18

Aug

2022

உழைப்பாளர்கள் சிலை…

உழைப்பாளர்கள் சிலையை உற்றுப்பாருங்கள்! உங்களுக்கு என்ன தோணுகிறது?. எனக்கு என்னமோ அதனை உருவாக்கியவனை உதைக்கத் தோணுகிறது. என்னடா இது இவனுக்கு எதற்கு இந்த வேலை? என்று என்னை முறைப்பவர்களை இன்னொரு நோக்கில் பாருங்கள் உழைப்பாளர்கள் சிலையில் அனைத்துமே (வேலை செய்வதுபோல் காட்டப்பட்டவர்கள்) ஆண்கள்தான் அப்படியென்றால் நமக்கு இரண்டு கேள்விகள் எழும்பும் உழைப்பவர்கள் எல்லாம் ஆண்கள் தானா? பெண்கள் உழைப்பதே இல்லையா? என்று கேட்டுப்பாருங்கள்.

அது சிலைதானே! அது ஒரு குறியீடுதானே! அதனையெல்லாமா இந்த நோக்கத்தோடு பார்ப்பது? என்று கடந்து போகலாம் அதே சிந்தனையோடு வாருங்கள் நான் ஒரு ஆசிரியன் மாணவர்களை உனது அப்பா என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டால். சரியாகப் பதில் சொல்லுவான். விவசாயி, கூலி, டிரைவர், ஆசிரியர் என்று ஆனால் அம்மாவைப் பற்றிக் கேட்டால் சும்மா இருக்காங்க என்பான். அதன் அர்த்தம் என்ன? வீட்டில் பெண்கள் செய்கின்ற வேலைகளை இந்தச் சமூகம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அதுவும் ஒரு வேலைதான் என்று வளரும் சமூகத்திற்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் தானே வீட்டில் அம்மா காலநேரம் பாராது, கண்துஞ்சாது, வேலை செய்து கொண்டே இருந்தாலும் அதனை கண்டுகொண்டே இருந்தாலும் நாக் கூசாமல் நால்வரிடம் சொல்லுவான் எங்கள் அம்மா சும்மாதான் இருக்காங்க என்று.

ஏதோ எட்டுமணி நேரம் வேலை செய்து கொண்டு வருகிற தகப்பன் குடும்பத்திற்காக அவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று சொல்லுகின்ற மகன் எட்டுமணி நேரம் மட்டுமே ஓய்வுக்குப் பயன்படுத்திவிட்டு எப்போது உழைத்துக் கொண்டிருக்கிற அம்மாவைச் சும்மா இருக்கிறார் என்று சொல்லி வைக்கிறான். ஏனென்றால் அது பெண்ணின் கடமை அதனை அவள்தான் செய்ய வேண்டும் என்று ஒரு அடிமையை எண்ணுவது போல் ஆணாதிக்கம் சமூகத்தில் வேறூன்றி நிற்கிறது.

ஒருவேளை இருவரும் வேலைக்குப் போவது என்ற நிலை இருந்தாலும் இருவரும் வேலைக்குப் போய்விட்டு வந்த பிறகு வீட்டு வேலைகளையெல்லாம் பெண்கள்தான் செய்ய வேண்டும். இதுதான் நியதி இதுதான் எழுதப்படாத சட்டம். இருவரும் தானே வேலைக்குப் போகிறோம் என எண்ணி எந்த ஆணாவது சமையல் செய்வானா? இல்லையே காலை நீட்டி டிவி பார்ப்பது கணவன் வேலை அவன் தேவை அறிந்து டீ தருவது மனைவி வேலை சமையல் கூட படித்துப் பக்குவமாய் செய்ய வேண்டியது என வைத்துக் கொள்ளுங்கள் நாம் சாப்பிட்ட தட்டை நாம் கழுவக் கூடாதா? என்னைப் பொருத்தமட்டில் உண்ட தட்டை கழுவ முடியாதவன் ஒருவகையில் ஊனமுற்றவனே! கை கால் காண்பதற்கு நன்றாக இருந்தாலும் மனதளவில் ஊனமுற்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கும்.

சமத்துவம், பெண்ணியம், சமஉரிமை என வாய்கிழியப் பேசும் ஆண்வர்க்கமே எந்தத்துறையில் இன்று பெண்கள் இல்லை! ஏன் இன்னும் சமையலறைக்கு ஆண்கள் வரவில்லை? ஆணாதிக்கச் சமுதாயம் கொடிகட்டிப் பறப்பதால் அது கொழுப்பெடுத்து எங்கும் திரிகின்றது! வீட்டில் கூட அப்பா விவசாயி என்றால் விவசாயம் ஆணும் பெண்ணும் கலந்துதான் விவசாயம். தந்தை ஏர் உழுதால் தாய் நாற்று நடுவாள். தந்தை பாத்தி கட்டினால் தாய் களையெடுப்பாள் தாய் கதிர் அறுக்க தந்தை களத்தில் அடிப்பான். அவன் குழந்தையைக் கேட்டுப்பாருங்கள் எங்க அப்பா விவசாயி எங்கள் அம்மா வீட்டுல சும்மா இருக்காங்க. இப்படி ஒரு சமுதாயம் நம்மைச் சுற்றி அரைகுறையாய் அறிந்து அலைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவோமா? அறிந்துதான் என்ன செய்யப்போகிறோம்?

இன்று ஒரு பெண் விமானம் ஒட்டுகிறாள் ஆனால் அவளைக் குமுதம் பேட்டி எடுக்கிறது லாரி ஓட்டுகிறாள் பேப்பர் செய்தியாகிறது. காரணம் அது அபூர்வமாக நடக்கிறதாம் இதெல்லாம் அந்தக் காலம் வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைப்பதை நிறுத்துங்கள் கொஞ்சம் விடுதலை கொடுத்துப்பாருங்கள் இந்தப் பூமியே புதிய புரட்சியோடு சுத்தும்.

இப்போது பெண்கள் அதிகமான பணிகளைச் செய்வதனால் ஆண்கள் கடும்போட்டியில் ஈடுகொடுக்க முடியாமல் கண்விழி பிதுங்கி நிற்கிறார்கள். படிப்பில் கூட மாணவிகளைவிட மாணவர்கள் பத்து இடம் தள்ளித்தானே நிற்கிறார்கள். இன்னும் என்ன வறட்டு கௌரவம் சரியாய்ச் சொல்வதென்றால் நீங்கள் சரிசமமாகக் கூட இல்லை ஆனால் இன்னும் பழைய பஞ்சாங்கம் கிழிக்கப் படாமல் இருப்பதனால் ஆண் இன்னும் அலட்டிக் கொண்டு திரிகிறான். பெண்கள் அலட்டாமல் முன்னேறி வருகிறாள். இப்போக் கூட ஒரு கவிஞன் கூறுகிறான். “சோறு சூடாக இருந்தால் அப்பா சாப்பிடுவார் சுவையாக இருந்தால் நான் சாப்பிடுவேன் இனிப்பாக இருந்தால் என் தங்கை சாப்பிடுவாள் மீதமிருந்தால் என் அம்மா சாப்பிடுவாள்”. இது வரிகள் அல்ல வலிகள் இந்தக் கேவலமான வாழ்க்கையை இன்றும் நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருந்தால் நாகரீக உலகில் வாழும் நவீனக் காட்டுமிராண்டிகள்.

இது நமக்குப் பெருமையல்ல பெண்களின் பொறுமை நம்மைப் பேணிக்காத்து வருகிறது. எவ்வளவு நாள் இந்தப் போலிக் கௌரவத்தில் வாழ்வது. சுய புத்தியோடு சுற்றி நடப்பதைப் பாருங்கள். விடுதலை சம உரிமை என வீதி தோறும் கத்துபவர்களே கொஞ்சம் வீட்டுக்குள் வாருங்கள். நம்மிடம் அகப்பட்டு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற மனைவி, மகளைச் சுதந்திரக் கண்ணோட்டத்தோடு பாருங்கள் எத்தனை நாட்கள் நாம் முதுகிற்குப் பின்னாலும் சமையல் அறைக்குள்ளும் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிற நம் அடிமையை விடுதலைக் கீதம் இசைக்கச் சொல்லுங்கள் இனிமேல் “உங்கள் வீட்டில் முகப்பில் இவ்வாறு எழுதுங்கள் ஒரு பெண்ணில் எல்லையில்லா வெற்றிக்குப் பின்னால் அவளுக்கு இணையான ஒரு துணையாக ஆண் இருக்கிறான்” என்று அந்த வழி வருகிறவர்களெல்லாம் அதனை வாசிக்கட்டும்.

“சிவனில் பாதி தேவி
இவனில் பாதி மனைவி”

ARCHIVES