03

Apr

2021

இது நிஜமல்ல கதை…

விவிலியத்தின் இறுதியில் இயேசு தன் சீடனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து உயிர்விடுகிறார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். இதனை மையப்படுத்திக் கற்பனையாக எழுதப்பட்டது இது.

இயேசுவைக் குற்றம்சாட்டி, ஆளுனர்கள் தண்டனை விதித்து படைவீரர்கள் கொன்று விட்டார்களே என்று பேசிக் கொண்டு இருந்தபோது ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவன் பார்ப்பதற்கு ஒரு மகான் போல இருந்தான். அவனது கருத்து மாறுபட்டு இருந்தது. உடனே அவனிடம் கேட்டபோது இயேசுவை கொன்றவர்கள் படைவீரராக இருக்கலாம். அதற்குக் காரணமானவர்கள் உடனிருந்தவர்களே!

அடிமைப் பட்டுக் கிடந்த மக்கள் மீட்பைக் கண்டடைய வேண்டும். சட்டங்கள் உடைக்கப்பட்டு மனிதநேயங்கள் காக்கப்பட வேண்டும் என எண்ணியவர் இயேசு அதே கருத்தை உடையவர்கள் தான் அவரோடு சீடராய் பயணித்தவர்கள். ஆகவே அவர்களுடையப் பாதங்கள்தான் ஒன்றாய்ப் பயணித்ததே தவிர எண்ணங்கள் வேறு வேறாக இருந்தது.

யாரும் இல்லாத கடைக்கோடி மனிதனுக்குத் தன்னுடைய அன்பைத் தேடித் தேடி கொடுத்து வந்தவர் இயேசு. சீலோவம் குளத்தில் இறக்கிவிட ஆளில்லை என்றவனுக்கு இயேசு உதவ வந்தார் ஊருக்குள் வரத் தகுதியற்ற தொழுநோயாளிகளை யாவருக்கும் நடுவில் வைத்து குணமாக்கினார். தீட்டு என நினைக்கும் பெண் முதல் மனிதர்களைத் தொட்டுக் குணமாக்கினார். சுடுகாட்டில் கட்டிப் போட்டிருந்த பேய் பிடித்தவர்களைக் கட்டவிழ்த்து விட்டார். தாழ்ந்த சாதி என ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். முன்னோர் பாவத்தால் முடங்கிப் போனவர்களை முத்தமிட்டு வாழ்த்தினார். ஒளிந்திருந்து பார்த்த சக்கேயு வீட்டில் உணவருந்தி மகிழ்ந்தார். ஒதுக்கி வைக்கப்பட்ட விதவையின் வீட்டுக்குச் சென்று மகனை உயிர்ப்பித்தார். இவை அனைத்தும் மக்களிடத்தில் மகிழ்வும், மனநிறைவும், அவர்மீது மிகுந்த மரியாதையும், ஒருவிதமான பக்தியையும் ஏற்படுத்தியது. இதைச் செய்வதற்காகவேதான் நான் வந்தேன் என்பதையும் அடிக்கடிச் சொல்லியும் வந்தார்.

ஆனால் சீடர்கள் எண்ணம் முழுவதும் அவரை ஒரு அரசியல் தவைராகக் காட்டினார்கள் அவர் செய்த நன்மைகளை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். அவர் பாடுகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கும்போது இவர்கள் கூடாரம் அமைப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர் பசிக்கு உணவளிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இவர்கள் வரி செலுத்துவதை பற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் விண்ணரசைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, இவர்கள் மன்னராட்சியில் இடப்புறமும் வலப்புறமும் இருக்கைக்கு இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தலை சாய்க்கவும் இடமில்லை என்றபோது, இவர்கள் ஒசன்னா…தாவீது மன்னனின் மகனே! என ஊர்வலமே நடத்திவிட்டார்கள். அவர் உண்மையை உரைக்கும் போதெல்லாம் உறங்கிப் போவார்கள் இல்லை என்றால் ஒரிருவர் இருப்பார்கள் மற்றவர்கள் ஒதுங்கிப் போவார்கள். அதனால்தான் அவர் பிடிபட்டவுடன் மற்ற அனைவரும் தேடப்படும் குற்றவாளிகளாகத் தன்னையே எண்ணிக்கொண்டு திக்குத் திசை தெரியாமல் ஒடி ஒளிந்தார்கள்.

பல நேரங்களில் இப்படித்தான் நடக்கிறது. பல நேரங்களில் ஒரு கூட்டம் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு தலைவனை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள். பாவம் தலைவன் மாட்டிக் கொள்கிறான். என்ன செய்தாலும் எங்களால்தானே இப்படி வந்தாய் என்று சொல்லிச் சொல்லி அடிமைப் படுத்துவார்கள் அவர்கள் தாளத்திற்குத் தகுந்து ஆடாவிட்டால் தலைவனைத் தரக்குறைவாகப் பேசுவார்கள். துணிந்து தவறு செய்வார்கள் தலைவன் தட்டிக் கேட்டால் எதிர்த்துப் பேசுவார்கள் முடிந்தால் எதிர்க் கட்சிக்குத் தாவுவார்கள் இன்றைய அரசியல் போல் அப்போதும் இருந்தது. புரியாதவர்களோடு பயணித்தாலும் இயேசு புதிய விடியலும், புரட்சி உயிர்ப்பும் வாழும் கடவுளாகவும் அவருக்கு வாழ்க்கை அமைந்தது.

இப்போது பலருக்கு மரணம் உடனிருப்பவர்களால்தான் உருவாக்கப்படுகிறது. தேவைக்குமேல் ஆசையை வளர்த்து அதற்காக கடன் வாங்கி கட்ட முடியாமல் கணவன் சாவுக்குக் காரணமான மனைவிகளும் உண்டு தன்னுடைய ஆசைகளெல்லாம் பிள்ளைகள் மீது திணித்து அது திணறித் தற்கொலை செய்யக் காரணமான அப்பாக்களும் உண்டு. பிள்ளைகள் தேடிய துணையைத் தடுத்து தனக்கு இணையாகக் கௌரவத்திற்கு திருமணம் முடித்து அவர்களைக் கல்லறைக்கு அனுப்பி வைத்த குடும்பங்களும் உண்டு. தகுதியற்றவன் எனத் தெரிந்தும் தன் தேவைக்காக அவனைத் தலைவனாக்கி வாழ்க! வாழ்க! எனக் கோஷமிட்டு தன் குறுகிய ஆசைக்குத் துணைபோகாததால் குழிபறித்துக் குப்புறத் தள்ளிய கொள்கை இல்லாத தொண்டர்களும் உண்டு. காதலால் உருகி அன்பால் அணைத்து திருமணம் முடித்து வாழ வழி தெரியாமல் வாழ்வை முடித்தவர்களும் உண்டு. இப்படி எத்தனை எத்தனையோ மரணங்கள். அத்தனை பேரும் உடனிருந்தவர்களால் உயிர்போனவர்களே! இனியாவது யோசிப்போம் உடனிருந்தவர்களெல்லாம் உயிர் கொடுப்பவர்களுமல்ல! எதிரில் இருப்பவர்கள் எல்லாம் எதிரியுமல்ல. ஆனால் நாம் உடனிருப்போம் பிறருக்காய் உயிர் கொடுப்போம், என்று கூறிக்கொண்டு வழிப்போக்கன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

-வழிப்போக்கன்

“முகத்துக்கு முன் பக்தியும்
முதுகுக்குப் பின் கத்தியும்
வைத்திருக்கிறானே…ஓ
இவன்தான்…துரோகியோ!”

ARCHIVES