11

Dec

2020

சாடியோ மானே (Sadio Mane)

நதி தனக்காக எப்போதும் நகர்ந்ததில்லை மரங்கள் பழங்களைத் தனக்காகக் காய்த்துக் கொள்வதில்லை வயல்கள் பயிர்களைத் தனக்கெனப் பதுக்கிக் கொள்வதில்லை. மாட்டின் பால் முழுவதும் தனது கன்றிற்கு மட்டுமில்லை, ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அனைத்துமே தன்னையே வழங்கித்தான் நம்மையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையின் விதியும் அதுதான். இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடமும் அதுதான் இயன்றவரை தம்மிடம் இருப்பவற்றைப் பிறருக்குக் கொடுத்துப் பெருமைப்படுவதுதான். இயற்கையிலிருந்து அதிகமாக ஆதாயம் அடையும் மனிதன் மட்டுமே. ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோல் தனக்கும் தன் வாரிசுக்கும் என்று ஒதுக்கியும், பதுக்கியும் வைத்து தானும் உண்ணாமல், பிறருக்கும் கொடுக்காமல் மண்ணோடு மண்ணாய் போனதுதான் அதிகம். இந்த அழிந்துபோகும் செல்வத்திற்காய் அடித்துக் கொண்டும், அவப்பெயர்களைச் சம்பாதித்துக் கொண்டும் உடல் முழுவதும் வியாதிகளை உற்பத்தி செய்து கொண்டு இதைச் சாப்பிட முடியாமல் அதைச் செய்ய முடியாமல் இம்சைகளோடு மருந்துப் பொட்டலத்துடன் மரணத்தை சந்திக்க மயானத்திற்குப் பயணிப்பவர்கள் தான் இப்புவியில் ஏராளமானோர்.

ஆனால் எல்லா மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்! என்று சொல்லமுடியாது. பிறருக்குத் தெரிய வேண்டுமென்று சிலர் தர்மம் பண்ணுகிறார்கள். பிறருக்குத் தெரியாமலேயே அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல் பரம்பரைகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அள்ளிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள், கிள்ளிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் இருப்பதைக் கொடுப்பவர்களும் உண்டு. தனக்கு இருக்கிறதோ இல்லையோ பிறருக்கு வழங்கிப் பெருமைப்படுபவர்களும் உண்டு, அவர்களில் எனக்குத் தெரிந்தவர்களை முடிந்தவரையில் அனைவர் பார்வைக்கும் அறியப்பட வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இன்று எனது நெஞ்சில் நிழலாடுகிறவர் மேற்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் சாடியோ மானே (Sadio Mane) 28 வயதே நிரம்பிய ஒரு இளம் வீரர் இவரை ஒரு பத்திரிக்கையாளர் நேர்காணல் நிகழ்ச்சி நடத்துவதை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது. அப்போது பத்திரிக்கையாளர் அவரது அலைபேசித் திரையானது பழுது பட்டிருப்பதைப் பார்க்கிறார். பழுதான பழைய காலணிகளை அணிந்திருக்கிறார். இது ஏன்? எனக் கேட்கிறார். அதற்கு மானே நான் அலைபேசித் திரையை மாற்றப் போகிறேன் என்கிறார். நிருபர் நீங்கள் நினைத்தால் புதிய அலைபேசியே வாங்கலாமே! எனக் கேட்கிறார். அவரோ நான் நினைத்தால் அலைபேசி என்ன ஆகாய விமானமே வாங்கலாம் ஆனால் நான் நினைக்கவில்லை என்கிறார்.

நான் நினைக்கவில்லை என்று அவர் கூறியது தன்னைப்பற்றி நினைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரது மக்களைப் பற்றி எண்ணிக் கொண்டே இருந்தார். அவர் உழைத்தது அனைத்தையும் அவர் மக்களுக்காகவே செலவு செய்தார். மக்களின் உணவுக்காக, உடைக்காக காலணிக்காக, கல்விச் செலவிற்காக வாரம் 14 கோடி சம்பாதிக்கும் அவர் அத்தனையும் அவர் மக்களுக்காகச் செலவு செய்கிறார்.

அதற்குக் காரணம் அவர் சின்ன வயதில் பட்டினி கிடந்திருக்கிறார். காலணி இல்லாமல் தவித்திருக்கிறார். படிக்க முடியாமல் வாழ்க்கையைக் கடந்திருக்கிறார். எனக்குக் கிடைக்காதபோது யாராவது எனக்குக் கொடுக்கமாட்டார்களா? என ஏங்கியிருக்கிறார். அப்போது அவருக்குக் கொடுக்காதவர்கள் கொடுமைக்காரர்களாகத் தெரிந்திருக்கிறார்கள் கொடுப்பவர்கள் இறைவனாகத் தெரிந்திருக்கிறார்கள். இப்போது கொடுக்கிற இடத்தில் நான் இருப்பதால் எனக்குக் கிடைக்காததுபோல் இன்றும் தவிப்பவர்களுக்குக் கொடுக்கிறேன். எண்ணற்ற கல்விக் கூடங்கள் கட்டி அனைவரையும் படிக்க வைக்கிறேன். நான் இறைவனாக இல்லாவிட்டாலும் நல்ல மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.

பலருடைய உதவியிலும் உற்சாகத்திலும் தான் நாம் இந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்பதனை நாமும் மறக்க வேண்டாம். இப்போது கொடுக்கிற இடத்தில் நாம் இருக்கிறோம். 2020 பலரை ஏழையாக்கி விட்டது. சிலருக்காவது நாம் என்ன செய்யப் போகிறோம்?

“இறைவனைத்
தரிசிப்பதை விட
ஏழைகளைச்
சிரிக்க வையுங்கள்”

ARCHIVES