04

Aug

2023

காதல் புனிதமானது…

காதல் என்பது எதுவெனக் கேட்டேன் மனச்சாட்சி சொன்னது மனதிற்கினியவர்களின் மனம்போல் நடப்பது. நமது அன்பினால் அவர்கள் மனம்போல் பறப்பது. நாம் சுயநலம் துறப்பது, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது. நமது தேவையையும், ஆசையையும் அவர்களிடம் திணித்து அவர்கள் சிறகை முறிப்பதைவிட அவர்கள் பறப்பதற்கு நாம் வானமாவோம். அவர்கள் பாடினால் நாம் கானமாவோம். மனதுக்குள் மழையாவோம். மழை வந்தால் குடையாவோம். மொத்தத்தில் மூச்சாவோம். அவர்கள் முழங்கும் பேச்சாவோம் உலகம் முடியும் வரை அவர்கள் உயிராவோம். ஏனென்றால் உறவுகளுக்குக் காதல் உயிராகும்.

காதல் என்ற வார்த்தை பழைய இலக்கியங்களில் கிடையாது. பழைய இலக்கியங்கள் எல்லாம் காமம் என்ற வார்த்தையால்தான் களிநடனம் புரிந்தது. அப்போதைய காமம் ஆளுமையுள்ளது, அடக்கம் உள்ளது, ஆண்மையுள்ளது, பெண்மை பேணுவது, பிறர் நலம் பேணுவது, உடல் வேட்கையில் ஊன்றி நில்லாமல் மனசுகள் பாடும் மங்கலப் பாடலாக அமைந்தது.

இதனால்தான் உலகத்திலே அதிகமாக வாசிக்கப் படுகின்ற விவிலியத்திலும் ஒரு உன்னத சங்கீதம் உண்டு அதில் காதல் கடவுள் மொழி பேசுகிறது. அடுத்த நிலையில் அமைந்த திருக்குறளிலும் காமத்துப் பால் ஒன்று இல்லாது போனால் அதுவும் சிறுபஞ்சமூலம், புறநானூறு, ஏலாதி என்று ஒரு சிறு வட்டத்திற்குள் தான் அது வட்டமடித்திருக்கும் ஆனால் பண்டைய மக்களின் ஒழுக்க வாழ்க்கையில் காமம் கடவுளானது காதல் வழிபாடானது. இப்போது இன்பத்துப்பாலாக வழங்கப்படுகிறது.

இலக்கியங்கள் வழிகாட்ட இதயங்கள் வழிமொழிய பண்டைய மக்களின் காதல் வாழ்க்கை கடவுள் வழிபாடாக இருந்தது. அது காலப்போக்கில் புறந்தள்ளப்பட்டது. கண்ணியமிக்கது காதலாகவும் கட்டுப்பாடற்றது காமமாகவும் எண்ணப்பட்டது. காதல் காவியமானது காமம் கழிவுகளானது. காதலர்கள் போற்றப்பட்டார்கள் காமத்தில் உள்ளவர்கள் தூற்றப்பட்டார்கள். முறையற்ற காதல்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு அதன் முகத்தில் உமிழப்பட்டது.

இடைக்காலத்தில் திரைப்படங்கள் கூட பார்க்காமல் காதல், பழகாமல் காதல், தனக்குப்பிடித்தவர்கள் அவர்களுக்குப் பிடித்தவர்களுடன் இணைத்;து வைக்கும் அழகிய காதல், நண்பனுக்காக, உடன் பிறப்புக்காக விட்டுக் கொடுக்கும் விடுதலைக் காதல், பெற்றோர்களுக்காகத் தியாகம் செய்யும் பெருந்தன்மைக் காதல் என காதலை கடவுளாகவும். காதலர்கள் பக்தர்களாகவும் வாழ்ந்தார்கள். அதற்கு வயது வரம்பு இருந்தது. வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டது. ஒழுக்கம் மட்டுமே உயர்ந்து நின்றது.

ஆனால் எங்கே தடுமாறியது இந்த இந்திய தேசம்? எங்கே தடம் மாறியது இளைஞர்கள் கூட்டம்? எப்போது நடந்தது இந்த இலக்கணப் பிழை? கண்ணியக் காதல்களெல்லாம் கல்லறைக்குள் புதைக்கப்பட்டு காமம் கச்சைகட்டி களிநடனம் ஆடுகிறது. ஊடகங்கள் எல்லாம் காமத்தை உமிழ்ந்துவிட்டு இளைஞர்களை எச்சிலாக்குகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் பெரும் சீதனமாக செல்லைக் கொடுத்து தப்பான வழியில் அவர்கள் செல்ல தடம்போட்டுக் கொடுக்கிறார்கள். பெற்றோர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, பக்கத்து அறையில் அவர்கள் நடத்தும் பரமபத ஆட்டம், அலைபேசி வழியாக காதல் தொடுப்பது, காமத்தை விதைப்பது, நிர்வாணம் பார்ப்பது, நிர்வாணமாய் நிற்பது, அரை குறை ஆடையில் ஆட்டம் போடுவது அசிங்கமான செயல்களில் மூழ்கித் திளைப்பது. இதை எதையுமே கண்டுகொள்ளாமல் எவர் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் என் பிள்ளை யோக்கியன் என்று சொல்லும் பெற்றோர்களால் தான் இந்தப் பூமி புற்றுநோயால் செத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய இளைஞர் நாகரீகத்தில் முன்னேறி விட்டார்கள். சுய சுதந்திரத்தை அடைந்துவிட்டார்கள் என்று எண்ணிக் கொண்டு, புதை குழியில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிடுவது தப்பா?, கட்டியணைப்பது தப்பா? கை கொடுப்பது தப்பா? வெளிநாட்டில் இல்லையா? என்று தன் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்? நம் கலாச்சாரம் நம் பண்பாட்டில் உயர்ந்து நிற்கிறோம் என்று உரக்க கூவுகிறார்களே உங்களை நீங்களே உரசிப்பாருங்கள் ஆசைப்படுகிறேன்.

குளிர் நாடுகளில் வாழ்கிறவர்கள் உடல் ஊக்கம் பெற தன்னுடைய அன்பின் மிகுதியால் வெப்பத்தைக் கொடுக்க கைகொடுப்பது, கட்டியணைப்பது, முத்தமிடுவது, என அன்பைப் பகிர்வார்கள் நாம் ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறோம். இதன் பிறகும் கட்டியணைத்தால் நம்மோடு இருப்பவர்கள் பற்றி எரிந்து விட மாட்டார்களா? உடலணுக்கள் எல்லாம் உயிர்பெற்று எழுந்து ஊடுருவ எண்ணாதா? எனவே அடுத்தவர்களை ஒப்பிடாதீர்கள். மண்ணுக்கு ஏற்ற மனவாழ்க்கை நடத்துங்கள்.

வெளிநாட்டில் காதலை கண்ணியமாகச் சொல்வார்கள் விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்வார்கள். அது நாகரீகம் நமது திரைப்படத்தில் காட்டுவது போல் இளைஞர்கள் துரத்தித் துரத்தி காதலிப்பது. தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைகக்கூடாது என வெட்டுவது, குத்துவது, ஆஸிட் வீசுவது, இல்லையென்றால் தற்கொலை செய்வது இதுவா காதல்? இது தான் காமத்தின் உச்சம்! இயலாமையின் மிச்சம்.

வெளிநாட்டில் விரும்புவர்கிறவர்களுடன் வாழ்வார்கள் விருப்பம் குறையும்போது அல்லது வேறொருவரை விரும்பும்போது விலகிக் கொள்வார்கள் இதுதான் வாழ்வியல். இங்கே விரும்புவார்கள் அவரையே வெறுப்பார்கள். ஆனால் விலகமாட்டார்கள் அதற்கு காரணம் நமது கலாச்சாரம் தடுக்கும் குடும்பக் கௌரவம் குறையும். எனவே மணந்தவன் இருக்கும்போதே மாற்றான் தோட்டத்திற்கு மனம் அலை பாயும் இதனால் கணவன் கொலை, கைக்குழந்தை கொலை இதுதான் கள்ளக்காதலின் இன்றைய நிலை. இதுவா நம் பண்பாடு? இது நம் பாதகச் செயலின் வெளிப்பாடு?

வெளிநாட்டில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு முதலில் பெற்றோர்கள் உழைக்கக் கற்றுக் கொடுப்பார்கள். தன் நிலை உயர்ந்த பின் அவர்கள் தனக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்வார்கள். நம் நாட்டில் அனைத்துக் குழந்தைகளும் அப்பன் உழைப்பில் வாழ்கிறது. உண்டு கொழுத்த நண்டு வளையில் நில்லாது என்பது போல கறித்திமிரினால் நம் குழந்தைகள் காமத்தை மனசிற்குள் பிரசவிக்கிறது.

அதனால் படிக்கும்போதே காதல் என்ற பெயரில் காமத்தையும் கரியாகப் பூசிக் கொள்கிறார்கள். அசிங்கப்படுகிறது, அதட்டப்படுகிறது அத்தனைபேரையும் தெருவில் நிறுத்துகிறது. பார்த்து வளருங்கள் பாடம் நடத்துங்கள்.எனவே இன்றையத் தலைமுறைகளுக்கு காதலின் புனிதத்தை உணர்த்துங்கள் அது உடல் சார்ந்தது அல்ல. விவிலியப் பிதாமகன், தன் வாழ்நாளில் மதலேன் மரியாளிடம் கொண்ட தூய அன்பு அவரது தொண்டர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. அதியமான் ஒளவையார், மீது கொண்ட அளவற்ற அன்பு இன்னும் தமிழ்தோறும் ஒலிக்கின்றது. காதலைச் சொல்லும் போது கூட கண்ணியமாய் நடந்தவர்கள் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்தப்புரத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று செத்த இடம் தெரியாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.

என் இளைய சமுதாயமே! காதல் வரும் அது காலம் எல்லாம் நம்மை தொடர்ந்து வரும். கண்ணியம் இருக்கும் வரை எத்தனை பேருடனும் பழகலாம்! பேசலாம்! பார்ப்பவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடாது கேட்பவர்களின் இழிச்சொல்படி வாழ்ந்துவிடக் கூடாது. தூய அன்பு, தூய இதயம், தூக்கி நிறுத்துவோம், எல்லோரையும் காதலிப்போம்;. எப்போதும் காதலிப்போம். மனதோடு காதல் ஆனால் உடல் சார்ந்தது அல்ல என்று உணர வைப்போம்! மனமுள்ளவர்களே! உடலை மறந்து வாழ்பவர்களே மற்றவர்களைக் காதலியுங்கள்! காதல் நமக்கு கடவுளாகட்டும்! காதலிப்போம் காதலிக்கப்படுவோம்.

“முத்தம்
அன்பைப் பகிர்வது
ஆசையைத் தீர்ப்பதல்ல”

ARCHIVES