12

Feb

2021

அரசியலுக்கு வாங்க…

இன்று எங்கு பார்த்தாலும் அரசியல் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வெற்றிடம் இருக்கிறது, சிஸ்டம் சரியில்லை சரியான தலைவர்கள் இல்லை என்ற சத்தங்கள் திக்கெங்கும் கேட்டு திசையெங்கும் எதிரொலிக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இது முட்டாள்களின் கூச்சலும் செவிடர்களின் கவனிப்பும், ஊமையர்களின் பதில் மொழியும்தான். காரணம் அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் பிதற்றுகிறார்களோ என எண்ணுகிறேன்.

என்னிடம் பயிலும் மாணவர்களிடத்தில் ஒரு நாள் உங்கள் எதிர்காலத்திட்டமாக என்ன வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் சிலர் பொறியியல் வல்லுநர், சிலர் டாக்டர், ஆசிரியர் போலிஸ் என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள் ஆனால் ஒருவர் கூட நான் அரசியல்வாதி என்று சொல்லவில்லை.

பிறகு நானே கேட்டேன் ஏம்பா ஒருவன் கூட அரசியலுக்கு வரவில்லையா? அரசியல்வாதியாக மாறவில்லையா? என்று கேட்டேன் அதற்கு உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான் அரசியல் ஒரு சாக்கடை அதில் எனக்கு விருப்பமில்லை என்றான், ஒரு மாணவி எங்களை வீட்டில் விடமாட்டார்கள் என்றாள். அப்படியே நான் நொந்து போய் விட்டேன். இன்றைய அரசியலும், அரசியல்வாதிகளும் இளைய தலைமுறையை எவ்வாறு கெடுத்து வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன்.

மீண்டும் அரசியல் என்றால் என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்கும் போது அதற்குப் பொய் சொல்ல வேண்டும். ஓட்டுக்கேட்க வேண்டும். இலஞ்சம் வாங்க வேண்டும் மொத்தத்தில் அரசியல் என்றால் அயோக்கியத்தனம் என்ற வகையில் பேசி முடித்தார்கள்.

இதுதான் இளைய தலைமுறைகளின் புரிதல் எனது அடுத்த கேள்வி அரசியல் என்றால் உள்ளம் கவர்வது என்றேன் அவர்கள் சிரித்தார்கள். ஒருவன் சொன்னான் உலகால் வெறுக்கப்படுபவர்கள் என்றான் சற்றுக் கடுமையாக.

அடுத்த அஸ்தரத்திற்கு ஆயத்தமானேன். இங்கு வகுப்புத்தலைவன் யார்? அவன் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று கேட்டேன். தலைவன் எழுந்தான் சில மாணவர்கள் சேர்ந்து என் பெயரைச் சொன்னார்கள். ஆசிரியருக்கும் பிடித்தது. உடனே தலைவராக்கினார்கள் என்றான். உடனே நான் சொன்னேன் இதுதான் அரசியல் நீதான் அரசியல்வாதி என்றேன் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

காரணம் அவர்களுக்கு இதுவரை அவ்வாறு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதனைப் புரிந்து கொண்டேன். ஆசிரியராகிய நான் தவறு செய்துவிட்டேன் என்பதனையும் அறிந்தேன். வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிற பாடத்தை விழுந்து விழுந்து கற்றுக் கொடுத்தேன். மானிட வாழ்வில் இரத்த அணுக்களில் கலந்தது அரசியல் மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த நாட்களில் ஆரம்பமானது. அரசியல் அதனைக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோமே என மனம் வருந்தினேன். இனியும் காலம் தாமதிப்பது எனக்கே அவமானமாகத் தெரிந்தது.

ஒரு மாணவனை அழைத்தேன் அரசியல் சாக்கடை என்று சொன்னாயே அவற்றிலுள்ள நல்ல பழக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு நீ நமது பள்ளியில் தலைவனாக வருவதற்கு என்ன செய்வாய்? எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் கூறினார்கள்.

ஒருவன் கூறினான் நான் அரசியல்வாதி வணங்கி ஓட்டுக்கேட்பது போல் நான் ஒவ்வொரு நாளும் அனைவரையும் வணங்கி நலம் விசாரிப்பேன்.

நான் அனைவருக்கும் மனமுவந்து என்னால் முடிந்த உதவிகளை தேடிச் சென்று செய்வேன்.

என்னுடைய பிறந்த நாளில் இல்லாத மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பேன்.

நமது பள்ளியில் நல்ல மரங்கள், அழகிய செடிகள் வைத்துப் பராமரித்து வருவேன்.

சிறந்த பேச்சாளனாக உருவாகுவேன். அடுத்தவர்கள் தவறு செய்யும் போது, நல்லவர்கள் காயப்படும் போது துணிந்து தட்டிக்கேட்பேன்.

தேவையான வசதிகளை குழுவாகச் சேர்ந்து தேவைப்படுவோர்களுக்குச் செய்து கொடுப்பேன்.

குழுவோடு இருப்பதனால் விட்டுக் கொடுத்தல் பொறுத்துப்போதல், தியாகம் செய்தல் இதன் மூலம் பலரது மனதில் இடம்பிடிப்பேன் தலைவனாவேன்.

இவ்வாறு இன்னும் பல கருத்துக்கள் கூறிக் கொண்டே இருந்தார்கள். இப்படி நீ இருந்தால்? இந்தப் பள்ளியும் சமூகமும் உன்னை என்ன சொல்லும் என்று கேட்டேன் நான் நல்லவன் என்பார்கள். இதுதான் அரசியல் இதற்காகவே அரசியலுக்கு வா என்றேன். நீ காண்பது அரசியலல்ல அது காட்டுமிராண்டித்தனம் கண்ணியமிக்க அரசியலை இன்றே தொடங்கு உலகம் உன்னை வணங்கும்.

“தனக்குள் இருக்கும்
மனிதனைத் தானே
தலைவனாக்குவது
அரசியல்”

ARCHIVES