16

Jun

2023

அமலோற்பவ செல்வி…

இப்பிறவியில் இறைவனிடம் கேட்காமல் எனக்குக் கிடைத்தவரம். தெய்வமே எனைத் தேடி வந்தது போல் எனக்குக் கிடைத்த இரண்டு தாய்கள் என் அம்மாவோடு இன்னொரு தாயாக வந்த என் அக்காள். இந்த உறவை உச்சரிப்பதோடு நின்று விடாதீர்கள் உள்ளுக்குள் வைத்து உணர்ந்து பாருங்கள். இதுதான் நம் உயிரில் நிறைந்த உறவு. உடனிருக்க வந்த வரவு. நம் வாழ்நாளில் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் பிறந்தபோதே நமது சொர்க்கம் நம்மைப் பார்க்கும் அவள்தான் நம் அக்கா. இதனை வாசிக்கும் போது உங்கள் உடன்பிறப்பை உள்ளுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.

சில விலங்குகளைச் சொல்லுவார்கள் அது குட்டி ஈனும் போது முதல் குட்டியைத் தின்றுவிடும் அதுதான் அதற்கு மருந்து என்பார்கள். அது உண்மையோ! பொய்யோ! ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் அது மகத்தான உண்மை. வசதிக் குறைவான குடும்பத்தில் பிறக்கின்ற குழந்தைகளில் முதல் குழந்தைகள் சாமிக்கு நேர்ந்து விட்டது போல குடும்பத்திற்காகவே பிறந்ததாக உழைக்கும்.. சிறுவயதிலேயே வேலைக்குச் சென்று உழைத்துக் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப் படுவார்கள். நாகர்கோவில் பக்கம் கொஞ்சம் நகர்ந்து பாருங்கள் பல மூத்த பெண்குழந்தைகள் தான் திருமணம் கூட செய்யாமல் இருந்து குடும்பத்தைக் கரை சேர்ப்பார்கள். தியாகிப் பென்சன் வாங்காமல் தியாகி என்று கூடத் தெரியாமல் இன்றும் பல தெய்வங்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது. அவள்தான் அக்கா! நேரில் வந்த தெய்வம். அவள்.

நான் குழந்தைப் பருவத்தில் சந்தோசமாகக் கவலையின்றி வாழ்ந்து கொண்டிருந்தேன் திடிரென்று ஒரு சூறாவளி எங்கள் குடும்பத்தைச் சுருட்டிப் போட்டது. என் தந்தை வேலை இழந்தார் பதவி முடிந்தது. பண இழப்பு வந்தது என் தந்தை நொடிந்து போய் விட்டார். என் தாய் அவரைத் தேற்றவும் திடப்படுத்தவும் நிலைநிறுத்தவுமே படாதபாடுபட்டார்கள். அச்சூழலில் என் குடும்பத்தைக் காப்பாற்ற அந்த ஆபத்தில் இருந்த தூக்கி நிறுத்த வந்தவள் தான் என் அக்காள்.

பனிரெண்டாவது வயதில் பள்ளிப் படிப்பைவிட்டு விட்டாள். குழந்தைத் தொழிலாளியாக மாறுகிறாள். இரவுபகல் பாறாது பீடி சுற்றுகிறாள். அவள் உழைத்ததுப் பெற்ற ஊதியம் தான் எங்கள் வாழ்க்கைக்கு ஆதாரம். யேசு நாதருக்குக் கூட 33 வயதில் தானே சிலுவைப் பயணம். ஆனால் இவளுக்கு 12 வயதியேலயே சிலுவைப் பயணம். இவளுக்கு எந்தச் சிமியோனும் இடையில் உதவ வரவில்லை. எந்த வெரோனிக்காவும் அவள் முகத்தை துடைக்கவில்லை. இறுதிவரைப் போராடி எங்களைக் கரை சேர்த்தவள் தான் என் அக்கா. கொஞ்சம் முன்னேறியவுடன் எங்களுக்கென்று ஒரு வீடு அதிலும் பாதிவேலை அவளது உழைப்புத்தாங்க. எங்கள் வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் அவளது வியர்வை இன்னும் காயாமல் தான் இருக்கிறது. அதன் பிறகு எத்தனையோ வீடுகள் கட்டிவிட்டோம். ஆனால் அந்தவீடுதான் எங்களை இறுதிவரைச் சுமக்கும் இன்பவீடாக இன்றும் இருக்கிறது, இப்போது எங்களிடம் இருப்பது எல்லாம் எங்கள் வசதிக்காகவும், வசதியைக் காட்டவும் வடிவமைக்கப்பட்ட வீடு ஆனால் அவள் கட்டிய வீடுதான் நாங்கள் வாழ்வதற்குக் கட்டிய வீடு.

அவளுக்குத் தம்பிகள் மீது தனியாத பாசம் எப்போதும் உண்டு. தன் உடன் பிறந்த தம்பியின் மீது உயிரையே வைத்திருந்தாள். தன் தம்பியின் உயிர் அவள் கண்முன்னே போய்க் கொண்டிருந்தது. புற்றுநோய் என்னும் கொடியநோய் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்று கொண்டிருந்தது. குடும்பத்தில் அத்தனைபேரும் அவரைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருந்தோம். இதில் எமன் தான் இறுதியில் வெற்றியடைந்தான். என் அண்ணன் எங்களிடம் சொல்லாமல் சென்ற ஒரே இடம் கல்லறைதான். வெட்ட வெளியில் ஒற்றை மரத்தில் இடி விழுந்து எரிந்தது போல நிலை குலைந்து போனாள் என் அக்கா. துடித்தாள் துவண்டாள் எனக்கும் மரணம் வந்துவிடக் கூடாதா? என தலையில் அடித்துத் ததும்ப ஆரம்பித்தாள்.

அனைவரின் ஆறுதலும் அவளைத் தேற்றவில்லை. அருகிலிருந்தாலும் அவள் தனிமரமாகத்தான் எண்ணினாள். கணவர் அன்பாகப் பார்த்துக் கொண்டாலும் அவள் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருந்தாள். அவள் குழந்தைகளின் அழுகையும், கெஞ்சலும் கூட அவள் காதுகளில் விழவில்லை. மருத்துவர்களால் முடியவில்லை. மருந்துக்கள் குணமாக்கவில்லை. எல்லோரும் இவளையும் இழந்துவிடுவோமோ? என எண்ணும்போதுதான் அவளுக்கு இதயத்தின் ஒரு ஓரத்தில் ஐயோ இழந்ததை நினைத்து இடிந்து போய்விட்டோமே இன்னொரு ஜீவனும் என்னை நம்பித்தானே இருக்கிறது என்று எண்ணியிருப்பாள் எழுந்தாள், நடந்தாள் தனக்குத்தானே மருந்தானாள் அந்த இன்னொரு ஜீவன் நான் தாங்க! எனக்காகத் தாங்க அவள் எழுந்து வந்து விட்டாள். மீண்டும் உயிர்த்தெழுந்தாள் எனக்காக.

தனக்குப்பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள் என்பதால் தனது தம்பிகள் அத்தனை பேரையும் ஆண் குழந்தைகளாகத் தத்தெடுத்துக் கொண்டாள். இப்போதும் எங்கெல்லாம் அமலோற்பசெல்வி என்று காற்று வெளியில் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவள் எங்கள் கண்முன் நிற்கிறாள். இப்போதும் தன் குழந்தைகளிடம் என் தம்பியைக் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இப்போதும் தனக்காக எதுவும் கேட்காமல் எனக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவள் தான் என் அக்கா என்று சொல்லுவேன். ஆனால் அவள் மட்டும் தான் அக்கா என்று எண்ணவில்லை. அவள்போல் பாசத்தைக் காட்டுகிற அத்தனை பேரையும் நான் அக்காள் என்றுதான் அழைக்கிறேன். ஆனால் அக்காள்களிடம் பாசத்தில் இருந்து அத்தனையும் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பிறவியில் உங்கள் அன்புக்கு ஈடாக நான் எதையும் திருப்பிக் கொடுத்து விடமாட்டேன் பொறுத்துக் கொள்ளுங்கள் அக்கா.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தந்தை என்னை அலைபேசியில் அழைத்தார்கள். வீட்டிற்குச் சென்றேன். முதன்முறையாக நாங்கள் உரையாடினோம். அப்பா சில சொத்துக்களைச் சொல்லி அண்ணன் குழந்தைகளுக்கு எழுதிவைத்திருக்கிறேன். உனக்கு எதை எழுதித்தர வேண்டும் என்றார்கள். அதையும் அண்ணன் குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிடுங்கள். அவர்களை மட்டும் எனக்கு எழுதி வைத்துவிடுங்கள் அவர்களுக்கு ஈடாக அகிலமே கிடையாது என்றேன். அசையாச் சொத்து மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. அசையும் சொத்துக்களான என் உறவுகள், நண்பர்கள் என் குழந்தைகள் இவர்களால் நான் எப்போதும் கோடீஸ்வரன் என்றேன். என் தந்தை நான் தனிமரம் என்று எப்போதும் தவித்துக் கொண்டிருப்பார். நான் தனிமரம் தான் ஆனால் ஒரு பெரிய தோப்புக்குள் இருக்கும் தனிமரம் எனவே எந்தப் புயலும் எனை வீழ்த்திவிடாது. எந்த வெயிலும் என்னைக் காய்ந்து விடாது. அண்ணன் குழந்தைகளிடம் எல்லாத்தையும் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். என்னையும் எடுத்துப் போடச் (நல்லடக்கம்) சொல்லுங்கள் என்றேன் இது நானும் என் தந்தையும் அவர்கள் இறக்குமுன் பேசிக்கொண்டது.

எதற்காகவும் உறவை இழந்துவிடாதீர்கள். உறவுக்காக எதையும் இழக்கத் தயாராகுங்கள்.உறவுகளில் போட்டி, பொறாமை, அவதூறு வீழ்த்துதல், ஏன் துரோகம் கூட இருக்கும். ஆனால் அந்த வலியிலும் ஒரு சுகம் இருக்கும். அதனைச் சுமந்து கொண்டே பயணிப்பதுதான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும். நம்மில் பலர் உறவுகளை உதாசீனப்படுத்துகிறோம் தொடர்புகளைத் துண்டிக்கிறோம் தனிமரமாகிறோம், நோய் வாய்ப்படுகிறோம். அனாதையாகச் சாகிறோம். இனியாவது உறவுகளைத் தேடுங்கள். அக்கா தங்கைகளை இப்போதே அலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். “அக்கா, தங்கை செத்த பிறகு மாலை வாங்கிச் செல்வதைவிட அவள் இருக்கும் போதே ஒரு சேலை வாங்கிச் செல்வோமே வாங்க. கடைக்குப் போவோம்”.

“என் அக்கா எனக்கு
உயிர் தந்த உயில்”

“என் கல்லறையிலும் ஒரு சன்னல் வைத்துவிடுங்கள் என் அக்கா என் கல்லறைக்கு வந்து மாலையிடுபவள் அல்ல. என்னைக் கண்டு கொஞ்சம் கண்ணீர் விடுபவள் அழட்டும் விட்டுவிடுங்கள்.”

ARCHIVES