் என்னை அழ விட்டதே இல்லை. கண்ணீரைத் துடைக்க அவள் கைகள் இல்லாதபோது கலங்கி நின்றால் ஆறுதல் சொல்வது யார்? யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்களே?!.

வேலை இல்லாமல் தவிக்கும்போது! பலர் என்னை வெட்டிப்பயல் என்று ஒதுக்கும்போது! என் உறவினர்களே நல நட்டத்திற்கு அழைக்காத போது! என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னை ஒரு பொருட்டாக எண்ணாதபோது! பணம் இல்லை என்று பரிகசிக்கும்போது! குழந்தை இல்லை என்று குத்திக்காட்டியபோது! உறவுமுறை செய்யவில்லை என்று ஒரங்கட்டும்போது! இவனால் என்ன ஆகப்போகுது என எள்ளி நகையாடும்போது! விடுங்க பார்த்துக் கொள்ளலாம் என்று ஒற்றை அம்பினால் சுக்கு நூறாக்கியவளே… இப்போது நொறுங்கிப் போய் கிடக்கிறேன் என் நெருக்கமாக நீ இல்லையே…

அவள் இறந்த அன்று அவளுக்கு மாலையிட எத்தனையோ பேர் வந்தார்கள். பேராசிரியர் என்றார்கள், பெற்ற அன்னை என்றார்கள். வழிகாட்டி என்றார்கள் வாழ்வளித்தவர் என்றார்கள், அவர்களுடைய அழுகை அவளது பாசத்தை எனக்குள் ஆழமாய் பதிந்தது, பதித்தது. இவர்களெல்லாம் என் மனைவியை எப்படியெல்லாம் பார்த்திருக்கிறார்கள்! நானோ அவளை வேலைக்காரியாக… சமையல் காரியாக இச்சை எழும்போது அதைத் தீர்க்கும் விபச்சாரியாக… ச்சே.. எனக்கே என்னைப் பார்க்கும்போது அசிங்கமாக இருக்கிறது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? இந்தக் கழுதையோடுதானே அவள் இது நாள் வரை காலம் தள்ளியிருக்கிறாள்.!

இடிவிழுந்ததுபோல் நான் தவிக்கின்ற போதெல்லாம் என்னை மடியில் தாங்கி, எல்லாம் சரியாகப் போகும்! என்று கூறிவிட்டு இப்போ தனியாய் போனவளே! நீ ஒற்றை ஆளாய் என் அருகிலிருக்கும்போது உலகமே என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன்! இன்று ஆயிரம்பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் நான் அனாதையாகத் தான் நிற்கிறேன்.! அம்மாவை இழந்து துடிக்கின்ற குழந்தைப்போல் இப்போது மனைவியை இழந்து தவிக்கின்றேன். பணிகளைச் செய்ய ஆயிரம்பேர் இருந்தாலும் பரிவோடும், பாசத்தோடும் செய்பவள் நீ மட்டும் தானே!

நான் கும்பிடுவதற்காக ஒரு நாளும் கோயிலுக்கும் போனவனல்ல ஆனால் என் மனைவி கூப்பிட்டதற்காகக் கோவிலுக்கும் போனவன். நான் சாமி படத்திற்கு முன் வணங்கியதில்லை இப்போது என் மனைவியே சாமியான பிறகு அவளை வணங்கி விட்டுத்தான் எங்கும் போகிறேன். அவள் வாழும்போது அவளை வாழ்த்தியது கூடக் கிடையாது திட்டியிருக்கிறேன்;. என் சாமியை நான் எவ்வளவு சங்கடப்படுத்தியிருக்கிறேன். என்னோடு அவள் இணையும்போதுதான் அவள் இல்லற வாசியாகிறாள். இல்லையென்றால் வீட்டை இழந்து பெற்றோரை மறந்து உறவுகளைக் களைந்து அத்தனையும் துறந்து எனக்காக வந்த அந்தத் துறவியைத்தான் நான் தொட்டுத் தாலி கட்டியிருக்கிறேன். அவளைத் தொட்டதால்தான் நான் இன்றும் தூயவானாகியிருக்கிறேன்.

இப்போது நான் பட்டு உடை அணிந்தாலும் நீ தொட்டுக் கொடுத்த உடைபோல் வருமா? சட்டையை மட்டுமல்ல என்னையும் அழுக்கான போதெல்லாம் சுத்தம் செய்தவளே இப்போது நீ செத்துப் போய்விட்டாயே! நான் என்ன செய்ய? உனக்கு மாலை இட்ட போதெல்லாம் உன்னைப் பற்றி புரிந்து கொள்ளாதவன் உன் படத்திற்கு மாலைபோடும் போது புரிந்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

என்னோடு வாழும் போது உன்மேல் எனக்கு எத்தனை சந்தேகங்கள்;! யார் யாரிடமெல்லாமோ உன்னை பேச விடாமல் தடுத்திருக்கிறேன்.! அந்தப் பாவத்திற்காக இன்று என்னோடு பேசுவதற்கே ஆளில்லாமல் ஊமையாக ஊருக்குள் திரிகிறேன். நம் வீடு மண்ணால் கட்டப்பட்டதல்ல அன்பே அது உன்னால் கட்டப்பட்டது. நீ இருக்கும் வரை நான் இளவரசன். இப்போது ஒரு குட்டிச் சுவருக்குள் கிடக்கும் கழுதைபோல் கிடக்கிறேன். சூதாட்டத்தில் மனைவியை இழந்த தர்மனே! நீ எனக்குச் சொல்லியிருக்கக் கூடாதா? மனைவியின் அருமையை! நீ சொல்லி இருந்தாலும் நான் என் மமதையில் அதை மறுத்திருப்பேன். என் மனைவியின் பிரிவுதான் எனக்கு மரண குழியை காட்டியது.

எப்போதாவது திருநீறு பூசி விடுபவளே! இப்போது எப்போதும் திருநீறு அணிந்தே இருக்கிறேன். காரணம் இது உன்னை எறித்த சாம்பல். ஆகவே எப்போதும் என்னோடு இருக்க உன் சாம்பலைப் பூசிக் கொள்கிறேன். தட்டியவுடன் கதவைத் திறக்கவில்லை என்று திட்டியிருக்கிறேன். இன்று கதவைத் திறக்கவும் ஆளில்லை, பூட்டவும் வழியில்லை பாழடைந்த மண்டபமாய் நாம் வாழ்ந்த வீடு.

ஒரு பெண் ஆணுக்குக் கொடுக்கின்ற உயர்ந்த பட்சத் தண்டனையே அவனை விட்டு விட்டு இறந்து விடுவதுதான். இது ஆயிரம் ஆயுள் தண்டனைக்கும் நூறு மரண தண்டனைக்கும் சமம். சாபத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். என் அனுபவத்திலும் ஆழ்ந்த வருத்தத்திலும் எனக்கு ஆறுதல் சொன்ன, உதவி செய்த உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் என் மனைவியை இழந்து நான் திண்டாடுவது போல் நீங்கள் இல்லாமல், அவள் இருக்கும்போதே நீங்கள் அவளைக் கொண்டாடுங்கள். நம் மனைவி நமது உயிர்போன்றவள் அவள் இருக்கும்வரை நாம் அதனைப் பற்றி உணர்வில்லாமல் இருக்கிறோம். அவள் பிரிந்த பிறகுதான் நாம் நடைபிணமாகிறோம் என்றான். உடனே என் நண்பன் இதைபோய் மனைவி இல்லாத உன்னிடம் சொன்னேனே.. உனக்கெங்கேப் புரியப்போகிறது? என்றான் அவனுக்கு என்னால் ஆறுதல் சொல்ல வழி தெரியவில்லை! ஆனால் அவன் வலி புரிந்தது திகைத்து நிற்கிறேன். இதுதான் மனைவியா? இதற்கும் மேலயா?

“அவளோடு நான்
கண்டுகொள்ளவே இல்லை
அவள் நினைவோடு நான்…
வாழப்பிடிக்கவில்லை
வாழ்விலும் பிடிப்பு இல்லை”

ARCHIVES