09

Oct

2020

குருக்கள் குறைக்கப்படுகிறார்கள்…

“படி.
பரிட்சைக்கல்ல
வாழ்க்கைக்கு…”

இன்று குருக்கள் குறைக்கப்படுகிறார்கள், ஆசிரியர்கள் அதிகப்படுத்தப்படுகிறார்கள். உங்களுக்குத் தலை சுற்றுவது போலத் தோன்றும். இந்தக் கட்டுரைக்கு இரண்டு கதாப் பாத்திரங்களை உருவாக்குகிறேன். அவற்றில் குரு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பவர். ஆசிரியர் பாடங்களைக் கற்றுக் கொடுப்பவர் என வைத்துக் கொள்ளுங்கள் இந்த மனநிலையோடு கட்டுரையைத் தொடருங்கள்.

குருகுலம் மாணவர்கள் தாங்கள் குருவைத்தேடி அவரது இல்லம் சென்று அவர் விருப்பப்படி வாழ்ந்து வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்று வந்தார்கள். குருகுலம் கல்வியாக மாறும்போது இல்லம் வகுப்பறையாகிறது. வாழ்க்கைப் பாடம் அறிவை வளர்க்கும் பாடமாக மாறுகிறது. குரு ஒரு மாணவனிடம் என்ன திறன் இருக்கிறது என அறிந்து அத்திறனில் வளரப் பயிற்சி கொடுப்பார். குரு முடிவு செய்வார். மாணவர் முயற்சி செய்வார் தேர்வு இல்லை வாழ்க்கை இருந்தது.

வகுப்பறைப் பாடம் வந்த பிறகு மாணவர்கள் எதிர்காலத்தைப் பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். முதலிலேயே மகனுக்கு இலக்கை நிர்ணயித்துவிட்டு அதற்குத் தகுந்தபடி உருவாக்குகிறேன் என்று உரித்து எடுக்கிறார்கள். இதனால் இளைய தலைமுறை இருண்டு கிடக்கிறது. அரண்டு கிடக்கிறது வாழ்க்கையில் புரண்டு படுக்கிறது.

குருவின் பணி என்ன? நற்பழக்கத்தைப் புறத்திலும் நற்சிந்தனைகளை அகத்திலும் உருவாக்குவது. சுத்தமாக இருக்கவேண்டும் உண்மையைப் பேச வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். உயிர்களை நேசிக்க வேண்டும், சமத்துவம் காண வேண்டும், சகோதரத்துவம் பேண வேண்டும். இதனை யார் கற்றுக் கொடுக்க வேண்டும்? பெற்றோரும், ஆசிரியரும், சமுதாயமுமே. ஆனால் கற்றுக் கொடுக்கிறார்களா? கற்றுக் கொடுக்க முடிகிறதா? ஓட்டுமொத்த உலகமும் கெட்டுப் போகக் காரணம்? மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடு செய்த பிறகுதான். குருக்கள் குறைக்கப்பட்டார்கள். ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். பாடங்கள் தான் வேதங்கள். மதிப்பெண் மட்டுமே போதும் மற்ற எதுவும் வேண்டாம் எனப் பெற்றோர்கள் நிர்பந்தித்தார்கள் மாணவர்கள் ஆலையில் இட்ட கரும்பாய் ஆட்டி வைக்கப்பட்டார்கள் அதன் விளைவுதான் இந்த அழிவுக்குக் காரணம்.

நல்ல பழக்க வழக்கங்களை யார் கற்றுக் கொடுப்பது? எப்போது கற்றுக் கொடுப்பது? பள்ளியில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கலாம். மீறினால் கண்டிக்கலாம். ஆனால் இப்போது பாடத்திட்டம் கழுத்தை நெறிக்கிறது. சட்டம் ஒழுங்கு சட்டையைப் பிடிக்கிறது. பெற்றோர்கள் ஊடகத்திடம் உளவு சொல்ல அது சமுதாயத்திற்கு சரியாய் கொள்ளி வைக்கிறது.

பெரியவர்கள் நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். நன்முறையில் வளர்த்துவிடுவார்கள். அவர்களோடு பழகும் நேரத்தையும் இப்போது ஆசிரியரோடு அனுப்பி பாடத்தைத் தானே படிக்கச் சொல்லுகிறீர்கள். மாலையில் டியுசன் சனி, ஞாயிறு தனிப் படிப்பு பிறகு எங்கே பெரியோர்களிடம் கற்றுக் கொள்ள முடியும்?

உறவு கெட்டது, மகிழ்வு கெட்டது உடற்பயிற்சி கெட்டது, சுதந்திரம் கெட்டது, பொழுதுபோக்கு பழதாகிப் போனது. நல்ல, கெட்ட நிகழ்ச்சி கிடையாது. மாணவன் என்று வந்தவுடன் படிப்பு, படிப்பு படிப்பு மட்டும்தான்.

பள்ளிக் கல்விக்குத் தொடக்கத்தில் மாணவன் நடந்து வருவான் ஆசிரியர்கள் இருசக்கர வாகனத்தில் வருவார்கள் மாணவன் நினைப்பான் படித்துப் பெரிய ஆளாகி ஆசிரியர் போல வசதியாய் வாழ வேண்டும் என்று. ஆனால் ஆங்கிலக் கல்வி வந்தபிறகு ஆசிரியர்கள் நடந்து வருவார்கள். மாணவர்கள் அனைவரும் வாகனத்தில் வருவார்கள் வசதியாக வருவார்கள். வசதி வந்துவிட்டது. பிறகு எதற்குப் பாடுபட வேண்டும்? பெரியோர்களாய் மாற வேண்டும். இலக்கு இல்லாமல் அம்பு எய்வதற்கா இளைய தலைமுறையைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள்?

படிப்பு என்பது பார்ப்பது, கேட்பது, பழகுவது, அனுபவிப்பது என்பதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் புத்தகப் படிப்பில் மொத்தமும் கிடைத்துவிடாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையிடம் கடந்த ஆண்டு படித்ததில் 6ம் பாடம் என்ன பாடம் என்று கேளுங்கள். எத்தனை பிள்ளைகள் சொல்கிறது என்று பாருங்கள்? தெரியாது. ஆனால் பல் விளக்கிவிட்டுத்தான் காபி குடிக்க வேண்டும் என்பது சாகும் வரை மறக்காது. மறக்கக்கூடாது. நீங்கள் எத்தகையதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறீர்கள்?

பெற்றோர்களே! விழித்துக் கொள்ளுங்கள் படிப்பில்லாமல் உலகப் புகழ் பெற்ற காமராஜ், கக்கன், எடிசன், சச்சின் போன்றோர் உங்கள் குழந்தைகளாக உருவாகலாம் மகிழ்ச்சிதானே! படித்தவர்கள் எல்லாம் மனதிற்குப் பிடித்தவர்களாய் இருக்கிறார்களா! இன்றைய அயோக்கியர்களில் ஏறக்குறைய படித்தவர்கள்தானே! என்பதனைப் புரிந்து கொள்ளுங்களேன் படிக்காத பாமரன் உருவானாலும் பரவாயில்லை படித்த அயோக்கியன் நம் குடும்பத்தில் உருவாகிவிடக் கூடாது. மதிப்பெண் அதிகப் படுத்துவதைவிட மாண்புகளை அதிகப் படுத்துங்கள் எதிர்காலம் எல்லோருக்கும் ஒளிமயமானதாக இருக்கும்.

“கல்வி என்பது
கற்பது அல்ல…தேடல்
தேர்வில் வெற்றியடைவதல்ல
வாழ்வில் வெற்றியடைவது…”

ARCHIVES