01

Jul

2023

என் முதல் பாடவேளை…

கோடை விடுமுறை முடிந்து குதுகலமாகப் பள்ளி ஆரம்பித்தது. ஆசிரியர் என்ற முறையில் நானும் புதிய மாணவர்களைச் சந்திக்க எனது முதல் பாட வேளைக்குச் சென்று கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்தமான மாணவர்கள் அங்கு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக நான் நடக்க வேண்டும். எனவே அவர்களுக்குப் பிடித்ததை முதல்நாளில் கூறி உரையாடுவோமே! என நினைத்தேன். மாணவர்களுக்குப் பிடித்தது, சினிமாவும் அரசியலும் தானே அதையே பேசுவோமே! என வகுப்பறைக்குள் நுழைந்தேன்.

வகுப்பு ஆரம்பித்தவுடன் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், உலகநாயகன், லிட்டில் ஸ்டார் புரட்சித் தமிழன், தளபதி என்றவுடன் மாணவர்கள் சிறிதும் தயக்கமே இன்றி சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், சத்தமாகவும், சந்தோசமாகவும் நடிகர்கள் பெயர்களைச் சொல்லி பதிலளித்தார்கள். எனக்குள் ஆஹா வகுப்பறை சூடு பிடித்துவிட்டது என நினைத்தேன். ஆனால் ஏதோ ஒன்று இதயத்தை இரணமாக்கியது.

இவர்களை எதற்கு நட்சத்திர அந்தஸ்தில் வைத்து நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள்? நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களா? நல்லவர்கள் வாழத் துணைநின்றவர்களா? நாலுபேருக்கு நல்லது செய்தவர்களா? நல்லதொரு தலைமுறைகளை வளர்த்துத் தந்தவர்களா? நல்லது நடக்கக் காரணமானவர்களா? இது எதுவுமே இல்லையே? அப்படியென்றால் இவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து நாடு ஏன் போற்ற வேண்டும்? இது கனவுத் தொழிற்சாலைதான். ஆனால் அவர்கள் கடவுளாகிறார்கள். நிழற்பட நாயகர்கள்தான் ஆனால் நிசத்தை அடிமையாக்குகிறார்கள்.

நடிகர்கள், நடிகைகள் வானளவிற்கு உயர்ந்து நிற்கக் காரணம் என்ன? அவர்கள் நன்றாக நடிக்கிறார்கள். பொய்யை உண்மையென்று நம்ப வைக்கிறார்கள். அதனால் புகழப்படுகிறார்கள். நிழலை நிசமாய் நம்ப வைக்கிறார்கள். இதனால் அவர்கள் கொண்டாடப்படுவதை கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் நமக்கே அசிங்கமாகத் தோன்றும். பொய்யை உண்மையென்று நம்பும் புத்திகெட்டவர்களாக எப்போது மாறிப் போனோம்? கொஞ்சம் யோசிப்போமே!

உயிர் வாழ உணவு கொடுப்பவன் விவசாயி உடைபோர்த்துபவன் நெசவாளி துணைநிற்பவன் தூக்கி நிறுத்துபவன் தொழிலாளி, நாம் நிழலில் இருக்க வெயிலில் வீடு கட்டுபவன் கொத்தனார் உடைகளை, சிகை அலங்காரம் செய்பவன் தொழிலாளி ஓறிடம் இருந்து வேறிடம் செல்ல உதவுபவன் ஒட்டுநர், வியாதியைக் காப்பவன் மருத்துவன். காவல் தெய்வமாக நிற்பவர்கள். காவலாளி, வாயில் காப்பவன் காவல்துறை, இப்படி பலர் நமது வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இவர்கள் எல்லாம் நமக்கு நெருக்கமாக இல்லாமல் நடிப்பவன் எப்படி நமது நரம்புகளில் ஊறிப்போனான். இரத்தத்தில் ஏறிப்போனான் யோசிங்களேன்!.

ஏனென்றால் இந்த நடிகர்கள் தான் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திற்குள்ளும் ஒளிந்திருப்பவனை வெளிக்கொணர்கிறார்கள். அதனால்தான் இப்போது நடிப்பவனுக்கே நாடு சொந்தமாகிப் போகிறது. நடிப்பவர்கள் நம்மை ஏமாற்றி நாடாள வந்துவிட்டதால் இன்று நாடாள நினைக்கிறவர்கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறரை மயக்க, மடக்க நடிக்கிறார்கள் நமக்கு இறங்குவது போல் துடிக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பவர்கள் சிலரைப் பற்றி கூறும்போது கூட இவர் திரையில் மட்டுமே நடிக்கக் கூடியவர் என்பார்கள் ஆனால் இன்று தரையில் நடிப்பவர்கள் ஏராளம்! தாராளம்!.

இன்று ஆட்சி செய்ய விரும்புகிறவர்கள் நடித்தால்தான் கிடைக்கும் என நம்புகிறார்கள்! உண்மையாய் இருப்பவர்களை விட நடிக்கிறவனுக்கே நாற்காலி கிடைக்கிறது. அண்ணன் தம்பி என்று அழகாய் நடிக்கிறான். ஆட்சியைப் பிடிக்கிறான். ஏமாளிகளுக்கும், முட்டாள்களுக்கும் சில எலும்புகளை விட்டெறிந்து அவர்களின் முதுகெலும்பை எடுத்தே தனக்குரிய நாற்காலியைத் தானே அமைத்துக் கொள்கிறான். நடிப்பை நம்பியதால் காதலின் உண்மைத்தன்மை களவாடப்பட்டுவிட்டது. இச்சையைத் தீர்த்ததும் எச்சிலாய் உமிழ்ந்துவிட்டுப் போவதால் விவாகரத்து இன்று வீட்டுக்குள் நுழைந்து விட்டது.

இப்போது நடிப்பவர்கள் மட்டுமே நல்லவர்களாகத் தெரிகிறார்கள். உண்மையைச் சொன்னால் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். தகுதி இல்லாமல் தலைவனாக நினைப்பவர்கள் துரோகிகளை மட்டுமே தமக்குத் துணையாக வைத்துக் கொள்கிறார்கள். காரணம் அடுத்தவர்களை அழிக்கத்தானே ஆட்சிக்கு வருகிறோம். பிறர் வளர்ச்சியைக் கண்டு வயிறு எறிவதைத்தானே நமது வயலில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்!

என்னைச் சுற்றி எப்போதுமே நல்லவர்கள் தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்கத் தெரியாததால் நாலுபேருக்கு அவர்கள் தெரியாமலேயே போய் விடுகிறார்கள். நல்லவர்கள் நாட்டுக்குத்தானே செய்தார்கள். எனக்கு என்ன செய்தார்கள் என்று கேட்கின்ற எத்தர்கள் தான் இங்கு ஏராளம். இவர்களை வைத்துக் கொண்டு எப்படி இந்தப் பூமிக்கு புண்ணியத்தை செய்ய முடியும்? பொறுக்கிகள்தான் இன்று பூசாரி வேடம் போட்டு அலைகிற போலிகள்.

நல்லவர்களோடு நடைபோடுவது நல்லதொரு அனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த நல்லவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? நல்லவர்களை நடிப்பவர்கள் எப்படி வென்று விடுகிறார்கள்? என்பது தான் இன்றும் ஏற்க முடியாத பெரிய கேள்வி? நாம் நடைமுறையில் பாருங்கள் காக்கா பிடிப்பவனும், ஜால்ரா அடிப்பவனும், பாதம் கழுவுபவனும் பல்லக்குத் தூக்குபவனும் மட்டுமே ஆட்சியைப் பிடிக்கிறான் என்ற விரக்தி மனநிலை எல்லா நல்லவர்களிடத்திலும் இருக்கிறது. ஆனால் அவர்களிடத்தில் போட்டி, பொறாமை இல்லாததால் அதனை எளிதில் கடந்து போகிறார்கள்.

நடிப்பு என்பது நன்றாகத்தான் இருக்கும் ஆனால் நீடிக்காது. நடித்தவர்கள் அரசியலிலும் வென்றார்கள். ஆனால் அவர்கள் முடிவு? நடித்தவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள் ஆனால் இறுதியில் எப்படிச் செத்தார்கள். நடிகைகள் செழிப்பாக வாழ்ந்தார்கள் ஆனால் வயதான பின் அவர்கள் வாழ்க்கை. நயவஞ்சகத்தோடு கூடிய நடிப்பு நஞ்சை விடக் கொடியது. அதை உற்பத்தி செய்கிறவர்களை உருக்குலைத்து விடும். ஏய்ப்பவர்களுக்கே காலம் என்று எண்ணிவிடாதீர்கள், அது எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதீர்கள் காற்றடிக்கும்போது காகிதம் கட்டிடத்திற்கு மேல் பறக்கும் அது நின்று விட்டால் அக்காகிதம் சாணிக்குள் விழப்போகிறதோ சவதிக்குள் விழப்போகிறதோ தெரியாது வேசம் கலைந்துவிடும் விளைவு மோசமாக இருக்கும்.

நல்லவர்களாக வாழ, வகுப்பறைக்குள் வாருங்கள். ஆசிரியர் வந்தார் எழுந்து நின்றோம், மரியாதை செய்தோம். உண்மையைப் பேசினோம். சீரான உடை உடுத்தினோம். சீருடையால் ஒன்றுப்பட்டோம். ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரையும் மச்சான், மாமன் என்றோம். சாதி, மதம் பாராமல் சகலருடன் பழகி பிறருக்கு உதவினோம். அதனை தாராளமாக ஏற்றுக் கொண்டோம். இது தானே வகுப்பறை கற்றுக் கொடுத்தது. வாழச் சொல்லிக் கொடுத்தது. அதை விட்டுவிட்டு வந்து விட்டோமா? அல்லது வேறு எதையாவது எடுத்துக் கொண்டு வந்துவிட்டோமா. இப்போது சொல்லுங்கள் வகுப்பறையில் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள்! வகுப்பறை உங்களுக்குள் நுழைந்திருக்கிறதா? அது இன்னும் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறதா? சிந்திப்போம்.

“உயிர் தந்தது
தாயின் கருவறை – உன்னை
உயர்த்த வைப்பது நீ
படித்த வகுப்பறை”

ARCHIVES