18

Apr

2012

என் இனியவர்களுக்காக

என் இனியவர்களுக்காக

என்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையெல்லாம் என் எண்ணத்தால் சந்திக்கும்போது எதார்த்தத்தால் எனக்குள் எழும் கேள்விகளை உங்கள் கவனத்தோடு கைகுலுக்க வைக்கவேண்டுமென்று இந்தக் கடிதத்தினை முன்வைக்கிறேன்.

இன்பம் பெறுவதைவிட துன்பம் துடைக்கப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம். அதற்காக கோயிலைக் கட்டுகிறோம். குடமுழுக்கு நடத்துகிறோம். அர்ச்சனை செய்கிறோம். அங்கப்பிரதட்சணை செய்கிறோம். ஆனால நடப்பது என்ன?

நாளும் பொழுதும் இறப்புகளும், ஏய்ப்புகளும்தானே!

சாலை விபத்து மரணம், 2012-ல் இல்லாத நாட்களே இல்லை ஒருவர் அல்ல, கொத்துக் கொத்தாக, குவியல் குவியலாக, நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் பதறுகிறதே! காரணம் எல்லா நாடுகளிலிருந்தும் கார்கள் வாங்கிவிட்டோம். அவையெல்லாம் பயணிக்க, சாலைகள் இன்னும் சரியாக முடியவில்லை. முடித்துவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டு பயணிக்கும்போது நமது பயணங்கள் முடிந்து விடுகிறது.

மறுபக்கம் திரும்பினால் கள்ளக்காதல் விவகாரம் எத்தனையோ கொலைகள். நமக்கும் இன்னும் நல்ல காதலே வரவில்லையே! அதற்குள் எப்படி இந்தக் கள்ளக்காதல் ஊடுருவி நமது கலாச்சாரத்தையும், கண்ணியத்தையும், கட்டிக்காத்த கௌரவத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆக ஏதோ ஒன்றைக் கற்க மறந்துவிட்டோம், கட்டிக்காக்கத் தவறிவிட்டோம்.

மூன்றாவதாக என்னை முட்டிக்கொண்டு நிற்பது தற்கொலைகள் கடன் பிரச்சினையில் தொடங்கி கௌரவப் பிரச்சினைகள் வரை பிரச்சினைகளைச் சந்திக்கத் துணிவின்றித் தன்னை மாய்த்துக் கொள்ளும் அவலநிலை. இதனைக் கேட்கின்ற, படிக்கின்ற, பிஞ்சு நெஞ்சங்களையும் படிப்பில் தோல்வியைத் தழுவி விடுவோமோ என்று கூட இந்த இழிநிலையை ஏற்று வருகிறதே! ஏன் இந்த அவலம்? எங்கே போய் விட்டது நமது கவனம்?

புத்தன் ஒருமுறை ஒரு குழந்தையை உயிர்ப்பிக்க அதன்தாயிடம் இறப்பே இல்லாத வீட்டில் ஒருபடி சோறு வாங்கிவா! என்றவுடன் அந்தத்தாய் எல்லோர் வீட்டிலும் இறப்பு நடந்திருக்கிறது என்று வந்து சொன்னவுடன் இதுதானே இயற்கை நியதி. இதற்குக்கூட மனமொடியக்கூடாது என்பதுதான் அவர் போதனை! அதுவும் நமக்குத் தெரியும்.

அப்படியிருக்க அற்பக் காரணங்களுக்காக இந்த அவல நிலையைச் சந்திக்கவேண்டுமா? மனமொடிய வேண்டுமா? உலகமே உடைந்ததாக உள்ளம் கலங்கவேண்டுமா?

உங்கள் கண்முன் உலவிக்கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உடைந்துபோன இதயங்கள் உருகிக்கொண்டுதான் இருக்கிறது. அது உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அது எப்போது உறங்குகிறது, எப்போது உலவுகிறது என்று யாருக்கும் தெரியாது, சிலவற்றை நினைக்கும்போது இனிக்கும். சிலவற்றை நினைக்கும்போது வலிக்கும். சில சுகமான நினைவுகள்! சில சோகமான அதிர்வுகள்! இரண்டும் கலந்தது தானே இறைவன் கொடுத்த வாழ்க்கைகள்.

சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்படுவதுபோல் நெஞ்சக் கூட்டுக்குள் கிடக்கும் சோகங்களும் எரிக்கப்பட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும். ஆனால் நாம் வைத்திருக்கிற இதயம் நான்குவழிச் சாலையல்ல. அது ஒருவழிப்பாதை உருகி உருகி காதலித்த, உள்ளன்போடு அன்புசெய்த, கைவிடாத நட்போடு கலந்த நினைவுகளை அவற்றின் வலைத்தளத்திலிருந்து அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாமல் அவதிப்படுவதுதான் மானிட வாழ்வின் மகத்தான சாபமாகும்.

மகிழ்ச்சியில் மலர்போல மலர்கின்ற இதயம் சோகத்தில் சுக்குநூறாகப் போய்விடுகிறது. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பார்க்காதவரை இதயம் சரிவதை எவராலும் தடுக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான. என் வாழ்விலும் விடிந்ததுதான். நாம் துவண்டு போவதினால் துன்பம் நம்மிடமிருந்து தவழ்ந்து போய்விடுமா என்ன? நானும் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கிறேன். துன்பத்தில் துவண்டிருக்கிறேன். ஆனாலும் என் பயணத்தில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை வலைத்தளத்தில் அதிகமாக வந்து சந்தித்தது ஆனந்த பைரவியல்ல. மோதிப்பார்த்த முகாரி ராகமே. இருப்பினும் நான் முனங்கவில்லை, மூழ்கவில்லை இரசிக்கக் கற்றுக்கொண்டேன். ஆனாலும் அனுபவம் எனக்குக் கற்றுத்தந்த பாடம் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் யான் பெற்ற துன்பம் அடையக்கூடாது மானிடம் என்பதில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்கிறேன்.

நான் எனக்காக அபூர்வமாகச் சிந்திக்கிறேன். ஆனால் அடிக்கடி பலரை சிரிக்க வைக்கிறேன். இதனால் என் கண்கள் ததும்பும் கண்ணீரை எல்லாம் பிறர் காணாதவாறும் என் உதடுகள் துடித்து உலர்ந்துபோனது தெரியாதவாறும் என் முகச்சிரிப்பு மூடி மறைத்துவிடும் சோகம் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது அழுகை நமக்கு ஆறுதலாக இருக்கும் என எண்ணும்போது தனிமையை நான் தத்தெடுத்துக் கொள்வேன்.

தோல்விகளும், சோகங்களும் எண்ணற்ற புரட்சியாளனையும், கவிஞனையும் இப்பூமிக்கு அடையாளம் காட்டியது என்பதனை நான் புரிந்தபிறகு இதனையே ஆயுதமாக்கிறேன் என்னை இந்த உலகிற்கு அடையாளம் காட்ட துன்பச் சுனாமியில் நான் தூக்கி எறியப்படும்போது கவலையின் மடியில் கிடந்து நான் கதறும்போது பதற்றமே அடையாமல் வள்ளுவன் சொன்னானே இடுக்கண் வருங்கால் நகுக இது எத்தனைபேருக்கு முடியும்? முடியவேண்டும். நாம் கனவுகளைத் தேடி ஓடும்போது கவலைகள் அல்லவா எதிர்கொண்டு அழைக்கிறது.

முன்னேறியவர்களை மட்டுமே என் முன்னால் பாடமாக வைக்கிறார்கள். ஆனால் முயன்றுகொண்டிருப்பவர்களை உலகம் கழற்றிவிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

ஆசையைக் கொடுக்கிற மனமே நிராசையில் நம்மை நிற்க வைத்துவிடுகிறது. நித்தமும் நாம் நேரில் சந்திக்கும் மனிதர்கள் வெளியில் சுவையைவிட உள்ளுக்குள் சுமையை வைத்திருப்பவர்களே அதிகம். பலர் சமுதாய நாகரீகத்திற்காக மகிழ்ச்சிச் சாயத்தை உதட்டில் பூசி ஊர்வலம் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களோடுதான் நமது இரவும் முடிகிறது. பொழுதும் புலர்கிறது.

எதற்காகவும் அஞ்சாமல் என் எதிர்பட்டவைகளெல்லாம் எழுத்தாகவும், பேச்சாகவும் எடுத்தாண்டு கொள்வேன். என் வேதனையைக் கூட வார்த்தை வடிவம் எடுத்து வலம் வரும்போது கேட்டவர்கள் பாராட்டுவார்கள். என்கிட்டே உள்ளவர்கள் உதவுவார்கள்.

அனுபவத்தை எல்லாம் அறிவித்துவிட முடியாது. ஏனென்றால் மனதிற்குள் இருக்கும் மௌனம் மகத்தானது. அது எழுதாவிட்டாலும் இறவாக்காவியமே வாழ்க்கை மேடு பள்ளமில்லாவிட்டால் ஏற்றமிருக்கம் இல்லா சங்கீதமாதிரி உள்ளுக்குள் உணர்ச்சியிருக்காது, நெஞ்சத்தில் நெகிழ்ச்சி பிறக்காது.

வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் அதற்காக யாரும் சாவதற்கு சம்மதிக்க முடியாமா?

வாழ்க்கையோடு போராடிக்கொண்டு இருக்கிற உங்களில் நானும் ஒருவன். நான் சந்தித்த வெற்றிகளைவிட சண்டையிட்ட தோல்விகளே அதிகம். என் கண்கள் அழுவதில்லை. அது பழகிவிட்டது. என் வாழ்க்கைப் பயணத்தை நான் இதமாய் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் பனித்துளியில் பாதம்பதிக்க நினைத்தேன். ஆனால் பாலைவனத்தால் சூடுபட்டேன். மலரை முத்தமிடத் துடித்தேன். முள்ளால் முகம் கிழிக்கப்பட்டேன். வீணையில் நாதம் இசைத்தால் என் காதில் சோகம் ஒலிக்கிறது. பாதம் நனைக்க ஆற்றுக்குள் இறங்கினால் சேற்றுக்குள் என் கால்கள் சிக்கிய நாட்களும் உண்டு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைத்தரம் இதுதான் வாழ்வின் அறம். அவரைப்போல இல்லையே என்று ஆதங்கப்படக்கூடாது. நினைத்ததுபோல் நடக்கவில்லையே என நெஞ்சம் கலங்கக்கூடாது. நான் வக்கீலாக (யுனஎழஉயவந) ஆகவேண்டும் என என் குடும்பம் நினைத்தது. அது வாய்க்கவில்லை.

சமூகப்பணி எனக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் ஆண்டவர் ஆசிரியப்பணிக்கு அழைத்துவிட்டான்.

விதிப்படி ஆசிரியனாகவும் இல்லாமல் விருப்பப்படி சமூக சேவகனாகவும் இல்லாவிட்டாலும் இன்பத்தை மட்டும் நான் இன்னும் இழக்கவில்லை. நான் முழுநேர ஆசிரியனாகவுமில்லை. முழுமையான சமூக சேவகனும் இல்லை. சமூக சேவையை நான் விடுவதாக இல்லை. ஆசிரியப்பணி என்னை விடுவதாக இல்லை.

இரண்டு படகில் எனது பயணம் இதில் புயல் இல்லாமல் இல்லை, போராட்டம் இல்லாமல் இல்லை சிலநேரங்களில் துடுப்பு கூட எனக்கு துணைவராத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

அந்த நேரங்களிலெல்லாம் என்னை ஆழமாக உழுதிருக்கிறேன். எனது பலத்தையும், பலகீனத்தையும் எனக்குள் பந்திவைத்து பரிமாறியிருக்கிறேன்.

தீமைகளை என்னால் தீண்டமுடியாது, பொய்முகம் காட்டி யாருடனும் பொழுதுபோக்க முடியாது, இடத்திற்குத் தகுந்தபடி நடிக்க முடியாது. இல்லாத திறமை இருப்பதாகச் சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை.

பணத்திற்கும் அதிகாரத்திற்கும் பணிந்துபோனால் பதவி கிடைக்கும் என்று சொல்பவர்கள் பக்கத்தில் போகமாட்டேன். வளைந்து நெளிந்து வாய்பொத்தி நின்றால் நினைத்தைச் சாதிக்கலாம் என்று சொல்பவர்களின் நெஞ்சில் மிதிக்கவேண்டும் போல் தோன்றும்.

ஆகவே, சரியாய் சிந்திப்போம் சரிவுகளிலிருந்து மீண்டும் வருவோம். நினைத்ததெல்லாம் நடக்கும் என்பதைவிட அடைந்ததில் ஆனந்தம் கொள்வோம். எனக்குள் இறைவார்த்தை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இழப்பதற்கென்று எதுமேயில்லை. ஆனால் அடைவதற்கு அகிலமே இருக்கிறது. உங்களுக்கு?

ARCHIVES