06

Apr

2023

ஆறுதல் சொன்னேன் . . . .

—– கடவுளுக்கு . . . . .

நான் காட்டுமிராண்டியும்மல்ல. கடவுளைத் தேடி ஓடுபவனும் அல்ல. ஆனால் மனிதர்களைத் தேடுபவன். என்னைத் தேடுபவர்களை மட்டுமே தேடுபவன். மனிதர்கள் செல்லும் பாதையில் மனத்தால் பயணிப்பவன். செல்லும் பாதையைச் சிந்தித்துக் கொண்டு இருப்பவன். நாம் செல்லும் வழியைச் செப்பனிட மூத்தோர்கள் வகுத்த பாதையையும், பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் காலத்தால் நாம் அழிந்து விடாதபடி காத்து வருகின்றது. சிலர் கடவுள் காக்கிறான். கர்மா அழிக்கிறது என்கிறார்கள். கடவுள் காக்கிறான் என்றால் ஏன் இத்தணை கலகங்களும், கலவரங்களும். அதுவும் கடவுள் பெயரைச் சொல்லி நடக்கும் கலவரங்களால்தான் உலகம் தன்னையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் எனக்கு கடவுள் பெயரால் உள்ள அச்சத்தைவிட கடவுள் பெயரைச் சொல்பவன் மீது அதிகம் அச்சமாக இருக்கிறது.

கடவுள் இருக்கிறானா? என்று கேள்வி கேட்பவனல்ல நான். இருந்தால் நல்லா இருக்கும் என்று ஆசைப்படுபவன். சரி நாமும் கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்வோம் என்று நினைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளைக் கற்பிக்கிறார்கள், காண்பிக்கிறார்கள். விதவிதமான வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிகிறார்கள். தான் வணங்காத கடவுளை பிறர் வணங்கினால் தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒன்றுக்கு மேல் இருந்தால் அவன் எப்படி கடவுளாகும்? கடவுளைப் பின்பற்றுவது உண்மை என்றால் மற்றவர்களை எப்படி மறுதலிக்க முடியும்?

கடவுளைத் தேடுங்கள் ஆனால் மனிதரில் பாருங்கள். எல்லாக் கடவுளும் மனிதரில் பிறந்து வந்தவர்களாகத் தானே புனித நூல்கள் சொல்கின்றன. நீங்களாகப் பொய்யையும், புரட்டையும் போலித் தத்துவங்களையும் சொல்லி, அடுத்தவன் வளர்ச்சியைத் தடுக்கவும,; அடுத்தவன் பெயரைக் கெடுக்கவும் மதத்தை ஒரு பிரச்சனையாகவே வைத்திருக்கிறீர்கள். மதங்கள் மனிதனைப் பிரிக்கவா? மனித உயிரைப் பறிக்கவா? வேதங்கள் வேறுபாட்டை விதைக்கவா? இதனை வேடிக்கை பார்க்கிறோமே! வேதனையாக இருக்கிறது.

இந்த காலத்தில் கடவுள் பக்தி அதிகமாக இருக்கிறது. பார்க்குமிடமெல்லாம் பக்தி இரசம் ஆறாய் ஓடுகிறது. பார்க்கின்ற மனிதனெல்லாம் பக்தர்களாகவே தெரிகிறார்கள். உடையில், நடையில், அடையாளங்களில், வழிபாடுகளில் பிறருக்குப் பாடமாக இல்லை. பிறரை மனம் நோகச் செய்யவே. இந்தப் பகல் வேசங்கள், வழிபாடுகள் எல்லாம் பிறருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தவே!

பக்தி பெருகப் பெருக மனித நேயம் வளர வேண்டும். ஆனால் மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறதே! ஒருவரை ஒருவர் இழிப்பதும், பழிப்பதும் வாய்ப்புக் கிடைத்தால் அழிப்பதுமே இங்கு வடிகாலாக இருக்கிறதே! மதம் மாறினால் அதைத் தூண்டினால் சிறை வைக்கத் துடிக்கிறீர்களே! நல்ல மனமாக மாறாமல் இருந்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்? கடவுளுக்கு செய்வதாகக் கணக்குக் காட்டுகிறவர்களே கடவுள் எங்கே இருக்கிறான்? என்று தெரியாமல் இருட்டுக்குள் நின்று புத்தகம் படிக்கிற கிறுக்கனைப் போலல்லவா அலைகிறீர்கள். மனிதனை நேசிக்காதவன் கடவுளைக் காண முடியாது என்பது மடையர்களுக்குக் கூடத் தெரியும் இந்த மனிதர்களுக்கு ஏன் தெரியவில்லை?

எனக்குச் சொன்னார்கள் ஒரு கடவுள் கோவிலுக்கே சென்று கொள்ளையர்களைத் துரத்தினாராம். அவரே திரும்பி வந்து பார்த்த போது ஒரு கூட்டம் அவருக்காகவே அழுது கொண்டு இருந்ததாம். திரும்பி வந்தவர் தெரியாதது போல் கேட்டார். எதற்காக அழுகிறீர்கள்? அவர்கள் சொன்னார்கள் எங்கள் கடவுளைக் கொன்று கல்லறைக்குள் வைத்து விட்டார்கள் என்றார்கள் எப்போ? என்று கேட்ட போது இரண்டாயிரம் வருசத்திற்கு முன்னால்? என்றார்கள். அப்படியென்றால் இப்போது எதற்கு அழ வேண்டும்? நான் சொல்கிறேன் உங்களுக்காகவும், உலக மக்களுக்காகவும், அவர்கள் துன்பத்திற்காகவும், அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலுக்காகவும் இப்போது அழுங்கள் என்றார். அவர்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள். ஆனால் அதுதான் இன்றைய வேத வாக்கு! இன்றைய வழிபாடு!!

யாருக்காகவும் அழ வேண்டாம். யாரையும் அழ வைக்கவும் வேண்டாம். முடிந்தவரை அழுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். பிறரின் ஒரு சொட்டுக் கண்ணீரை நீங்கள் துடைத்தால் கடவுள் உங்களைக் கண்ணீர் சிந்த விடாமலே காத்துக் கொள்வார். இன்பத்தை நீங்கள் இடமாற்றிக் கொண்டிருந்தால் இறைவன் உங்கள் இல்லத்தில் நடமாடிக் கொண்டிருப்பார். இறைவனிடத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உங்கள் மனதில்? ஏழைகளுக்கு உணவு கொடுங்கள். ஆண்டவனுக்கு அர்ச்சனை தேவை இல்லை. இல்லாதவனுக்கு வீடு கொடுங்கள். ஆண்டவனுக்கு ஆலயம் தேவையில்லை. அன்றாட உணவுக்கு வழியில்லாமல் மனிதன் திண்டாடிக் கொண்டு இருக்கும் போது பகட்டுக்கு வெடிக்கும் பட்டாசுகள் மனித நேயத்திற்கு வைக்கின்ற வேட்டுக்கள் ஆகும். மறுபடியும் சொல்கிறேன் நான் பக்தன் அல்ல, நண்பன். எனக்கு இறைவனைக் காட்ட வேண்டாம். நல்ல மனிதர்களைக் காட்டுங்கள். வரம் வேண்டாம். உங்கள் பாசம் போதும். செல்வங்கள் வேண்டாம். நல்ல உறவுகள் போதும். தெய்வத்தை நாட வேண்டாம். உறவுகளை நாடினாலே போதும். உண்மை ஜெயிக்கட்டும். நன்மை பெருகட்டும். நல்லதே நடக்கட்டும். நம் வழிபாடு அதுவாக இருக்கட்டும் இறைவனை போற்றவும் வேண்டாம், மனிதனை தூற்றவும் வேண்டாம். கூட இருக்கிறவர்களை நாம பார்த்துக் கொண்டால் மேல இருக்கிறவன் நம்மை பார்த்துக் கொள்வான்.

“மதம் ஒரு போதை
மறந்தும் குடித்துவிடாதீர்கள்”

ARCHIVES