01
Nov
2025

கழிவுகள் என்பது பயன்படுத்த இயலாத பயன்படுத்தக் கூடாத பொருட்களே மருத்துவக் கழிவுகள் எனப்படும். அதுவும் மருத்துவக் கழிவுகள் என்பது பல்வேறு இடங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதுபோல் மருத்துவத்தில் பயன்படுத்திய குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். அதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். மருத்துவம் என்பது மகத்துவம் அது மாண்பை இழந்ததும் மனித நேயத்தை மறந்ததையும் பற்றித்தான் பேசப்போகிறேன்.
மனிதர்கள் மறுவாழ்வு கிடைக்கும்போது கையெடுத்துக் கும்பிடும் கடவுளாகக் காட்சி தருபவர்கள் மருத்துவர்களே! மனிதனுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள், ஆபத்துக்கள், வியாதிகள், கொள்ளை நோய்கள் போன்றவற்றின் தாக்கத்தால் மனிதர்கள் மரணத்தின் பிடியில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக அதாவது ஆண்டவனாகக் காட்சியளிப்பவர்தான் மருத்துவர்கள். ஆனால் காலப்போக்கில் கடவுள்களில் சிலர் காசுக்காகச் சாத்தான்களாக மாறிவிட்டார்கள்.

மருத்துவம் மாபியாக்களின் கையில் சிக்கி விட்டது. மருந்துகள் கொள்ளை லாபத்தில் விற்கப்பட ஆரம்பித்துவிட்டது. உறுப்பறுத்து விற்கும் மருத்துவமனைகள் நகர்கள் தோறும் தோன்ற ஆரம்பித்து விட்டன. கிட்டினியை களவு செய்யும் கேவலமான மருத்துவர்களும் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகளைத் திருடும் செவிலியர்களும் களைகளாக முளைத்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் மருந்துகளைத் திருடி தனி மருத்துவமனையில் விற்கும் சில மனிதாபிமானமற்ற மருத்துவர்களையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சில நாட்களாக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் மருத்துவச் சீரழிவுகளைப் பற்றி பல்வேறு தவறான பதிவுகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. மக்களும் இதனால் பல்வேறு பாதிப்புகளை அடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை விட்டால் வேறு வழியில்லையே. எனவேதான் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. கோல்ட்ரிஃப் ஒரு இருமல் மருந்து மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை மத்தியபிரதேசத்தில் புழக்கத்தில் இருக்கும்போது நோய்க்கு எடுத்துக் கொண்ட 24 குழந்தைகள் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீசன்ஃபார்மா என்ற நிறுவனம்தான் இந்த மருந்தைத் தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளது.
இந்த மருத்துவப் புழக்கத்தில் இத்தனை குழந்தைகளை இழந்ததால் அதன் மருத்துவப் பிரதி சதீர் வர்மா சிந்தராவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளளார். இதன் உரிமையாளர் ரங்கநாதன் இந்த மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் சோனி உட்பட 6 பேரை அரசாங்கம் கைது செய்துள்ளது.
கோல்ட்ரிஃப்பில் மருந்தில் டை எத்திலீன் என்ற பொருள் கலப்படம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எந்த காலத்தில் எந்தப் பொருளை எப்போது எப்படி உண்ண வேண்டும் என்று தெரிந்து விட்டாலே பாதி நோய்களுக்குப் பாடை கட்டி விடலாம். அது தெரியாமல் பசிக்குச் சாப்பிடாமல் ருசிக்குச் சாப்பிட்டுவிட்டு உழைக்க மனமில்லாமல் உண்டுக் கொழுத்து விட்டு தன் வேலையைச் செய்ய பலபேரை நியமித்து விட்டு உடம்பை பிணம் போல் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள பயிற்சி எடுத்து விட்டு வியாதியின் விளிம்பில் நின்று ஆண்டவரே காப்பாற்று என்பது அரைவேக்காட்டுத்தனம்.

சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. சிவரஞ்சினி என்ற பெண் மருத்துவர் தனி நபராக நின்று இந்த மானிடத்தைக் காக்க ORSக்கு எதிராக நின்று போராடினார் என்று எத்தனை பேருக்குப் புரியும். ஒரு தப்பான நிறுவனம் ஒரு தவறான மருந்தை தவறான முத்திரையோடு விற்பனை செய்து கொண்டிருக்கிறது என்று எட்டு வருசமாக போராடி இப்போதுதான் நீதியைப் பெற்று இருக்கிறார்.
அதாவது தவறான முத்திரையில் வெளிவந்துள்ள ORS என்பது ஒரு மருத்துவக்குணம் வாய்ந்தது அல்ல. இது ஒரு இனிப்புப் பானம் மட்டுமே என்று மருத்துவர் நீதிமன்றத்தில் படியேறி மக்களுக்காகப் போராடினார். அவருக்கு எப்படி எப்படி எல்லாம் நெருக்கடிகள் வந்திருக்கும்! எத்தனை மிரட்டல்;கள், உயிர்பயம் நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இருப்பினும் மானிடத்தைக் காக்கத் துணிந்த அந்தப் பெண். உயிரே போனாலும் பரவாயில்லை பிற உயிர்களை காப்பாற்றியே தீர வேண்டும் என்று போராடி அதற்குத் தடை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தச் செய்தியைக் கேட்டு அவர் மிகுந்த மகிழச்சி அடைந்தார்.
ஆனால் அந்த நிறுவனம் மீண்டும் மேல் முறையீட்டுக்குச் செல்கிறது. எங்கள் நிறுவனம் தற்போது ஏறக்குறை 180 கோடிக்கு அந்த பானம் விற்பனையில் இருக்கிறது. அது விற்பனை செய்யும் அளவிற்காவது பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனே நீதி மன்றமும் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.அது தீரும் வரை விற்றுக் கொள்ளுங்கள் ஆனால் முத்திரை தடைசெய்யப்பட்டுள்ளது.

இதில் எது நீதி? இந்த நீதி எதற்கு? எந்த நிர்பந்தத்தினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் எழுதும் தீர்ப்புத்தானே மகத்தானது! மாறாதது! ஆகவே அந்தத் தயாரிப்பு நிறுவனம் தரும் அதே இனிப்புப் பானம் வரும் ஆனால் முத்திரை இருக்காது அது தடுக்கப்படும். இருப்பினும் அது தப்பானது என்று மருத்துவர் சிவரஞ்சனி நிருபித்து விட்டார். ஆனால் அந்த நிறுவனம் தனது பணத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே தவிர அது அடுத்தவர்களின் உயிரை எடுக்கிறது என்று தெரியவில்லை. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன தவறான அந்தத் தயாரிப்பை இனிமேலும் வாங்காதீர்கள் நமது முட்டாள்தனத்தை மூலதனமாக்குவதை தடுத்து நிறுத்துங்கள்.
இதனை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஏதோ மருத்துவர்களைக் குறை சொல்லுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த ORSஐ தடுத்து நிறுத்தியவரும் ஒரு மருத்துவரே.
சமீபத்தில் கோவையில் ஒரு மருத்துவர் உயர்ரக மருத்துவமனை கட்டி இங்கு வருகின்ற ஏழைகள் பணமில்லாமல் மருத்துவ சிகிச்சை செய்ய முடியவில்லை என்று வெளியேறினால் ஏழைகளுக்கு இல்லாத இந்த மருத்துவமனை எதற்கு? என்று அன்றே இடித்துவிடுவேன் என்று அடித்துச் சொல்லுகிறார். அவருடைய மனிதாபிமானத்தைக் கண்டு வியந்து போகிறேன்.

மதுரையில் ஒரு மருத்துவத் தம்பதிகள் தாங்கள் மருத்துவமனைக்கு வருகின்ற குழந்தைகளுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்கிறார்கள். சிறுவயதில் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் அது பெரிய பிரச்சனையாகிவிடும். ஆகவே பணமில்லை என்பதற்காக எவரும் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவத்தை அந்தத் தம்பதிகள் குழந்தைகளுக்கு இலவசமாக செய்துவருகிறார்கள். இதுதான் கடவுள் பணி.
மருத்துவம் புனிதமானது அதனைச் செய்கிறவர்கள் புனிதர்கள்தான். ஆயினும் உடலில் தேவையில்லாத கட்டிகள் தோன்றி உடலை நோயாக்குவது போல் உடல் பாகங்கள் கெட்டு நம்மைச் செயலிழக்கச் செய்வது போல் சில நோய்கள் போல் வளர்ந்து நம்மை அரிப்பது போல் மருத்துவத்துறையும் சில இடங்கள் சில மனிதர்களால் கலங்கப்பட்டுக் கிடக்கிறது. இதனை மருத்துவர்கள் மட்டுமல்ல சமுதாயமும் சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்.
ஒரு நல்ல நாட்டில் ஆரோக்கியமாக மனிதர்கள் வாழ வேண்டுமென்றால் சுகமான கல்வியும், சுகாதாரமான மருத்துவமும் கிடைத்துவிட்டால் அந்த நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வார்கள். கல்வியும், மருத்துவமும் காசுக்கு விற்கப்பட்டால் அது செயற்கை அழிவாகும் அதில் சிக்குண்டு சின்னாபின்னமாகி விடுவார்கள். நாடு நாள்பட நம்மை விட்டு மறைந்துவிடும். பூமியின் புதைக்குழியில் மறைந்துவிடும்.
“மருந்தே…
நோயானால்…
மருத்துவம்…
இறுதிச் சடங்காகும்”