23

Feb

2024

கழுகுக் கலாச்சாரம்…

கழுகுக் கலாச்சாரம் என்பது… கழுகிற்குத் தான் பார்ப்பது எல்லாமே சதைகளாகவே தெரியும். சதைகள் என்பது பசிக்காக பிற உயிர்களைத் தேடுவது. உயிரோடு உள்ள சதைகளோடு உறவு கொள்வது காமத்தைத் தீர்ப்பதற்காக! இறந்தபிறகு சதையை எடுத்து இச்சையைத் தீர்ப்பது (உணவிற்கு)ஆசையைத் தீர்ப்பதற்காக! ஆனால் இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமமாகப் படைத்தான் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டில் ஆண்களின் கண்களுக்குப் பெண்கள் சதைகளாகவே தெரிகிறார்கள். வரலாற்றைப் புரட்டினாலே நம்முடைய காட்டுமிராண்டித்தனம் நமக்குத் தெரிய வரும்?

இந்தியக் கலாச்சாரம் எவ்வளவு பெரிய புனிதக் கலாச்சாரம்! இங்குதானே ஒருவனுக்கு ஒருத்தி முறை பின்பற்றப்படுகிறது என்று மார்தட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் எய்ட்ஸ் என்ற கொடிய அரக்கன் இந்தியாவில் தான் அதிகம் குடியிருக்கிறான் என்ற புள்ளி விபரம் வந்தபிறகும், புள்ளி ராஜா விளம்பரம் தெரிந்த பிறகும் நாம் ஆணவத்திற்கும் ஆன்மீகத்திற்கும் விழுந்த பெரிய அடி இது! இனியும் கண்மூடித்தனமாய் நம் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடித்தால் உலகம் நம்மைக் காட்டுமிராண்டிகள் என்று காரித்துப்பி விடும்!

ஒருமுறை பல நாட்டு மனிதர்கள் பங்குகொள்ளும் கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் கலந்து கொள்ளச் சென்றார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒருவெளிநாட்டுத் தம்பதியினர் இவர்களைக் கட்டிப்பிடித்து தன் வாழ்த்தைத் தெரிவித்தார்கள். அவர்களுடன் சென்ற ஒரு அறைவேக்காட்டு நண்பன் அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்து ஒரு கமெண்ட் அடித்தான். இது என்னடா? அவன் மனைவி நம்மைக் கட்டிப் (Hug) பிடித்தாலும் அவன் ஜாலியாகச் சிரித்துக் கொண்டிருக்கிறானே? என்று அந்த வெளிநாட்டுக்காரரைப் பார்த்து நகைச்சுவை என்ற பெயரில் நஞ்சைக் கக்கினான். உடனே அவர் சிரித்துக் கொண்டே எனக்குத் தமிழும் தெரியும், என் மனைவியைப் பற்றியும் தெரியும் என்று சிரித்தார்.

அதன்பிறகு அவர் பேசிய பேச்சு அற்புதமான பேச்சு. எங்கள் கலாச்சராத்தில் நாங்கள் எங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் போது ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வோம். நீங்கள் சொன்னீர்களே என் மனைவி அவரைக் கட்டியணைத்தாள் என்று. ஆம் என் கண்முன்னால் தான் நடந்தது. அது எனக்குத் துளி கூட வருத்தமில்லை. ஏனென்றால் அவரைத் தொட்டது. என் மனைவியின் உடம்புதான் மனசு இல்லை. என் மனைவியின் மனசு எப்போதும் என்னிடம் தான் இருக்கிறது. உடம்பை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உங்களைப் போல் உடம்பைத் தேடும் தெரு நாய்கள் அல்ல நாங்கள் பிணங்களைத் தேடும் கழுகுகளல்ல என்றார்.

அதன்பிறகு சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தேன். அவர் சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை. இதேபோல் நமது நாட்டுக்காரனாய் இருந்தால் உடம்பு தெரியும் படியாகச் சேலை கட்டக் கூடாது. உடம்பை யாரும் பாத்துவிடக் கூடாது, தொட்டுவிடக் கூடாது என்று கவலைப் படுவானே தவிர மனசைப் பற்றி இங்கு யார் கவலைப்படுவது?

உடம்பு முழுவதும் மூடி இருக்க வேண்டும் என்றுதானே அவர்களுக்கு உடை கொடுத்து இருக்கிறோம். ஏனென்றால் பெண்கள் உடல் நம்மை கெடுக்கும் என்றுதானே! பெண் வெளியில் வரக்கூடாது என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தோமே? அது உடம்பிற்கா? மனசிற்கா? மனசு என்றால் பூட்டி வைக்க முடியுமா? உடம்பு என்றால் நம் உள்நோக்கம் என்ன?

பழங்காலத்தில் போர்களில் மன்னர்களைக் கொன்றுவிட்டு மகாராணிகளைத் தூக்கிக் கொண்டு செல்வார்களே அவர்களின் உடம்பையா? மனசையா?

இப்போது கூட பெண்களைக் கடத்திக் கொண்டு செல்கிறார்களே உடம்பிற்கா? மனசிற்கா? ஆண்கள் இறந்தவுடன் பெண்களை உடன்கட்டை ஏறச் செல்வார்களே! எதற்கு? அவர்கள் தனியாக இருந்தால் தப்புப் பண்ணிவிடுவார்கள் என்றுதானே? அது பெண்களின் உடம்பைப் பற்றியா? மனசைப் பற்றியா? கணவன் இறந்தவுடன் மனைவி தாலி அறுத்து வெள்ளைச் சீலைக் கட்டி, பூவு, பொட்டு இழந்து ஆசையை அடக்க வேண்டும் என்று உலகிற்குச் சொல்வது அவர்களின் மனசிற்கா? உடம்பிற்கா?

ஆதிகாலத்தில் அதிகாரப் போதையில் இருந்தவர்கள் பெண்களை மேலாடை அணியாமல் இருக்க வைத்தார்கள் அவர்கள் பெண்களின் மார்பைப் பார்க்கவா? மனசைப் பார்க்கவா? ஒரு பெண் கெட்டுப் போனவள் என்று சொல்கிறோமே! யாரை? மனதால் கெட்டவளா? உடலால் கெட்டவளா?

நீங்கள் திருமணம் செய்ய பெண் பார்க்கப் போகிறீர்களே! பெண்ணின் நிறம், உயரம் அழகு பார்த்துப் பெண்ணை முடிவு செய்கிறோமா? அல்லது மனதைப் பார்த்து முடிவு செய்கிறோமா? அப்படியென்றால் என்னதான் செய்வது? என்று கேட்கலாம். வெளிநாட்டில் பல நாட்கள் பழகிப் பார்ப்பார்கள் இருவர் மனதும் இணைந்து சென்றால் மட்டுமே திருமணம் செய்வார்கள். இருவர் மனமும் எப்போது முறிகிறதோ அப்போது அவர்கள் மணமுறிவு பெறுவார்கள். ஆனால் நாம் உடம்பால் மனைவி கெட்டுவிட்டால் உடனே விவாகரத்து என்பார்கள். ஏனென்றால் உடம்புக்காகத் தானே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். யார் என்று தெரியாமல் எவர் என்று புரியாமல் திருமணம் முடிந்த உடனே முதலிரவு கொண்டாடுகிறோமே? இது மனச் சேர்க்கையா? உடல் சேர்க்கையா? ஒருவரை நன்கு புரிந்து தெரிந்து புரிந்து கொள்ளாமல் காலத்தின் கட்டாயத்திற்காக உடல் இணைந்தால் வெளிநாட்டில் விபச்சாரம் என்கிறார்கள். நம் நாட்டில் கலாச்சாரம் என்கிறார்கள்.

வெளிநாட்டில் கடற்கரையில் பட்டபகலில் ஒரு பெண் நிர்வாணமாகப் படுத்திருந்தால் கூட அதை யாரும் பார்க்க ஆசைப்படமாட்டார்கள். ஆனால் இங்கு நான்கு சுவருக்குள் குளிக்கும்போது கூட சாவித் துவாரத்தில் பார்க்கத் துடிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

நிர்வாணத்தை ஆபாசம் எனப்பார்க்கிற நாம் அங்கு பாசமாகத் தங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே பாசமாக ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலுட்டினால் கூட ஒளிந்திருந்து பார்க்கின்ற அசிங்கமான மனநிலை நம்மிடம் தானே இருக்கிறது. பொது வெளியில் அவர்கள் முத்தமிடும் சுதந்திரம் பெற்றவர்கள் நாம் தனியறையில் கூட நமக்கும் பயமிருக்கும். யாராவது எட்டிப் பார்ப்பார்களோ? என்று. ஏனென்றால் அடுத்த வீட்டுப் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஈனப்புத்தி நம்மிடம் மட்டுமே உண்டு?

குறிப்பிட்ட பருவம் வந்த பிறகு பெண் குழந்தைகள் ஆண்குழந்தைகளோடு பேசக்கூடாது, பார்க்கக் கூடாது, பழகக்கூடாது காரணம் கெட்டுப்போய் விடுகிறார்கள்! உடம்பாலா? மனத்தாலா?

ஒருவேளை அவர்களுக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தாலும் தொட நினைக்கிறான் தழுவ நினைக்கிறான் இப்படி உடல் சேர்க்கைக்காகத் தானே! இங்கு கள்ளக்காதல் எதற்கு? அதனைக் கண்டவுடன் கொலை எதற்கு? அதிகாரிகள் அதட்டி அதைத்தானே செய்கிறார்கள். அனுசரித்துச் செல்லவும் அதைத்தான் செய்கிறார்கள். பணத்தால் மிரட்டி அதைத்தான் செய்கிறார்கள். கடனுக்கு வட்டியாக அதைத்தான் கரக்கிறார்கள். நடிகைகளின் வாழ்க்கையை இங்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மந்திரிகள் பசிக்கும் அதிகாரிகளின் ருசிக்கும் அவர்கள் தான் இரையாகிறார்கள். இங்கு நடிப்பைக் காட்டி நற்பெயர் பெற்றதைவிட நடிகை உடம்பைக் காட்டி உச்சம் தொட்டவர்களே அதிகம்! இன்று ரசிகன் நடிகையை இரசிப்பது அவள் தலையை அல்ல அவள்….யை! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம் கலாச்சாரம் உயர்ந்த கலாச்சாரம் என்று உலகிற்குச் சொல்லிவிட்டு உடம்பை ருசிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம். மனசு இங்கே மலிந்து விட்டது. உடலை வேட்டையாடும் வேட்டைக்காரன்!. ஏமாற்றிப் படிய வைக்கும் எத்தன்! உதவிசெய்து உடம்பை ருசிக்கும் ஓநாய்கள்! பெண்களைப் பிணங்களாகப் பார்க்கும் மானிடக் கழுகுகள்! தன் காமத்திற்கு வேட்டையாடும் காட்டுமிராண்டிகள்! மகளையும் விட்டு வைக்காத மாபாதகர்கள்! உடன்பிறந்தவளை உறிஞ்சிவிடுகிற ஒட்டுண்ணிகள்! உடம்பு திண்ணும் சுடுகாட்டுச் சுடலைகள் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்கள் தீனியைத் திணித்துக் கொண்டிருக்கிறது. நம் மனதிற்கு மதம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதிற்கு நன்கு பயிற்சி கொடுங்கள். உடம்பைத் தேடுகிறவர்கள் சரிபாதி இருந்தாலும் மறுபாதியையும் அவர்கள் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். நாமாவது நல்ல எண்ணத்தோடு பழகுவோமே! மனதை இரசிப்போம் மாற்றுவழி தேடுவோம்.

“நம் எண்ணங்கள்
ஆன்மாவின் ராகம்
சரீரத்தின் தாளமல்ல”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES