18

Oct

2020

குருதினம் (18-10-2020)

“உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி
பருந்தாகாது”

குரு என்ற வார்த்தை இன்று பெயரில் மட்டும் தான் இருக்கிறது. ஒருவர் ஒருவர் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதைவிட அல்லது எனது குரு என்று யாரையும் சொல்லுவதைவிட தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தற்பெருமையும் தான் என்ற அகந்தையும் தான் இன்று தலைவிரித்தாடுகிறது.

இன்னொருவரை ஏணியாகக் கூறுவது இகழ்ச்சி என எண்ணுகிறார்கள். நன்றி மறந்தவர்கள் நடத்தும் நாடகமே இன்று பொதுவெளியில் அதிகமாக அரங்கேறுகிறது. அதனைத்தான் இந்த உலகமும் இரசித்து மகிழ்கிறது.

முன்னொரு காலத்தில் சீறும் சிறப்புமாக ஒரு குருகுலம் இருந்தது. அதில் ஒரு அனாதைச் சிறுவன் வந்து சேர்ந்தான். அவனை மற்றப் பேர் புறக்கணித்ததாலும் அவன் செய்கிற சிறு சிறு தவறுகள் கூட பெரிதுபடுத்தப்பட்டு அவனுக்குத் தண்டனை கிடைத்ததாலும் குருவுக்கு அவன் மீது அதிகமான அன்பும் அக்கறையும் வந்தது. அவன் பக்கம் நின்று அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். பக்க பலமாக நின்று பாதுகாத்து வந்தார். கடல் அலைகளால் ஒதுக்கப்படும் பொருட்கள்தான். மக்கள் கண்ணில் படும்படி கரை வந்து விழும். அதுபோல் அடுத்தவர்களால் அனாதை ஆக்கப்பட்டவன் குருவின் அன்புக்கு நெருக்கமானான்.

காலங்கள் உருண்டோடின. குரு வயதானவுடன் ஒய்வுபெற விரும்பினார். தான் கவனித்து வந்த அத்தனை பொறுப்புகளையும், நிறுவனங்களையும் தனது அருமைச்சீடனிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வுவெடுத்தார். சீடன் நிறுவனத்தின் தலைவரானான்.

இப்போது காட்சிகள் மாறின. சீடனைச் சுற்றி ஆட்கள் அதிகமாகின. ஜால்ராக்கள் பெருகின. உங்களைப்போல் யாரும் சாதித்ததே இல்லை என்று மற்றவர்கள் உசுப்பேத்த இவனும் அதனை உண்மையென்று எண்ணி மயங்கினான். மற்றவர்களைச் சமமாக எண்ணத் தயங்கினான்.

இப்போது மூத்த குருவுக்கு கவலை அதிகமானது. நாம் கண்ணும் கருத்துமாக காத்து வந்த நம் சீடன் இந்தக் களைகளால் காணாமல் போய் விடுவானோ என்ற பயம். ஏனென்றால் இந்தப் பூமியில் புகழின் உச்சியில் இருந்தவர்கள் கூட போரின் வீழ்ச்சியால் அல்ல. புயலினால் அல்ல தற்புகழ்ச்சியினால் வந்த தடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆணவத்தால் அடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள். இவனுக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாதே என எண்ணினார். அவனிடம் நேரிடையாகச் சொல்லத் தயங்கினார் காரணம் எந்த விதத்திலும் அவன் மனம் புண்படக்கூடாது என எண்ணினார்.

ஒருமுறை அந்த நிறுவனத்தின் உயர்ந்த குருவாக இருந்த ஒருவர் இறந்துவிட்டார். பொறுப்பில் இருந்த தம் சீடனை அழைத்து வயது முதிர்ந்த குரு அவர் புகழை எல்லாம் கூறினார். இவன் கேட்டுக் கொண்டே இருந்தான். அருகில் உள்ள ஆசாரி வீட்டுக்குச் சென்று அவரை அடக்கம் செய்ய ஒரு பெட்டி செய்து வாங்கி வரச் சொன்னார்.

இவனும் அருகிலுள்ள ஆசாரியிடம் சென்று விபரத்தைக் கூறினான். ஆசாரியோ குருவைப்பற்றிச் சொல் என்றவுடன் சீடன் கூறினான். அவர் உயர்கல்வி கற்றவர். பல்வேறு நிறுவனங்களைக் கட்டி எழுப்பியவர் அவரது மாணவர்கள் பல திறமைகளைப் பெற்று பல்வேறு நாடுகளில் புகழ்பெற்று விளங்குகிறார்கள் அவர் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர் பதவியில் இருந்தவர்…..

என்று சொல்லும் போதே ஆசாரி கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். கோபமாக முறைத்துப் பார்த்து உனக்கு அறிவில்லையா! உனக்குப் பொழுதுபோக்க நான்தான் கிடைச்சனா? அவன் எந்த மண்ணாங்கட்டியாகவும் இருந்து விட்டுப் போகட்டும்! எனக்கென்ன? எனக்கு அவன் பிணம் உனக்கு பெட்டி வேணும்னா எவ்வளவு நீளம், அகலம்னு மட்டும் சொல்லு என்றார்.

எங்கோ பளிரென்று அடி விழுந்தது போல் உணர்ந்தான் சீடன். மனித அறிவு இவ்வளவுதானா? இதற்காகவா இவ்வளவு திமிரோடு நடந்தோம் என்று கூனிக் குறுகிப்போனான். இப்போது சீடனும் ஒரு சவப்பெட்டி செய்தான் பிணத்திற்கு அல்ல அவன் தலைக்கனத்திற்கு மீண்டும் சீடனாகவே மாறிவிட்டான்.

கொடுப்பதில் குருவாய் இருப்போம். பெருவதில் சீடனாய் இருப்போம். மொத்தத்தில் மனித நேயத்தோடு இருப்போம்.

“முருங்கை பருத்தாலும்
தூணாக முடியாது
மூத்தோர் சொல் கேளாதவன்
முழு மனிதனாக முடியாது”

ARCHIVES