03

Feb

2023

அலட்சியத்தின் அவலங்கள்….

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடித்ததுபோல, அதாவது வருமுன் காக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட பழமொழி அதாவது ஒரு விலங்கு ஆட்டைக்கடிக்கும் போதே அதனைத் தடுத்துவிட வேண்டும் இல்லையென்றால் அது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் நம்மையே கடித்து குதறிவிடும் என்பது தான். அதே போல் பக்கத்துவீடு பற்றி எறியும் போது நாம் பார்த்து கொண்டிருந்தால்? அதெப்படி இருப்போம்! என்று சொல்லலாம்! ஆனால் இருக்கிறோமே!

உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் என்னும் நகரம் கொஞ்சம் கொஞ்சமாகப் பூமியில் புதைந்து கொண்டு இருக்கிறது. வீடுகள் எல்லாம் வெடிப்பு விழுந்து காணப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைநகரம் நம் கண்முன்னே மண்ணோடு மண்ணாகிக் கொண்டு இருக்கிறது. கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒன்றின் மீது ஒன்றாகத் தூங்கி விழுவது போல் துண்டு துண்டாக விழுந்து கொண்டிருக்கின்றன. நீர் நிலைகள் நிலை குலைந்து தாறுமாறாகத் தாரோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. விளைநிலங்கள் வெட்டிப் போட்டது போல் பிளந்து கிடக்கின்றன. மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

ஜோஷிமத் நகரம் சுற்றுலாப் பயணிகளும், யாத்திரிகர்களும் கொண்டாடி மகிழும் நகரம், இறைவன் படைப்பில் இயற்கையின் விசித்திரங்களை வியந்து பார்க்க வைக்கும். இறைவன் அழகையும், செல்வத்தையும், வளங்களையும் வாரி வாரி வழங்கிய நகரம் இது. ஆனால் இன்று காப்பாற்ற வகை தெரியாது வழி தெரியாது பூமி மெல்ல மெல்ல அதனை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ரோட்டோரத்தில் ஒரு மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்குவதை வேடிக்கை பார்ப்பதுபோல நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூமித்தாய் இந்த பொன்னான நகரை புதைத்துக் கொண்டிருக்கிறாள்.

உரிய நேரத்தில் நாம் இயற்கையைக் காக்கத் தவறியதால் இன்று உயிர்களைக் காக்க நாம் போராட வேண்டி இருக்கிறது. இங்கு இயற்கையை அழித்து எழுப்பிய கட்டிடங்கள் வயல்வெளிகளை உரித்துத் தொழிற்சாலைகளை எழுப்பியது, நீர் நிலைகளைத் தகர்த்து நகரங்கள் ஆக்கியது அழகிய மரங்களை அழித்து ஒழித்தது, போக்குவரத்தை அதிகப்படுத்தி வீதிகளைப் புகைமண்டலமாக்கியது. குப்பைகளைக் கொட்டித் தெருவை நாரவைத்தது. சாக்கடைகளை தெருக்களில் வழியவிட்டு சுகாதாரத்தைக் கெடுத்தது, இத்தகைய கொடிய செயலுக்கு இறைவன் கொடுத்த மிகப் பெரிய தண்டனையே ஜோஷிமத் நகரின் அழிவு.

ஜோஷிமத் நகரில் அடிக்கடி ஏற்படுகின்ற நில அதிர்வும் நிலச்சரிவும் அங்கு வரம்பு மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களே காரணம் போதாக் குறைக்கு போக்குவரத்து நெருக்கடிகள். அவை எழுப்பும் சத்தங்களும் மூச்சு விடுகின்ற புகைகளால் இயற்கையின் ஈரல்கள் இறந்து போய் விடுகின்றன. இதனை ஆய்வு செய்ய அன்றைய கார்வால் மாவட்டத்தின் ஆட்சியர் எம்.சி. மிஸ்ரா தலைமையில் 18பேர் கொண்ட ஒரு குழு 1976ஆம் ஆண்டே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

நிலச்சரிவுகளின் கழிவுகளின் மேல் எழுப்பப்பட்ட நகரம் இது. இங்கு பூமி அழுத்தும் அளவிற்கு புதிய கட்டிடங்கள் எதுவும் வேண்டாம். நிலச்சரிவுப் பகுதிகள் உள்ள இடங்களில் மரங்களை வெட்டாதீர்கள். விறகிற்குக் கூட மரங்களை வெட்டாதீர்கள். உள்ளுர் மக்களுக்கு மாற்று எறிபொருள் வழங்குவது காலத்தின் கட்டாயம் என்று சற்று காட்டமாகவே சொன்னார்கள். அதிகமான மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இவையெல்லாம் யாருக்கோ சொல்லப்பட்டதுபோல செவிடன் காதில் ஊதிய சங்கு போல செவிடாய்போன இச்சமுதாயத்தில் இன்று ஒரு நகரம் நரகமாகிறது.

இப்படியே விட்டுவிட்டால் இதேபோன்று நைனிடால் உள்பட 500 நகரங்கள் அழியும் நிலையில் உள்ளன. ஜோஷிமத் நகரில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் சாலையான 247 கி.மீ தொலைவில் போடப்பட்ட சாலையில் போன மழைகாலத்தில் 309 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இமயமலைப் பகுதியிலும் இப்படி அமைக்கப்பட்ட 11,000 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்! ஜோஷிமத்தைப் போல இமாச்சல பிரதேசத்திலும் சில பகுதிகள் புதையுண்டு வருகின்றது இயற்கை எச்சரிக்கையை நாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லையென்றால் இயற்கை நம்மை உயிரோடு உள்வாங்கிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இதனை பலமுறை சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அவர்களை நாம் ஏளனமாகப் பார்க்கிறோம், எகத்தாளமாய் சிரிக்கிறோம், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று அவர்களை வளரவிடாமல் தடுக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் தேவையானதை இயற்கை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் தான் பேராசை கொண்டு பிசாசாய் அலைந்து ஒதுக்குவும் பதுக்கவும் ஆசைப்பட்டு இன்று புதையுண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.

இது எங்கேயோ நடக்கிறது! என்று இருந்து விட்டால் இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ்நாடு என்று ஒன்று உண்டு அது இந்தத் தரைக்குள்தான் மூழ்கிக் கிடக்கிறது என எதிர்வரும் தலைமுறை அகழ்வாராய்ச்சி செய்யும் நிலை ஏற்படும் ஆகவே இப்போதே இயற்கையிடமிருந்து பறிக்கின்ற திருடனாய் இல்லாமல் இயற்கையைப் பாதுகாக்கும் சேவகனாய் இருக்கப் பழகுங்கள். இயற்கையை வளர்க்க வளர்க்க அது உங்களை வாழவைக்கும். அதனை வெல்ல நினைத்தால் அது உங்களைக் கொல்லும் ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்ப்போம். ஓவ்வொரு குழந்தைக்கும் சொல்லிக் கொடுப்போம். முதல் காதல் இயற்கையோடு முதல் பரிசம் காற்றோடு முதல் தழுவல் தென்றலோடு இப்படி வாழ்ந்தால் மரணம் நம்மிடம் மண்டியிடும்.

“நாம் செத்த பிறகு
புதைக்கலாம் – நாம்
புதைந்த பிறகு
சாகலாமா?”

ARCHIVES