16

Mar

2021

நிறுத்துங்க(ளேன்)….

எதை நிறுத்துவது? எப்படி நிறுத்துவது? எப்போது நிறுத்துவது? எதற்காக நிறுத்துவது? என ஏராளமான கேள்விகள் எழலாம். இதற்கெல்லாம் ஒரே பதில் எவையெல்லாம் நமது வாழ்வை, மகிழ்ச்சியை, நிலையை, கௌவரவத்தை சுயமரியாதையைக் கெடுக்கிறதோ? எவையெல்லாம் நம்மால் பிறரைக் கெடுக்கிறதோ! அவற்றையெல்லாம் நிறுத்தி விடுங்கள். ஆனால் அதனை நிறுத்துவதுதான் கடினம். அதனை நிறுத்திப் பாருங்கள் நீங்களும் மகான் ஆகிவிடுவீர்கள்.

ஒருவர் ஒரு காரை ஓட்டி வந்தார். அவர் அந்தக் காரைக் கட்டுப்பாடின்றித் தாறுமாறாக ஓட்டி வந்து பலரையும் இடித்துத் தள்ளி சிலரைக் கொன்று பாதிப்பை ஏற்படுத்தினார். ஒரு வழியாக அவரைத் தடுத்து நிறுத்தி காரை நிறுத்தினார்கள். காரை ஓட்டத் தெரியவில்லை என்றால் அதனை ஏன் எடுத்தீர்கள் என்று அவரைக் கேட்க. எனக்கு நன்றாக ஓட்டத் தெரியும். ஆனால் எப்படி நிறுத்த வேண்டும் என்றுதான் தெரியவில்லை என்றார் இப்படித்தான் பலருடைய வாழ்க்கையில் பல விசயங்கள் நிறுத்தத் தெரியவில்லை.

வாழ்க்கையில் பல நேரங்களில் நம்மை ஆட்டிப்படைக்கின்ற தீயசக்திகள் நம்மைத் தீண்டும்போது அது தீயசக்தி என்று தெரியாமல் ஜாலியாக எடுத்துக் கொண்டு அதோடு சமரசமானோம். குறிப்பாக புகைத்தல், குடி, சீட்டாட்டம் என்பவையெல்லாம் நண்பர்களுடனும், கொண்டாட்டத்திற்காகவும் நாம் ஆரம்பிப்பதுதானே இன்று நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆளைத் தொலைக்கிறது!

குடியெல்லாம் நாம் தானே முதலில் குடித்தோம் இப்போது நம்மையல்லவா! அது குடித்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கத்தானே சீட்டைக் கலைத்துப் போட்டு ஆடினோம். இப்போது அதுவல்லவா! குடும்பத்தைக் கலைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆசையில் தானே நம் புகைத்தோம். இப்போது நாமல்லவா புகைந்து கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமென்ன எங்கேயோ? எப்படியோ நாம் ஆரம்பித்த ஒரு சிறிய விளையாட்டு ஒன்று நம்மைச் சிக்கவைத்து, சின்னாபின்னமாக்கிக் கொண்டு இருக்கிறது. காரணம் நமக்கு அதனை நிறுத்தத் தெரியவில்லை.

சிறிய புண்ணாக வருகின்ற புற்றுநோய்தானே நம்மை மண்ணாக்கிவிடுகிறது. சிறிய ஒட்டை பெரிய கப்பலையே கவிழ்த்து விடுகிறதே! இதனைத் தெரிந்தும் ஏன் நம் சிந்திக்க மறுக்கிறோம். உரிமைக்காக, சுயமையை மீட்க, பொதுநலம் காக்க கோபப்பட்டோம். இன்று கோபமே குணமாகி யாவரின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டோம். காரணம் கோபத்தை நிறுத்தத் தெரியவில்லை.

பிறருக்குக் கொடுத்துப் பழகியவர்கள் கூட தன்னுடைய தகுதிக்கு மீறிக் கொடுத்ததனால்தான் தரித்திரம் அடைந்தார்கள். கர்ணன் கூட தன் கொடையைத் தானமாகக் கொடுத்தததால்தான் கண்ணணுக்கு முன்னால் அவன் இறக்க நேரிட்டது. பாரி தன்னுடைய பரம்பு நாட்டிலுள்ள 300 ஊர்களையும் பாடுவோருக்குப் பரிசாகக் கொடுத்ததால்தான் தன் நிலை இழந்தார். இலஞ்சம் வாங்குறவன் அதனை நிறுத்த முடியாததால் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஊழல் செய்தவர்கள் அதனை நிறுத்த முடியாததால் சிறைச்சாலைக்குச் சென்று தன் வாழ் நாளைத் தொலைக்கிறார்கள். பிறரைக் குறை கூறியே வாழ்ந்தவர்கள். பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்க அலைந்தவர்கள் அதனை நிறுத்த முடியாததால் தெருநாயை விட கேவலமாக மதிக்கப்படுகிறார்கள். கூட இருந்து குழிபறித்துக் கொண்டிருந்தவர் அதனை நிறுத்த முடியாததால் இன்றைய யூதாசாக, எட்டப்பன்களாக பிறரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி கீழான பிறவிகளாகக் கீழ்த்தரமாக எண்ணப்படுகிறார்கள் காரணம் தெரிந்திருந்தும் தீய செயல்களைச் செய்வதால்தான்!

எனவே எதனையும் நிறுத்தத் தெரிய வேண்டும். நிறுத்தப் பழகுங்கள், முயற்சி எடுங்கள் முன்னேறுங்கள், என்னால் முடியாது என எப்போதும் பின் வாங்கி விடாதீர்கள். சின்னச் சின்ன ஓட்டைகளாக வந்து பெரிய கிழிசலை ஏற்படுத்திய தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தீயிலிடுங்கள் தேவைப்படும்போது தேவையில்லாததையும் தீயவையையும் நிறுத்திவிடுங்கள். நிறுத்தப் பழகுங்கள் நிறுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். நிம்மதி அடைவீர்கள். புரியுது…போதும் நீ நிறுத்து! என்கிறீர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

“தேவைப்படும் அளவு மட்டுமே
தீயைப் பயன்படுத்த வேண்டும்
தேவையில்லாதபோது அணைத்துவிடுங்கள்
இல்லையென்றால் கருகிவிடுவீர்கள்”

ARCHIVES