29

Oct

2022

சகிப்புத்தன்மை…

இந்தியாவைப் பொறுத்த வரையில் எப்போதுமே பொறுமையின் சிகரமாய் பூமியில் சகிப்புத்தன்மை உள்ள நாடாகவே திகழ்ந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகவே இருந்திருக்கிறது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம் அதனால் அது பல்வேறு மொழி, இனம், நிறம், குணம் என இருந்தாலும் கருத்தில் ஒன்றுபட இருந்து வாழ்ந்ததனால் இவை சகிப்புத்தன்மை என்கிறேன்.

ஏட்டிலும் பாட்டிலும் இன்னும் சொல்லுவது புத்தன், இயேசு, காந்தி என்பார்கள் இவர்கள் பொறுமையின் சிகரம் அதிலும் இயேசு தன் போதனையில் சொல்லுவார். “ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு” என்பார். அதன்படி வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். இவர்கள் விதைத்த விதைகளும் இவர்கள் வாழ்ந்த நடத்தையும் அவர்கள் பதித்த பாதச் சுவடுகளும் இன்றளவும் சகிப்புத்தன்மை நாடு என்று சொல்லிக்கொள்ள முடிகிறது.

எந்த நாட்டிலும் புலிகளும், சிங்கங்களும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏறக்குறைய 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வெளியேறிவிட்டதாக ஒரு காலக்கோடு கூறுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் சிங்கமும் வாழ்கிறது புலியும் வாழ்கிறது. ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமல் இரண்டு வலிமை வாய்ந்த மிருகங்கள் ஒன்றை விரட்டி விடாமல் தனக்கெனத் தனிப்பாதை அமைத்துக் கொண்டு ஒரே இராச்சியத்தில் இரண்டு இராஜாக்கள் ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி சாத்தியமாகும் என்று கண்டவர் வியக்கும் அளவிற்கு வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சிங்கம் வாழும் காட்டில் சிறுத்தையும் இருக்கிறது. மருண்டு ஓடும் மான்களும் இருக்கிறது. சிங்கம் புலி பசிக்கும் போதெல்லாம் மான்களை ருசிக்க ஆரம்பித்து விடுகின்றன என்பதற்காக எந்த மான்களும் தன் மனைகளை மாற்றிக்கொள்ளவில்லை. மறுவாழ்விற்காக யாரிடமும் மண்டியிட வில்லை அவரவர் பாதை அவரவருக்கு வேதம். தனது வாழ்க்கையை நினைத்து எந்த மான்களும் வேதனைப்படவுமில்லை. விதியை நினைத்து வீடுகளைக் காலி செய்யவுமுமில்லை.

மருத மரத்தின் பொந்துகளில் மகிழ்வுடன் அழகிய பஞ்ச வர்ணக் கிளி கூடு கட்டிக் கொஞ்சுகிறது. அதன் கிளைகளிலே காகம் கூடுகட்டி வாழ்கிறது. அழகிய கிளியைக் கண்டு கருமை நிறக் காகம் புறம் பேசியதில்லை. பொய்க் கோபம் அடைந்ததில்லை இல்லாத நேரத்தில் அதன் குஞ்சுகளை அலகால் கொத்திக் கிழித்ததில்லை. தான் அவ்வாறு இல்லையே என்று தாழ்வு மனப்பான்மை கொண்டதில்லை பொறாமையால் புழுங்கியதில்லை. பொறுக்க முடியாமல் கொதித்ததுமில்லை அவரவர் வாழ்வில் அவரவர் மகிழ்ந்து வாழ்கிறார்கள்.

கிளையில் கூடுகட்டிய காக்கையின் கூட்டில் குஞ்சுகள் பொறிக்க குயில்கள் காக்கையைக் கேட்டதில்லை. அது கூடு கட்டுவதற்கு ஒரு குச்சியை எடுத்துக் கொடுத்ததுமில்லை. காக்கைக்கு குயிலின் முட்டைகள் என்று தெரியாமல் போனதுமில்லை குயிலின் திருட்டுத்தனம் காக்கைக்கு தெரியாமலும் இல்லை. இருந்தும் குயில் குஞ்சுகளை தன் குஞ்சாக வளர்த்து இந்தப் பரந்த உலகிற்கு அது பகிர்ந்தளித்துள்ளது. இதைவிடக் கொடுமையான விசயம் என்னவென்றால் குயில் கொடுமையைச் செய்யும் அதாவது காக்கையின் கூட்டில் அது ஒரு முட்டையிடும் போது காக்கைக்கு கணக்குத் தெரியக் கூடாது என்று தன் முட்டைக்குப் பதில் காக்கையின் முட்டையை அதன் காலால் எட்டி உதைத்துவிடும்.

குயில் எத்தனை முட்டை இருக்கிறதோ அத்தனை காக்கையின் முட்டையை குயில் உடைத்துவிடும் இருந்தும் காக்கையின் சகிப்புத்தன்மை குயிலினை வளர்த்தெடுத்து கூவ வைக்கும். காக்கைக்கு மட்டும் சகிப்புத்தன்மையில்லாது போனால் குயிலின் குரலை இந்தப்பூமி கொண்டாட முடியாது.

விவசாயம் செய்யும் ஒருவன் வயலை நோக்கினால் எப்போதும் தண்ணீர் தேவைப்படும் நெல் வயலிலும் எப்போதாவது தண்ணீர் தேவைப்படும் பனைமரம் கரையிலும் விளையும். தண்ணீர் அதிகம் என்று பனை பதறியதுமில்லை. பனைமரம் பக்கத்தில் இருக்கிறது என்று நெல் புலம்பியதுமில்லை. ஒரே வீட்டில் பால் தேவைக்காக மாடுகள் வளர்ப்பார்கள். இதில் சிவனின் அடையாளமாக பசுவும் வளரும் எமனின் வாகனமாக எருமையும் வளரும் இருந்தும் அவை இரண்டும் முட்டிக்கொண்டதில்லை உலகில் அதிகம் மழை பொழியும் சிரபுஞ்சியும் இங்குதான். ஒருவரும் வாழமுடியாத தார் பாலையும் இங்குதான். இந்தியாவில் தான் உயர்ந்த இமயமலையும் உண்டு. யாவரும் கடக்கமுடியாத வங்கக்கடலும் உண்டு ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டாலும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டதே இல்லை இப்போது சொல்லுங்கள் இந்தியா சகிப்புத்தன்மை நாடுதானே.

ஆனால் மனிதனுக்கு மட்டும் அது இல்லவே இல்லை மதத்தால் ஒருவனை ஒருவன் பழிக்கிறான். சுhதியால் ஒருவன் ஒருவனுக்குச் சதி செய்கிறான். ஆண் பெண்ணை அவமதிக்கிறான் பணக்காரன் ஏழையை பரிகாசிக்கிறான். தலைவன் தொண்டனின் தலையை அறுக்கிறான். நடிகன் ரசிகனை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுகிறான். தண்ணீருக்காகத் தடியடி நடத்துகிறான். ஆட்சி அமைக்க அராஜகம் செய்கிறான். தன்னை உயர்த்தப் பதுக்குகிறான், ஒதுக்குகிறான் காரியம் முடிய காட்டிக் கொடுக்கிறான். கச்சிதமாய் முடிக்கக் கூட்டிக் கொடுக்கிறான். ஏமாளியை ஏய்க்கிறான், எதிர்த்தவனை அழிக்கிறான் தனக்குப் போட்டியாகத் தலையெடுத்தால் அவன் தலையை எடுக்கிறான், துடிக்கிறான், நடிக்கிறான் தூங்கும்போதே இரத்தம் குடிக்கிறான் ஆகவே மனிதனை விட்டு விட்டுப் பார்த்தால் இந்தியா சகிப்புத்தன்மை நாடே ஆகும்.

“வரைமுறை இருக்கு மட்டும் எங்களிடம் வன்முறை இல்லை
வன்முறை வந்தபிறகு வரைமுறை இல்லை”

ARCHIVES