09

Jul

2022

குழந்தைகளை ஏன்?

பள்ளிக்கூடங்களைப் பொறுத்தமட்டில் பள்ளி சார்ந்த செயல்பாடுகளில் படிப்பது ஒரு பக்கம் என்றால் அவர்கள் திறன்களை வளர்ப்பது இன்னொரு பக்கமாக இருக்கும் மேலும் அவ்வப்போது சில விழாக்கள் கொண்டாடி போட்டிகள் நடத்துவதுடன் சில பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும்.

சில நேரங்களில் வெளியிடங்களுக்குச் கூட்டிச் சென்று பொருட்காட்சிகள் அறிவியல் மையங்கள் சுற்றுலாத்தலங்கள் பார்வையிட்டு வருவதும் உண்டு. சில நேரங்களில் வல்லுநர்களை அழைத்து வந்து உரையாடுவது. நல்ல திரைப்படங்கள் பார்ப்பது, மேஜிக் ஷோ நடத்துவது என நடக்கும். ஆனால் ஒன்றை மட்டும் என் மனம் எப்போதும் ஏற்க மறுக்கும். அது என்னவென்றால் சர்க்கஸ் நடத்துகிறோம் என்ற பெயரில் குழந்தைகளை வளைத்து வளையத்திற்குள் நுழைத்து அடுத்து கம்பத்தில் நிறுத்தி காண்கிற காட்சி எப்போதுமே எனக்கு அந்தக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதாகவே எண்ணுவேன். அவ்வாறு வருகிறவர்களுக்கு உதவி செய்து அனுப்பி விடுவேனே தவிர அந்தக் கொடிய காட்சியைப் பார்க்க என் மனம் கொஞ்சமும் இடம் கொடுக்காது.

ஆனால் இன்றைய நாளில் கல்வி என்ற பெயரில் அந்தக் கன்றாவி நடக்கிறதோ என எனக்கு அச்சம் தொனிக்கிறது. ஒவ்வொரு பெற்றோர்களும் தாங்கள் குழந்தைகளின் மீது தங்களது கனவினைத் திணித்து அதற்கு ஏற்ப அவனை ஆளாக்குவதற்கு வளைத்து ஒடித்து பிற வளர்ச்சிப் பகுதியை குறைத்துத் தங்கள் விருப்பப்படி டாக்டராகவோ, பொறியியல் வல்லுநராகவோ கணிணி இஞ்சினியராகவோ கப்பல் படைத்தலைவனாக்கவோ நினைத்து கற்பனையில் மிதந்து கல்லின் நார் உறிப்பது போல அவனை உயிரோடு உலையில் இட்டுக் கொழுத்துவதுபோல அவன் உயிரினை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். 10,12ம் வகுப்பு மாணவ மாணவிகளின் விருப்பத்தைவிட இங்கு பெற்றோரின் விருப்பமே பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது.

பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்காமல் அவனுக்கு எது பிடிக்கும்? எதில் விருப்பம் என அறியாமல்! அவனுக்கு நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு பெற்றோர்கள் நடத்தும் சர்வதிகாரம் இப்பிறவியில் மட்டுமல்ல ஏழேழு பிறவியிலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். விவசாயம் என்பது விரும்பத்தகாத ஒன்றா? விவசாயிகள் என்பவர்கள் தீண்டப்படாதவர்களா? தச்சுத் தொழில் என்பது தவிர்க்க முடியாத ஒன்று அதனைத் தவிர்க்கக் கூடாது என்ற தன்மை ஏன் பலருக்குப் புரிவதில்லை. ஒவியனும் சிற்பியும் உயர்ந்த இடத்திற்கு வந்ததில்லை என்பதற்குத்தானே! அவனை உருவாக்க மறுக்கிறீர்கள். உங்கள் எண்ணம் எல்லாம் உங்கள் குழந்தைகள் வசதியில் வாழ ஆசைப்படுகிறீர்களே தவிர விருப்பப்படி வாழவிடவில்லையே? ஆனால் ஓவியனோ, சிற்பியோ அவர்கள் படைப்பு ஒவ்வொன்றும் பார்ப்பவர்களைப் பரவசமூட்டும் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் பிரம்மாக்களே! அந்த இரசனை எப்போதாவது உங்களுக்கு இருந்திருக்கிறதா?

உங்கள் குழந்தைகளை வைத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க எண்ணுவதைவிட ஒரு பணக்காரனையும், வசதிபடைத்தவனையும் உருவாக்கவே வாய்ப்புத் தேடுகிறீர்கள் அந்தஸ்து, கௌரவம் என அடுக்கிக் கொண்டே போகிறீர்களே! தவிர சந்தோசம் மனத்திருப்தி, நிறைவு, பிறர் மகிழ்வு, பிறர் வாழ்வு என்று என்றாவது பேசியிருக்கிறீர்களா? எண்ணியிருக்கிறீர்களா?

ஒருமுறை என்தோழி தன் மகளுடன் வந்து கொண்டிருந்தாள் அவளைப் பார்த்து உன் மகள் என்ன படிக்கிறாள்? என்று கேட்டேன். பொறியியல் வல்லுநர் என்று சொன்னாள். அழகான உன் குழந்தை மருத்துவராகி இருக்கலாமே? வெளியிலும், வெயிலிலும் நிற்கின்ற வேலை எதற்கு? என்றேன். அவள் என்னைக் கடந்த பிறகு தான் யோசித்தேன் மருத்துவராக மாறுவதற்கு மனிதநேயம் போதுமே! என்று எண்ணிய பிறகுதான் என்னையே நான் ஏளனமாகப் பார்த்தேன்.

கண்டிப்பாக இருப்பவர்கள் காவல்துறையும், கற்றுக்கொண்டே இருப்பவர்கள் ஆசிரியராகவும், மனித நேயம் உள்ளவர் மருத்துவராகவும், மற்றவர் நலன் பேணுபவர் வணிகராகவும் மக்களை நேசிப்பவர் அரசியல்வாதியாகவும், மனங்களை ஆள்பவர் ஆன்மீக வாதியாகவும் தொண்டு செய்பவர் துறவியாகவும், தியாகம் மிகுந்தவர் அனாதை இல்லங்கள் நடத்துபவராகவும் இருக்கவேண்டும். இப்படி இருந்தால் இந்தச் சமூகம் இன்பச்சோலையாக மாறும் இவ்வாறு வளர பிள்ளைகளைப் பெற்றோர்கள் உருவாக்கலாமே!

இது ஒருபுறம் இருக்க நீட் தேர்வு வந்தபிறகு அறிவியல் பிரிவிற்கு ஆள் தேட வேண்டியது இருக்கிறது. பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படிக்காமலும் இஷ்டப்பட்டுப் படிக்காமலும் எளிதாகப் படிப்பதற்கு என்ன வழி? என்றே நிறைய மாணவர்கள் எளிதில் வெற்றியடையக்கூடியப் பிரிவுகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இப்போது சந்தோசமாக இருக்க என்ன வழி என்று நினைக்க பெற்றோர்கள் அவனுக்குப் பக்க வாத்தியம் வாசிக்க அவன் இதனை படிக்க முடியாது என்கிறான் என வாதிட்டு எதிர்காலத்தை மறந்து இருட்டுக்குள் தள்ளுகிறார்கள் இதுவும் ஒரு வகையான தவறுதான்.

பெற்றோர்களே உங்கள் கனவினைப் பிள்ளைகளுக்குள் திணிக்காமல் பிள்ளைகள் முயற்சி செய்யாமல் முன்னேறத் துடிக்கும் எண்ணத்திற்கு இசைந்து போகாமல் பிள்ளைகளின் ஆர்வத்திற்கு வடிகால் அமைப்போம். சமூகம் நாளை அவனை நினைக்கும் அளவிற்கு சரித்திரத்தில் அவன் பெயர் நிலைக்கும் அளவிற்கு அவன் புகழ் ஓங்க அவனுக்கு அச்சாராமாய் இருங்கள் எந்தத் தொழிலும் இழுக்கு அல்ல. உழைத்து உண்பது உத்தமம் என்பதனை உணர்த்தி வையுங்கள். உலகம் போகிற போக்கிலும் உலகம் வகுக்கும் பாதையிலும் உங்கள் பிள்ளை பயணிக்க வேண்டாம். அவன் வழி தனி வழியாக இருக்கட்டும் மறுமலர்ச்சி விதைக்கட்டும் மறுவாழ்வு கொடுக்கட்டும் மாற்று வழி பிறக்கட்டும் மற்றது வாழ்வில் தொடரட்டும்……

“எல்லோரும் மருத்துவரானால்
மருத்துவமனையைக் கட்டுவதுதான் யார்?”

ARCHIVES