06

Sep

2021

தலிபான்கள்…

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தானே என்று உங்கள் மனம் அலை பாயலாம். நான் அதனைக் கூறவில்லை. பெண்களுக்குச் சமத்துவமும், உரிமையும் கொடுக்காதவர்கள் அத்தனைபேருமே தலிபான்கள் தான். அவர்கள் கொள்கைகளில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. தனியாக எங்கும் போகக் கூடாது சென்றாலும் தன்னை மூடிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

இதனடிப்படையில் பார்க்கும்போது ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல ஆங்காங்கே தலிபான்களும் நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணைச் சமமாக மதிக்காத அத்தனை பேரும் தலிபான்களே.

பெண்ணை எப்படித் தனியாக அனுப்புவது? பெண்கள் வேலைக்குப் போய்தான் ஆக வேண்டுமா? பெண்ணுக்கு எதற்குக் கல்லூரிப் படிப்பு? என்றெல்லாம் கேள்வி கேட்பதை உங்கள் காதுகளில் கேட்டிருப்பீர்கள் அவர்கள்தான் உண்மையான தலிபான்கள்.

நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடிகர் அஜித் ஒரு வசனம் பேசுவார் “பொண்ணுங்க ‘நோ’ சொன்னால் ‘நோ’ன்னுதான் அர்த்தம் அந்தப் பொண்ணு தெரிஞ்சவளா இருக்கலாம் தெரியாதவளாக இருக்கலாம். கேர்ள் பிரண்டா இருக்கலாம் லவ்வரா இருக்கலாம், குடிச்சிருக்கலாம் செக்ஸ் ஒர்க்கரா இருக்கலாம் ஏன் தன் மனைவியாகக் கூட இருக்கலாம். ஆனா அவங்க “நோ சொன்னா நோன்னு தான் அர்த்தம்” என்பார் என அந்தத் திரைப்படம் பேசுகிறது.

பெண்களை ஒரு பொருளாக மட்டும் சித்தரிக்கிற, எண்ணுகிற ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு ஒரு சவுக்கடி என்னைப் பொறுத்தமட்டில் No Means No தான் அதனைத் தாண்டி அடக்குமுறையிலோ அல்லது ஆணாதிக்கத் திமிறிலோ சொல்லப்படுகிற, செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் அத்து மீறல்கள்தான். அவர்கள் தான் தலிபான்கள்.

பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்குச் சொல்கிறேன். பெண்ணுக்குத் தனிமையின் திடத்தைக் கற்றுக் கொடுங்கள். முடியும், முடியாது எனத் துணிந்து பேசக் கற்றுக் கொடுங்கள். பிடிக்கும் பிடிக்காது என்று துணிந்து பேசக் கற்றுக்கொடுங்கள், யாருக்கும் அடிமையாகாமல் யாரையும் சார்ந்து நில்லாமல் மனதில் பட்டதைத் துணிந்து பேசக் கற்றுக் கொடுங்கள் இல்லையென்றால் நீங்களும் தலிபான்களே.

யாரையும் பார்ப்பதற்குக் கண்கள் கொடுத்திருக்கலாம் அளவுக்கு மீறிப் பார்க்காமல் அடக்கி வாசிக்க வேண்டும். அருவருப்பாகப் பெண்களைப் பார்க்கிற, சீண்டுகிற, கேலிபேசுகிற, பொருட்களைத் தூக்கி வீசுகின்ற அத்தனை பேரும் தலிபான்களே.

தான் நேசிக்கிற நபர்களை முற்றிலும் நம்புகிற மனம் படைத்தவர்கள் பெண்கள். ஆகவே சில நேரங்களில் அன்பின் மிகுதியால் தனது அந்தரங்கத்தைக் கூட மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வார்கள். அதனையே ஆயுதமாகக் கொண்டு அவர்களை மிரட்டிப் பணியவைக்கிற, பயமுறுத்துகிற, அத்தனைபேரும் தலிபான்களே.

காதல் என்பது மனிதனின் வயதில் வருகின்ற வாலிபப் பூ. ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒரு பெண்ணைக் கவரும்போது அவள் நோ சொன்னால் விட்டுவிடாமல் அவளைத் தொடர்ந்து துரத்தி, மிரட்டி, ஏன் ஆசிட் ஊற்றுகிற அளவுக்குப் போகிற மிருகங்கள் அத்தனையும் தலிபான்களே.

தன்னுடைய செல்வாக்கினால், பணப்பலத்தால் அதிகாரப்பலத்தால், ஏழ்மையில், இயலாமையில், ஊமையாக வாழ்கின்ற அப்பாவிப் பெண்களைத் தன் ஆசைக்கு உட்படுத்திச் சீரழிக்கிற அத்தனை ஆண்களும் தலிபான்களே…

சாதியின் அடிப்படையின் ஒரு பெண்ணை மட்டம் தட்டி உட்கார வைப்பது அல்லது பெண் தானே! நாம் ஏன் கேட்க வேண்டும் என்று பெண்கள் பதவியில் இருந்தும் அவளை மட்டம் தட்டும் மட்டரகமான அத்தனை ஆண்களும் தலிபான்களே…

தன்னுடைய படைப்பு மக்கள் மத்தியில் விலைபோக வேண்டும் என்பதற்காகப் பெண்களை ஆடை அவிழ்த்து அரை நிர்வாணமாகக் காட்டி தன்னுடைய புகழையும், கல்லாப் பெட்டியையும் நிரப்பத் தன்வீட்டுப் பெண்களைத் தவிர மற்ற அனைவரையும் போதைப் பொருளாகப் பார்க்கின்ற திரைத்துறையைச் சார்ந்த அத்தனை பேர்களும் தலிபான்களே.

குரு என்ற பெயரில், திறமை படைத்தவன் என்ற நிலையில் பெண்களின் பலகீனத்தைப் பயன்படுத்தி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கின்ற ஈனப்பிறவிகளும் தலிபான்கள்தான்.

தன் மனைவியையே சந்தேகப்படுகின்ற, அடக்கி வைக்க ஆசைப்படுகின்ற தன் மனைவியின் அலைபேசியை அவள் இல்லாதபோது ஆராய்ச்சி செய்கின்ற ஆண்மையற்றவர்களும் தலிபான்களே.

பெண்களைத் திருட்டுத்தனமாக அந்தரங்கங்களை இரசிக்கின்றவர்கள் கிறுக்குத்தனமான தலிபான்கள்.

அன்பிற்கினியவர்களே ஒரு பெண் நம்மைப் பார்க்கும்போது நாணம் என்ற பெயரில் நம் கண்களைப் பார்க்கத் தயங்குவாள் அவ்வாறு பார்க்கும் போது நம் கண்களும் அவர்கள் கண்களைப் பார்க்க வேண்டும். அதற்கு கீழ் இறங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனை விட்டு கீழே இறங்கி கழுத்துக்கு வந்தால் நீங்களும் கேவலமான தலிபான்களே!.

ஆகவே நமது வீட்டிலிருந்து நாம் ஆரம்பிப்போம் பெண்களை மதிக்கும் விவேகானந்தனைப் போல் வீட்டிலிருந்து புறப்படும் பெண்களுக்காகப் போராடுவோம். பெண்ணீயப் போராளியாக நம்மை மாற்றிக் கொள்வோம். என் பொண்ணு எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த அப்பாவுக்குதான் பிறக்க வேண்டும் எனச் சொல்ல வேண்டும் என் மனைவி மறுபடியும் மானிடப் பிறவி இருந்ததென்றால் இருவரும் பிரியாமல் இருக்கவேண்டும் என எண்ணிவிட்டால் அதுதான் ஆண்மையின் அடையாளம் மற்றதெல்லாம் மடத்தனம்.

இப்போது சொல்லுங்கள் நம்மைச் சுற்றி எத்தனை தலிபான்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? இவர்களை அப்புறப்படுத்துங்கள். அதனைவிட்டுவிட்டு அடுத்த வீட்டு ஆப்கானிஸ்தானின் தலிபான்களை விமர்சிக்க நீங்களும் நானும் யார்?

“ஒரு பெண் உன்னைப் பார்க்கும் போது – ஒரு
நம்பிக்கை வந்தால் உண்மையிலே நீ தான் ஆண்மகன்”

ARCHIVES