25

Aug

2023

குப்பைகளைக் கொட்டாதீர்கள்…

பூமி பற்றி எரிகிறது. வாழும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை வெட்டிச் சாய்க்கிறார்கள். சாதிப் பேய்களால் சாவின் எண்ணிக்கை அதிகமாகிறது. மதத்திற்கு மதம்பிடித்து மனிதனைக் காலில் போட்டு நசுக்குகிறது. நீதி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கிறது. அநீதி தன் அகோரப் பசியினால் அகப்பட்டவனை எல்லாம் தின்று தீர்க்கிறது. நாடு சுடுகாடாக நகர்ந்து கொண்டிருக்கிறது. காரணம் என்ன? கேட்டுப் பாருங்கள்! விஷ வாயுக்களை விட வேகமாகப் பரவி விஷ வார்த்தைகளால் நாடு வெந்து கொண்டிருக்கிறது.

உரையிலிருந்து கிளம்பும் வாளைவிட, துப்பாக்கியிலிருந்து கிளம்பும் தோட்டாவை விடக் கொடியது. ஒருவன் வாயில் இருந்து புறப்படும் கெட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகள் வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும். இன்று ஒருவன் தன் வாயினால் பற்ற வைக்கும் நெருப்பு எத்தனை பேரை எரிக்கிறது என்று யாருக்குத்; தெரியும்? இன்றையக் காலகட்டத்தில் வாயிலுள்ள வக்கிரமங்கள் கைவழியாக வடிந்து எழுத்துக்களாகவும் குறியீடாகவும் வெளிவந்து எத்தனை பேரைக் குழியில் வைத்து விட்டதென்று தெரியுமா? பாவம் அப்பாவி மனிதர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள்தான் அனைத்து வன்முறைகளுக்கும் பலியாகிறார்கள்.

இந்தச் செய்திகளை யார் பரப்புகிறார்கள்? எப்படிப் பரவுகிறது என்று எண்ணிப்பாருங்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு விஷக் குப்பி இருக்கிறது. இதனை அலைபேசி என்று அழைக்கிறீர்கள் இது அலைபேசி என்பதைவிட வலைபேசி என்றுதான் அழைக்க வேண்டும். நாமே வலியச் சென்று வலைக்குள் மாட்டிக் கொள்ள சாத்தானே அனுப்பிய சாபம் தான் இந்த அலைபேசி. இதில்தானே இன்று மனிதர்களை நாசப்படுத்தும் நச்சுப் பொருட்கள் உருவாகிறது. மானிடச் சமூகம் மெல்ல மெல்ல மறையக் காரணமாகும் மரண சாசனம் இதுதானே!

இப்போது உங்கள் அலைபேசியை கவனியுங்க! எத்தனை செய்திகள் உங்கள் அலைபேசிக்கு வந்திருக்கிறது? எத்தனை செய்திகள் உங்கள் அலைபேசியில் தங்கியிருக்கிறது? உங்கள் அலைபேசிக்கு யார்? யார்? செய்தி அனுப்புகிறார்கள்? என்ன என்ன செய்தியை அனுப்புகிறார்கள்? அது பயனுள்ளதா? இல்லை உங்களைப் பாழாக்குவதா? உண்மையானதா? இல்லை உங்களை முட்டாளாக்குவதா? நாட்டுக்கும் நமக்கும் நல்லது செய்வதா? அல்லது அடுத்தவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதா? நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதா? அல்லது பிறர் வாழ்க்கைக்குக் குழிபறிப்பதா? சமுதாயத்தைப் பழுதுபார்ப்பதா? அல்லது ஏதோ பொழுது போக்குவதா? எதற்காக உங்களுக்கு வந்து இந்தச் செய்தியை அனுப்புகிறார்கள்? அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? உங்கள் நண்பர்கள் பார்வையில் நீங்கள் யார்?

இனிமேல் உங்கள் அலைபேசியை நன்கு கவனியுங்கள், தினந்தோறும் எத்தனை குறுஞ்செய்திகள் உங்கள் அலைபேசிக்கு வருகிறது. அதில் ஆன்மீகம், உண்மையான தகவல்கள், சிரிப்பு, விமர்சனம், பொன்மொழிகள், வாழ்த்துக்கள், அறிவிப்புகள், செய்திகள், பொழுதுபோக்குகள், ஆபாசங்கள், அடுத்தவர்கள் பற்றிய குறைகள், பெயரைக் கெடுக்கின்ற செய்திகள், அறிவுரைகள், விளையாட்டுக்கள் இருக்கிறது! என்றுபாருங்கள். இதை வைத்துப் பிறர் உங்களை என்ன நினைக்கிறார்கள்? என்று உங்களுக்குப் புரியும். உங்கள் மனம் எதில் மயங்கி நிற்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்? எண்ணிப்பாருங்கள்.

உங்கள் அலைபேசியில் எந்தச் செய்தி வேண்டுமானாலும் விழலாம் இதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியைப் போல் மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரிப்பது போல் பிரித்து விடுங்கள் மக்கும் குப்பையை உரமாக்குவது போல் மற்றவர்களுக்குப் பலமாக்குங்கள். மக்காத குப்பையை எரித்துச் சாம்பலாக்குவது போல் அதனை உங்கள் அலைபேசியில் இருந்து அப்புறப் படுத்தி விடுங்கள். உங்கள் அலைபேசியில் சாதி, மதம், பெண்ணடிமைத்தனம், என்ற சாக்கடைகள் கலவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தவறான செய்திகளைத் தருகின்ற தற்குறிகளின் அலைபேசி எண்ணை அடைத்து வையுங்கள். தவறான செய்திகளைத் தருகிறவர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் உறவுத் தரங்கெட்டவர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் உறவை விட மிகவும் தரங்கெட்டது. நீங்கள் தடம் மாறிச் செல்வதற்கு அது பாதை காட்டுவது . உடனே விலகுங்கள். உத்தமனாய் வாழுங்கள்.

இயேசு தன் போதிக்கும் போது சொல்வார் உள்ளே செல்வது எதுவும் உங்களைப் பாதிக்காது உங்களிடம் இருந்து வெளிவருவது மட்டும் தான் உங்கள் குணநலன்களைச் சொல்லும் என்கிறார். அதுபோல உங்கள் அலைபேசியில் எந்தச் செய்தி வேண்டுமானாலும் வரலாம். அது சிலநேரங்களில் சில காற்றடிக்கும்போது குப்பை நம் வீட்டில் வந்து விழுவது போல் விழலாம். ஆனால் நீங்கள் குப்பைகளை அடுத்தவர்களுக்கு மறந்தும் அனுப்பி விடாதீர்கள். சில அறிவுரைகள் கூறுவது போல வரலாம் ஆனால் அதைச் சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? என்று யோசித்துப் பார்த்து விட்டு அனுப்புங்கள். உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் அடுத்தவர்களுக்கும் பிடிக்கும் என்று ஆசைப்பட்டு அவர்களிடம் உங்கள் எண்ணங்களைத்; திணித்து விடாதீர்கள். உங்களுக்கு நேரம் போகவில்லை என்பதற்காக அடுத்தவர்களின் நேரத்தை களவாடி அவர்களுக்கு எரிச்சலை ஊட்டாதீர்கள்.

நீங்கள் ஒரு செய்தியைப் பிறருக்கு அனுப்புமுன் அது முற்றிலும் உண்மையா? என்று தெரிந்து கொள்ளுங்கள். அது நன்மை தருமா? என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அது கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலையில் அது இருந்தால் மட்டுமே அடுத்தவர்களுக்குப் பகிருங்கள். செய்திகளைப் பகிர்வதில் முதிர்ச்சி இருக்க வேண்டும். செய்தி உண்மை என்றாலும் அது நன்மை விளையுமா? என்பதுதான் முக்கியம்.

கடவுள் பக்தனிடம் பேசுவது போல, குரு சீடனிடம் பேசுவது போல, தகப்பன் தன் பிள்ளையிடம் பேசுவது போல, தோழன் தோழிகள் தன் சகாக்களிடம் பேசுவது போல, எதார்த்தங்கள் இருக்க வேண்டும். எந்த குதர்க்கமும்; இருக்கக் கூடாது. அடுத்தவர்கள் விசயத்தில் நாம் எப்போதும் மூக்கை நுழைக்கக் கூடாது. நமக்குத் தேவையில்லாததை நாம் பகிரக் கூடாது. நமது பகையாளியே ஆனாலும் அவர்கள் பற்றிய தவறான தகவல் வந்தாலும் அதையும் பகிரக் கூடாது. நம் பகிர்வுகள் நாம் பண்பாளர் என்பதனைக் காட்ட வேண்டும்.

அலைபேசி என்பது உங்கள் மனம் அதில் எதனை அடைகாத்து வைத்திருக்கிறீர்கள்?. அதிலிருந்து அடுத்தவர்களுக்கு என்ன அள்ளித் தருகிறீர்கள்? எல்லோரும் எப்போதும் உங்கள் அலைபேசியை எட்டிப் பார்க்கலாமா? அதை எடுத்தும் பார்க்கலாமா? உங்கள் அலைபேசிக்குள் உள் நுழைந்தால் அது பூந்தோட்டமா? அல்லது சாக்கடைக் கழிவுகளா? சரியாய் பதில் சொல்லுங்கள். நீங்கள் நேர்மையாளராய் இருந்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளுங்கள். நஞ்சுகள் கலக்காத நல்லவரே! நஞ்சுகளைப் பிறரிடம் கலக்காத நல்லவர்களே! வாழ்த்துக்கள்.

“வார்த்தைகள் வாசமானால்
உள்ளம் பூந்தோட்டமாகும்”

ARCHIVES