01

Apr

2022

சத்தமில்லாத யுத்தம்…

சத்தமில்லாத யுத்தம் ஒன்று சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் கல்விதான். கல்வித்துறைதான் கொரோனா நோயினால் நசுக்கப்பட்டு இன்று நஞ்சாகி நெஞ்சில் உறைந்து நிற்கிறது. இதனால் பெற்றோர்கள் கடுகடுக்க ஆசிரியர்கள் பரிதவிக்க மாணவர்கள் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள் ஏனென்றால் கடந்த இரு வருடங்களும் கஷடப்படாமல், கல்வி நிலையம் வராமல் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள். இந்தத் தகுதியில்லாத வெற்றியில் மாணவர்கள் சந்தோசம் அடைந்ததால் தகுதியுடைய வெற்றி அடைய அவர்கள் தயாராக இல்லை.

சங்கடம் இல்லாமல் சந்தோசமடைய வேண்டும் தகுதியில்லாமல் தேர்ச்சி அடைய வேண்டும் உழைப்பு இல்லாமல் ஊதியம் வேண்டும் களமாடாமல் வெற்றியை ருசிக்க வேண்டுமென்று அத்தனை மாணவர்களும் ஆசைப்படுவதால் கல்வித்துறையில் நேர்மை என்னும் அச்சு முறிக்கப்பட்டுவிட்டது. இதனை எப்படியாவது சரிக்கட்டி விடலாம் என அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தாலும் மாணவர்களின் மனது மட்டும் இதற்கு ஒத்திசைந்து வருவதில்லை.

இரண்டு ஆண்டுகளில் எந்தக் கவலையும் இல்லாமல் கவலை தரக்கூடிய கல்வியும் இல்லாமல் சுதந்திரப் பறவைகளாக மாணவர்கள் சுற்றித் திரிந்து வந்ததால் இன்றையக் கட்டுப்பாடுகளை மீறுவதையே அவர்கள் கடமையாகக் கருதுகிறார்கள். கரும்பு தின்னக் கூலியாக இடையில் Online Class என்ற பெயரில் அலைப்பேசியும் கிடைத்ததால் விரும்பிய படி பொழுதினைப் போக்க வேண்டிய வசதியும் கிடைத்தது. மாணவர்கள் தறிகெட்டுத் திரிந்தார்கள். நெறி கெட்டு அலைந்தார்கள். கல்வித் துறை தண்டவாளம் தவறிய இரயிலைப் போல திசை மாறித் திரிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனாவின் கொடிய நோய்த் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சூதாட்டத்தில் விட்டதைப் பிடிக்க விறுவிறுப்பாய் ஆடுவது போல் பெற்றோர்களும் அரசும் வற்புறுத்த ஆசிரியர்கள் பள்ளிக்குத் திரும்ப மாணவர்கள் மட்டும் கல்வியை மதிக்காமலேயே இருக்கிறார்கள்.

இந்தாண்டும் கொரோனா வரும் எப்படியும் நாம் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அதிகமான மாணவர்களுக்கும் அவர்களை நம்புகின்ற பெற்றோர்களுக்கும் இருந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற எண்ணிக்கை குறைந்தது, வருகின்ற மாணவர்களும் முடி சரியில்லாமல், முழி சரியில்லாமல், வார்த்தைகளில் தெளிவில்லாமல், பேசக்கூடாத, கேட்கக் கூடாத வார்த்தைகளைக்கூட செவியில் கேட்கும்படி பேசித் திரிந்தார்கள்.

இது ஒரு புறம் இருக்க, இதுதான் சமயம் என்று கல்லாக்கெட்டுகிற பள்ளிகளும் இருக்கிறது. கொரோனாவில் வேலை இழந்து நிற்பவர்களின் குரல் வளையை நெறித்தாவது பணத்தைக் கட்டு இல்லை என்றால் உன் குழந்தையின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்று கட்டப் பஞ்சாயத்துச் செய்யும் கல்விக்கூடங்களும் முடிந்தவரை கரந்து கொண்டுதான் இருக்கிறது. பள்ளியே இல்லையே உனக்கு ஏன் வரி கட்ட வேண்டும்? என்று கட்டபொம்மன் போல் வாய் கிழிய வசனம் பேசுகிற பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சத்தமில்லாத யுத்தம் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் கல்விக்கூடத்திற்கும் பெற்றோருக்கும் மத்தியில் இப்படி ஒரு பணிப்போரும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓட்டு மெத்தக் குழப்பத்தில் உலகம் உருண்டு கொண்டு இருக்கிறது.

கல்விக்கூடத்தில் கல்வி மட்டுமல்ல ஒழுக்கம் தான் மனிதனின் அறநெறி அச்சினைச் சுழல வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று கல்வி கடைச்சரக்காகிவிட்டது ஒழுக்கம் கேள்விகுறியாகிட்டது இதனால் பெற்றோர்கள் கண்முன்னே பிள்ளைகளின் எதிர்காலம் சூன்யமாகிவிட்டது. ஆசிரியர்களுக்கு நெருப்பில் அக்கினிச் சட்டியோடு பயணிப்பது போல் இருக்கிறது.

கவலையின்றித் திரிந்தவர்களை கல்விக்கூடத்திற்கு வரச் சொன்னதால் வேண்டா வெறுப்போடு பள்ளி வரும் மாணவர்களால் வேண்டாத செயல்களும் அரங்கேறிவிடுகிறது. மாணவர்கள் எப்போதும் ஒருவித பயத்தோடும் மன இறுக்கத்தோடுமே பயணிக்கிறார்கள். இதில்வேறு ஆறு நாளும் கல்விக்கூடம் இது அவனை உயிரோடு புதை குழியில் உட்கார வைப்பது போல் உணருகிறான். பைத்தியம் பிடித்தது போல் உளறுகிறான்.

ஆங்காங்கே சில அசிங்கங்களும் அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. நாகரிகம் கருதி பள்ளி ஊர் பெயர் குறிப்பிடாமல் கூறுகிறேன். ஒரு பள்ளியில் தமிழாசிரியர் புத்தகம் இல்லாத மாணவனை பக்கத்து வகுப்பில் வாங்கி வரச் சொன்னதற்கு மாணவர் ஆசிரியர் கன்னத்தில் அறைந்துவிட்டார் ஒரு பள்ளியில் மாணவன் கத்தியை உருவிக் கொண்டு ஆசிரியர்களை விரட்டியிருக்கிறான் ஒரு பள்ளியில் ஒழுங்காக முடிவெட்டவில்லை என்றவுடன் உடற்பயிற்சி ஆசிரியரை உருட்டி எடுத்திருக்கிறார்கள் இவ்வளவு செய்தும் தான் செய்தது தவறு என்றோ மன்னிப்புக் கேட்கவேண்டுமென்ற மனநிலையில் மாணவர்கள் இல்லாதது தான் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இதில்வேறு மாணவிகளே பேருந்திலேயே மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் கண்றாவிக் காட்சியாக காணொளியில் ரெக்கை கட்டிப் பறக்கிறது.

ஓன்று மட்டும் உறுதி கல்வி என்பது கற்பிக்கப்படுதல்ல கண்டெடுக்கப்படுவது குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட பகுதியை மாணவன் மண்டைக்குள் திணித்து விட வேண்டும் என்று எண்ணுவது கல்வியுமல்ல அது காலத்தின் கட்டாயமுமல்ல ஒவ்வொரு மாணவனின் மூளையின் சக்தியில் இருக்கும் திறமைகள் என்ன? அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பதே ஆசிரியரின் கடமையாக இருக்க வேண்டும் யாரோ செய்த கட்டமைப்பை மாணவனுக்குள் புகுத்தி மண் குதிரையில் ஆற்றைக் கடக்க நினைப்பது மடத்தனம். ஆகவே திறமைகளைக் காணுங்கள், திறமைசாலிகளை வெளிக்கொணருங்கள் காலத்திற்கும் அவர்கள் காலத்தைக் காப்பாற்றுவார்கள் காலமும் அவர்களை கடவுளாய் பார்க்கும் கண்டுபிடிப்போம் வாருங்கள்.

“ஒன்று போல இருக்க வேண்டுமென்றால்
ஒரு ஆட்டுமந்தை போதும்
என்றும் போற்ற வேண்டுமென்றால்
வித்தியாசமானவர்கள் உருவாக வேண்டும்”

ARCHIVES