23

Jun

2023

ஆடை…

ஆடை என்று வந்தாலே ஆள் பாதி ஆடை மீதி என்று வாழ்க்கையில் அது ஒரு வழித் தடமாக நம்மோடு ஒட்டாமல் பிறந்து ஒட்டிக் கொண்டு வளர்ந்து நம்மைக் கட்டிக் கொண்டு போகும் வரை கட்டியணைத்துக் கொண்டிருப்பது ஆடையாகும். ஆடை என்பது நமது அடையாளம். அவமானப்படாமல் தன்மானம் காக்கும் தத்துவம் மனிதனே ஆடையின் வாடைதான். ஆடைக்குள் இருக்கும் அபூர்வ பிராணி அவன். பகுத்தறிவைப் பறைசாற்றும் பறை இந்த ஆடை. ஆடை என்பது மனித வாழ்வை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காண்போம்.

கையில் என்ன கொண்டு வந்தோம்? என்ன கொண்டு போகப் போகிறோம்? என்று சொல்வார்கள். பிறக்கும் போது நாம் நிர்வாணமாக வந்திருக்கலாம். ஆனால் போகும் போது யாரும் நிர்வாணமாகப் போகவில்லை. கட்டியிருக்கும் கடைசி ஆடையோடுதான் நாம் கல்லறைக்குப் போகிறோம்.!

கருவறை விட்டு இறங்கி வந்தவுடன் ஒரு கந்தல் துணி சுற்றித்தான் நம்மைக் கையிலெடுக்கிறார்கள். பின்பு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் முதல் பரிசு ஆடை. உற்றவர்கள் ஓடி வந்து பார்க்கும் போது உடன் கொண்டு வருவது ஆடை. பருவத்திற்குத் தகுந்தபடி, உருவத்திற்குத் தகுந்தபடி, அணிவது ஆடை. ஆண், பெண் என்று அடையாளம் காட்டுவது ஆடை. பெரியவர்கள், சிறியவர்கள் எனப் பிரித்துக் காட்டுவது ஆடை.

இந்த ஆடை பதவிக்குத் தகுந்தபடி மாறும் நிறம் மாறும். தன்மை மாறும். அளவு மாறும் கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருப்பவர்கள் வெள்ளை உடையில் இருப்பார்கள். ஆசான், மருத்துவர், கிறிஸ்துவத் துறவிகள் கடினமாக உழைக்கிறவர்கள் காக்கி உடையில் இருப்பார்கள். கறைபடியாமல் வாழ்க்கை வாழ வேண்டியவர்கள் காவி உடையில் இருப்பார்கள்.

கணவனை இழந்தவர்கள் வெள்ளை உடையில் இருந்தார்கள் அவர்கள் தூய வாழ்வு வாழ வேண்டியவர்களை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். ஆணாதிக்கமோ, அதிகார வர்க்கமோ அவர்களைக் கேட்க ஆளில்லை என்று கீழ் தரமாக நடந்து கொள்ளாதீர்கள் என்பதன் அடையாளமே அந்த வெள்ளை உடை. காட்டுக்குள் வாழ்கிறவர்கள் இலைதளைகள் போல் ஆடை அணிந்திருப்பார்கள், இராணுவத்தில் கனத்த மனதை வெளிப்படுத்தக் கனத்த ஆடைகள் அணிந்திருப்பார்கள். கடலுக்குள் வேலை செய்பவர்கள் முத்தைப் போல் வெள்ளையாய் இருப்பார்கள்.

ஆடை ஒருவரின் பதவியைச் சொல்லும்! ஆடை அவர்கள் பணக்காரனா? ஏழையா? எனப் பாறைசாற்றும் ஆடை அவனது ஆசை விருப்பத்தைச் சொல்லும். ஆடை அவனது குணத்தை சொல்லும். ஆடைதான் அவன் சுத்தமானவனா? சுகாதாரமானவனா? எனச் சொல்லும். பைத்தியக்காரனைக் கூட அவனது ஆடைதான் பறைசாற்றும். பண்டிகை நாட்களைக் கூட ஆடைதான் அடையாளம் காட்டும். கந்தல் ஆடைதான் அவனது வறுமையைச் சொல்லும். கழிக்கப்படும் ஆடைதான் அவன் பணமதிப்பைச் சொல்லும். பிறருக்குக் கொடுக்கும் ஆடைதான் அன்பைச் சொல்லும் தர்மத்தைச் சொல்லும் இரக்கத்தைச் சொல்லும்.

பட்டுச் சேலை திருமண பந்தத்தைச் சொல்லும் உங்கள் ஆடைதான் உங்கள் நாட்டைச் சொல்லும் உங்கள் கலாச்சாரத்தைச் சொல்லும். உங்கள் ஆடைதான் நீங்கள் விரும்பும் வண்ணத்தைச் சொல்லும். உங்கள் திமிரையும் சொல்லும்.

பிறருக்காக, பிறரின் அன்புக்காக நாம் எதையும் இழப்போம்!. ஆனால் ஆடையை இழக்கமாட்டோம் உயிருக்கு உயிரானவர்கள் உடலோடு கலந்தவர்களுக்காக மட்டுமே நாம் ஆடையை இழப்போம். ஒரு பெண் ஒரு ஜனனம் தரிக்க, அந்த உயிர் பிறக்க அந்த உயிர் பிழைக்க பாலூட்ட தன் ஆடையை விலக்குகிறாள். அக்காள், தங்கை, அண்ணன், தம்பி ஆடையை மாற்றுகிறார்கள். அது உறவின் உச்சம் என்போம். ஒரு முதலாளி தன் தொழிலாளிக்கு தன் ஆடையைத் தந்தால் அது இருப்பதில் மிச்சம் என்கிறோம். சமத்துவத்தையும் ஆடைதான் சொல்கிறது. சமுதாயத்தையும் ஆடைதான் சொல்கிறது. சகோதரத்துவத்தையும் ஆடைதான் சொல்கிறது.

ஆடை ஆண்களுக்கு அவிழ்த்துக்கட்டுவது, அள்ளிக் கட்டுவது, முட்டிக்கு மேலே கட்டுவது என்றும் பெண்களுக்குக் கணுக்காலுக்கு கீழ் வரும் வரை கட்டுவது என அமைத்தார்கள் பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்தும் ஆண்கள் கால்களைக் கைகளை நீட்டி வைப்பது மாதிரியே ஆடைகளை அமைத்தார்கள் பெண்ணடிமைத் தனத்திற்கு ஆடையே விலங்காக வைத்திருந்தார்கள். அதனால்தான் சமத்துவம் வளர பெண்ணடிமைத்தனம் ஒழிய ஆண்கள் அணியும் அத்தனை ஆடைகளையும் பெண்களும் அணிய ஆரம்பித்தார்கள். அதுதான் அடித்தள மாற்றத்தின் ஆணி வேர் ஆகும். ஆடையே அஸ்திவாரம் ஆனது.

ஆனால் பெண்கள் அவசர கதியில் அனைத்து ஆடைகளையும் அவிழ்த்தெரிய ஆரம்பித்துவிட்டார்கள். காசுக்காக ஆடையைக் குறைக்கும் நடிகைகளைக் கைதட்டிக் கூப்பிட ஆரம்பித்தார்கள். ஆடைகள் குறைத்து வீதியில் ஆடும் கரகாட்டப் பெண்களிடம் அத்துமீற ஆரம்பித்தார்கள். பெண்களே ஆடைகள் நமது ஆபரணம். ஒரு பெண் தன் ஆடையை குறைத்தோ அகற்றியோ அங்கங்கள் தெரிய விரும்புகிறாள் என்றால் அவள் எதையோ வியாபாரம் செய்யத் தயாராகிறாள் என்றுதான் அர்த்தம். அந்தக்கால நடிகைகள் கூட, இழுத்துப் போத்தி நடித்ததால் தெய்வ வேடம் அணியும் போது பக்தர்களாகக் கும்பிட்டார்கள். ஆடையைக் குறைத்து நடிக்க ஆரம்பித்தவுடன் தானே அட்ஜஸ்மெண்ட் கேட்கிறார்கள்.

யேசு என்னும் மகான் வாழ்வில் அவரின் ஆடையே அவரின் மகத்துவத்தைச் சொல்லி நின்றது. ஆடையே கறைபடக் கூடிய பெரும் நோயுள்ள பெண். தான் குணமாக யேசுவின் ஆடையைத் தொட்டுக் குணமானாள். ஒரு ஆடை இன்னொரு ஆடைக்கு விடுதலை கொடுத்தது. இயேசு விதைத்த பெண்ணியப் புரட்சி அவர் பாடுபடும்போது கூட்டத்திற்கு நடுவே ஒரு பெண் துணிந்து தன் முந்தானையால் அவரது முகந்துடைத்தாள். ஆண்களுக்கு மத்தியில் அவளது துணிச்சல் அந்த அவளது ஆடைதான் அவளது வீரத்தைச் சொன்னது. அந்த ஆடையில் தான் அவர் முகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவர் உயிர்த்தெழுவார் என்று அவரது சீடர்கள் நம்பினார்கள்;. அதை பொய்யாக்க அவரை அசிங்கப்படுத்துவதற்காக அவரை நிர்வாணப்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள். இறந்தபிறகும் அவர் அருகிலேயே பெண் சீடர்கள் துணிந்து நிற்பார்கள் எனவே அவரது துணிகளை அகற்றி தொங்கவிட்டார்கள். அவர்களைத் துறத்த படைவீரர்கள் செய்த கொடூரமான செயல்தான் யேசுவின் ஆடையைப் பிடுங்கியதுதான். இயேசு உயிர்த்தெழுந்த பின் அவரது உயிர்ப்பின் அடையாளம் அவரது ஆடைதான் கல்லறையில் கிடந்தது. எனவே ஆடை என்பது நமது மனம், நமது குணம். நமது நிறம், நமது கொடை, நமது நடை, நமது வாழ்வு, நமது எண்ணம், நமது வடிவம், நமது கற்பனை, நமது எல்லாம் இப்போது ஒருமுறை உற்றுப்பாருங்கள்.

உடலைத் தழுவி நிற்கும்
உறவில்லையே நழுவி நிற்கும்
உயிரின்றி ஒட்டியிருக்கும்
உயிர் பிரியும்போதும் உடனிருக்கும்
ஆடை

ARCHIVES