10

May

2022

சவப்பெட்டியோடு எதற்கு சகவாசம்…

காலத்திற்கேற்ப மனிதன் கவர்ச்சிகளும் கருத்தாக்கங்களும் கட்டி இழுப்பவைகளும், கஷ்ட நேரங்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்கள் மாறி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாடகக் கொட்டகைகள் பின்பு திரையரங்குகள், திருவிழாக்கள், தேவைப்படும்போது சந்தைகள் சர்க்கஸ் கூடாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரிந்தார்கள் கொரோனா வந்தபிறகு எங்கும் கூட்டம் கூடக்கூடாது என்று கூறிவிட்டார்கள். ஆனால் மருத்துவமனைகளில் மட்டும் எப்போதும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆஸ்பத்திரிகள் மட்டும் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. மருத்துவர்களுக்கு மட்டுமே பணமழைப் பந்தல்கள் மற்றவர்கள் எல்லாம் வயிறு காய்ந்து வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் என்ன? நம்மால் கண்டுபிடிக்க முடிகிறதா? முன்னொரு காலத்தில் மூத்தவர்களுக்கு காலம் போன கடைசியில் வந்த வியாதிகள் எல்லாம் இப்போது தொட்டில் குழந்தைகளிடத்திலேயே தொடங்க ஆரம்பித்துவிட்டது. அத்திப்பூ பூத்தாற்போன்று வந்த வியாதிகள் எல்லாம் இப்போது பட்டி தொட்டியெல்லாம் பரவிக்கிடக்கிறது. இதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் முக்கிய காரணம் நமது நடுவீட்டில் நாற்காலி போட்டு மரியாதையாக வைத்திருக்கும் குளிர் சாதனப் பெட்டி (Refrigerator) இது வந்த பிறகு வேலை எளிதாக்குவது போல் சாவுக்கு வலை விரித்துவிட்டது. கெட்டுப்போன பொருட்களையெல்லாம் கெடாதது போல நமக்கு உணர வைத்து உடம்பைக்கெட வைக்கும் உடனிருந்து கொல்லும் ஆட்கொல்லி ஆகிவிட்டது. பொருட்கள், காய்கறிகள், மாவுகள், கேக்குகள் என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கெட்டுப்போன பொருளையெல்லாம் கெடாத பொருளாகக் காட்டி நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் சவப்பெட்டியானது.

நம்முடனே இருந்து நல்லவன் போல் நடித்து நம்மைக் கொல்லும் நண்பனைத் துரோகி என்றே தூற்றுகிறோம். தூரத்தில் வரும்போதே ஒதுங்குகிறோம். ஆனால் நம் வீட்டுக்குள்ளேயே இருந்து நல்லது செய்வதுபோல் இருந்து கொண்டு நாளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் குளிர்வித்துக் கொல்லுகின்ற அந்தச் சவப்பெட்டியோடு நமக்கு சகவாசம் ஏன்?

இன்று காலையும், இரவும் பெரும்பான்மையான வீடுகளில் இட்லியோ, தோசையோ உணவாகக் கொள்கிறோம். இவைதான் நமக்கு எமனாக அமைகிறது என்று நாம் அறியாமல் இருப்பதுதான் பல்வேறு நோய்க்குக் காரணம். உணவே விஷமாக மாறி வாந்தியெடுத்தல், வயிற்றோட்டம், காய்ச்சல், குடல் புற்றுநோய், அஜிரணக்கோளாறு, மூச்சுத் திணரல், அலர்ஜி, உடல் பருமன் ஆதல், சர்க்கரை வியாதி, மூலம், கை, கால் மூட்டு வலிகள் போன்றவை பெரும்பாலான மனிதர்களை இன்று ஆட்டிப்படைக்கிறது இதற்கு காரணம் என்ன?

இன்று தவறான முறையில் தயாரிக்கப்படும் இட்லி, தோசைகளே. இன்று குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து வைத்து பலநாள் தோசை, இட்லி தயாரித்து உண்கிறோம். பத்துப் பதினைந்து நாட்கள் அந்த மாவை வெளியில் வைத்துப் பாருங்கள் ஒருவர் கூட வீட்டிற்குள் உட்கார முடியாது. வீட்டை விட்டு ஒடிப்போய் விடுவீர்கள். ஆனால் அந்தப் புளிப்பே உங்களுக்குத் தெரியாமல் சுவையில் வராமல் இருக்கும். ஆனால் மறைந்திருந்து தாக்கும் கொலைகாரனைப் போல புளிப்பை மறைத்து உடம்பைத் தாக்கும் புதிய போர்களம் இது. இதனால் இந்தப்புளிப்பு உடம்புக்குள் போகப்போக அது கொழுப்பாக மாறுகிறது. இந்தக் கொழுப்பு கல்லாக மாறி சீறுநீரகக் கல்லாக, பித்தப்பையில் கல்லாக, கல்லீரலில் கல்லாக மாறி வருகிறது. சிலருக்கு இதுவே உடல் பருமனைக் கொடுத்து காலப்போக்கில் கால், கை வலியாக, கணுக்கால் வீக்கமாக இருந்து விடுகிறது.

எனவே சவப்பெட்டியை நடுவீட்டில் வைத்திருந்தாலும் அதோடு சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். இட்லி, தோசை எல்லாம் மாவுகளை அவ்வப்போது தயாரித்து அவ்வப்போது சாப்பிடுங்கள். என்றைக்கும் இட்லி தோசை சாப்பிட வேண்டுமா? ஒரு நாள் இட்லி, ஒரு நாள் தோசை என்பது போல இடியாப்பம், புட்டு, கழி, கூழ், கஞ்சி, உப்புமா என்று கலவை முறையில் சாப்பிடுங்கள். இட்லி, தோசைக்குக்கூட சோளம், கம்பு, கேழ்வரகு என விதவிதமாகப் பயன்படுத்தி வித்தியாசமாகச் சாப்பிடுங்கள். இட்லியிலும், கலர் இட்லி, பொடி இட்லி, கருப்பு இட்லி, அதாவது உளுந்தை தோலோடு அறைந்துச் சாப்பிடுவது குளிர்ச்சியைத் தரும். ஆகவே உணவில் கவனம் செலுத்துவோம் உடம்பில் சுகாதாரம் பேணுவோம்.

இப்போது கோடைக்காலம் வெயில் அதிகமாக வாட்டுகிறது. எனவே குளிர்ச்சியாகக் குடிக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்காதீர்கள். அது நாடி நரம்புக்கே ஆபத்தானது. இயற்கை உணவிற்குத் திரும்புங்கள் இயல்புக்கேற்ற உணவினை அருந்துங்கள் மூத்தோர்கள் பழக்கத்தில் இருந்த உணவினை மூத்தோர்கள் பயன்படுத்திய முறையிலேயே நீங்களும் தயாரித்து உண்டு உங்கள் ஆயுளை அதிகப்படுத்துங்கள். வாகனத்தில் வேகமாகப் போகிறவர்கள் விரைவில் மரணத்தைத் தழுவுவதுபோல பாஸ்டு புட் என்ற பெயரில் பாயிசனைச் சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். வேலையை எளிதாக்குகிறோம் என்ற பெயரில் இந்த கலிகாலத்தில் குறைந்த வயதிலேயே நாம் சவக்குழி தோண்டிக் கொள்கிறோம். உடம்பு சூடு குறைந்துவிட்டால் உயிர் போய்விட்டது என்று அர்த்தம். பிறகு ஏன் குளிர் சாதனத்தோடு குடும்பம் நடத்துகிறீர்கள்? உடம்பைப் பெட்டிக்குள் வைக்க ஒத்திகை பார்க்கவா? உங்கள் ஆயுள் அதிகமாக நீங்கள் ஒதுக்க வேண்டியது உங்கள் குளிர்சாதனப்பெட்டியையே! அது உங்களுக்கு எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் தான் உங்கள் சவப்பெட்டி இருக்கும். சுதாரியுங்கள். சுகாதாராமான உலகிற்குள் வாருங்கள்.

“குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை
எடுத்து அருந்தினால்
உங்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியது வரும்”

ARCHIVES