21

Jan

2022

திருந்தாத பைத்தியங்கள்…

சில நாட்களுக்கு முன் எம் பள்ளி வளாகத்திற்கு முன் ஒரு பைத்தியக்காரன் அமர்ந்திருந்தான். உடம்பு முழுவதும் அழுக்காக இருந்தது. ஒரு சிறிய துணிமூட்டை வைத்திருந்தான். தேவையில்லாத பேப்பர்கள் தேவையில்லாத பொருட்கள் என வைத்திருந்தான். அப்போது என்னருகில் வந்த ஒரு ஆசிரியர் அவன் ஒரு பைத்தியக்காரன் அவன் பக்கத்தில் போகாதீர்கள் அவன் வைத்திருக்கிற பொருட்களைப் பாருங்கள் என்றார். உடனே அவன் விருட்டென எழுந்தான் யாரு பைத்தியம்? நீ பைத்தியம்! அவன் பைத்தியம்! என எங்கேயோ பார்த்துக் கூறிவிட்டு அவன் வைத்திருந்த பொருட்களையும் அருகிலுள்ள ஒடையில் எறிந்துவிட்டு வேகமாகப் போய்விட்டான்!.

அவன்தான் வேகமாகப் போய்விட்டானே தவிர, அவன் பேசிய வார்த்தைகள் அப்படியே மனதில் நின்று விட்டது. யாரு பைத்தியக்காரன்? தேவையில்லாததை வைத்திருப்பவன் பைத்தியக்காரன் என்று நினைத்தோம். தேவையில்லாதது அவன் வைத்திருக்கிறான் என நினைத்தேன். அதை தூர எறிந்து விட்டான். ஆனால் நம் தானே தேவையில்லாதது நிறைய வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் எண்ணிப் பாருங்கள் எத்தனை கார்கள்! இரண்டு சக்கர வாகனங்கள்!. இருவர் வசிப்பதற்கு ஏகப்பட்ட அறைகளுடன் கூடிய வீடுகள். தேவையற்ற கண்ணாடிகள் பளிங்குக் கற்கள் என எத்தனையோ தேவையற்ற பொருட்களை நாம்தானே வைத்திருக்கிறோம். அப்படியென்றால் நாம்தானே பைத்தியக்காரன். அவன் தேவையற்றது எனத் தெரிந்தவுடன் தூக்கி எறிந்து விட்டானே நமக்கு எறிய முடியவில்லை. அப்படியென்றால் நாம்தானே பைத்தியக்காரன்!.

ஒவ்வொரு வீட்டிலும் பீரோவைப் பாருங்கள். பீரோ முழுவதும் சேலைகளை அடுக்கி வைத்திருந்தாலும் சேலைப் பைத்தியங்கள் இன்னும் சேலை எடுக்கத்தான் ஆசைபடும். எப்போதோ கல்யாணத்திற்கு மட்டும் கட்டப்படும் பட்டுச்சேலைகள் கூட எண்ணற்றவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வெறும் காலோடு பூமியில் வலம் வந்த மனிதன். இப்போது பாத்ரூமுக்கு ஒரு செருப்பு வீட்டிலிருக்கும்போது ஒரு செருப்பு அலுவலகத்துக்கு ஒன்று என ஒரு செருப்புக் கடையையே வீட்டில் அடுக்கி வைத்திருக்கும் செருப்புப் பைத்தியங்கள். வீட்டுக்கு ஒரு டி.வி வைத்துப் பார்த்திருந்த காலம் போய் அறைக்கு ஒரு டி.வி வைத்து எதையும் பார்க்காமல் திரியும் ஏமாளிப் பைத்தியங்களும் உண்டு.

சின்ன வயதில் குழந்தைகள் நடப்பதற்காக கொலுசு போட்டுவிடுவார்கள். அது அந்த சத்தத்தைக் கேட்டு எட்டு எடுத்து வைக்கும் என்று. ஆனால் இன்று 80 வயது ஆனாலும் கொலுசைக் கழட்டாத கொலுசுப் பைத்தியங்களும் உண்டு. தன்னை அழகாக எண்ணாத தாழ்வு மனப்பான்மை உள்ள பைத்தியங்கள் எப்போதும் கண்ணாடி பார்ப்பதும் ஒப்பனை செய்வதுமாக இருக்கின்ற பைத்தியங்களும் உண்டு.

நகையை முழுவதும் வாங்கி பெட்டிக்குள் அடைத்து வைத்து தொட்டுத்தொட்டு இரசிக்கும் நகைப் பைத்தியங்களும் உண்டு. எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு வளைத்துப் போடுகின்ற பித்துப் பைத்தியங்களும் உண்டு. எதற்கெடுத்தாலும் பணம் பணம் என அலைகின்ற பைத்தியங்களால் தான் இலஞ்சம் ஊழல் எனத் தலைவிரித்தாடும் பணப் பைத்தியங்களும் உண்டு. இதனால் குணம் கெட்டு கூறுகெட்டுத் திரிகிற பைத்தியங்களும் உண்டு.

எப்போதும் போதையில் திரிகின்ற குடிப் பைத்தியங்களும் மற்றவர்களைப் பைத்தியமாக்கும் சாமி பைத்தியங்களும், பட்டம், பதவி என பரதேசிகளாய் அலைகின்ற பைத்தியங்களும் உண்டு. பெண் வீட்டின் நாட்டின் கண் என எண்ணாமல் எப்போது அடிமையாக வைத்து அடக்கி ஆள நினைக்கும் அகங்காரப் பைத்தியங்களும் உண்டு.

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அனுபவிக்கத் துடிக்கும் காமப் பைத்தியங்களும் உண்டு. பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்காத பிசாசுப் பைத்தியங்களும் உண்டு. எதைச் சாப்பிட்டாலும் திருப்தி அடையாத சாப்பாட்டுப் பைத்தியங்களும் உண்டு. பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து மட்டம் தட்டுகிற பரிசேயப் பைத்தியங்களும் உண்டு. இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பது என்றும் கூறித்திரியும் பச்சோந்திப் பைத்தியங்களும் உண்டு.

ஒன்று மட்டும் புரிந்தது பைத்தியங்கள் எல்லாம் பகட்டாக உடையணிந்து பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும்போது எதைப்பற்றியும் கவலைப்படாத, யாருக்கும் தீங்கு நினைக்காத, எதற்கும் ஆசைப்படாத ரோட்டோரமாய் போய்க் கொண்டிருந்தவனைத்தானே நான் இதுவரை பைத்தியக்காரன் என்று நினைத்தது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்.!

அவன் உடம்பிலுள்ள அழுக்கு கூட ஒரு குளியலில் சரியாகிவிடும். ஆனால் நம் மனதிலுள்ள அழுக்கான போட்டி, பொறாமை, அகந்தை, ஆணவம், பகட்டு, பட்டம், பதவி, பணம், குழிபறித்தல், கொலை செய்தல், இலஞ்சம், ஊழல், காமம், கற்பழிப்பு என்ற அழுக்குகளை எப்படி கழுவுவது? எதில் கழுவுவது? எந்தக் கங்கையில் கழுவினாலும் இந்த அழுக்குப் போவாதே?

ஆகப் பைத்தியம் என்று அவனைச் சொன்னது என்னைப் பொறுத்தமட்டில் பச்சைப் பொய் மல்லாக்கப் படுத்து மார்பில் துப்பியதுபோல் உணர்ந்தேன், கண்ணாடிக் கூண்டில் நின்று கல்லெறிந்து விட்டேனோ எனக் கலங்கினேன். தூரத்தில் அவன் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கவலை இல்லாமல் போய்க் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டே பைத்தியமாய் நின்றேன்.

“எல்லோருமே ஒருவிதப் பைத்தியந்தான்
வைத்தியம் பார்க்க முடியாதபடி”

ARCHIVES