02

Dec

2022

நல்லதோர் வீணை செய்து…

நாற்பது ஆண்டுகளுக்கு முன் தம் கையில் குழந்தைகள் தவழ்வதைத் தவமாய் எண்ணிக்கொண்டிருந்தோம். அதனைக் கிள்ளுவதும் கொஞ்சுவதுமே நமக்குக் கிளர்ச்சி தருவதாக எண்ணினோம். புகைப்படத்திலெல்லாம் குழந்தையோடு இருப்பதுபோல் காட்சி தந்தோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கொண்டாடி மகிழ்ந்தோம். குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மாவின் முகம் ஆறுதலாயிருந்தது. அப்பாவின் தோள்கள் வானம் தொட வசதியாய் இருந்தது. அக்காளின் விரல்கள் அருகிலுள்ள இடங்களைப் பார்க்கக் கலங்கரை விளக்காய் இருந்தது. அண்ணாவின் பாதுகாப்பு எதனையும் துணிந்து செய்ய வசதியாக இருந்தது. இப்படித்தான் குழந்தைகள் வளர்ந்தது. குதுகலித்து மகிழ்ந்தது.

ஆனால் நாளும் நகர்ந்தது நாகரீகம் பெருகியது குழந்தைகளைக் கொஞ்சுகின்ற கரங்களில் செல்கள் சிணுங்க ஆரம்பித்தது. குழந்தைகளை முத்தமிட வேண்டிய பொழுது எல்லாம் செல்கள் சத்தமிட்டுக் கொண்டு இருந்தது. இடுப்பு அறையில் இருக்க வேண்டிய குழந்தைகள் தரையில் கிடத்தப்பட்டது. தன்னைத்தேடி வராத படிக்கு அதற்கும் ஒரு செல்லைக் கொடுத்து தொலைவில் நிறுத்தப்பட்டது. தொலைவில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசி அருகிலிருப்பவர்களையும் அருகில் வராதபடி அப்புறப்படுத்திவிட்டது. இது காலத்தின் கொடுமை அலைபேசியில் நம்பரைத் தேடித் தேடிய நம்மைத் தொலைத்து விட்டோம். தூரத்தில் இருந்தும் ஒருவரை ஒருவர் நெஞ்சுக்குள் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இன்று அருகில் இருப்பவரை மறந்து விட்டு செல்பேசியில் மூழ்கி விட்டோம். செல்லால் செத்துப் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் மதுரை ஐகோர்ட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகள் வளர்ப்பதில் செல் வந்தபிறகு தவறிவிட்டார்கள். பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் வளர்ப்பதில் அக்கறை இல்லை என்ற ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. பெற்றோர்கள் ஒரு காலத்தில் பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்தார்கள் இன்றோ செல்லைக் கொடுத்துக் கெடுக்கிறார்கள். தமக்குத் தொந்தரவாய் இருக்குமென்று ஒரு செல்லைக் கொடுத்து அதனைத் தனிமைப்படுத்துகிறார்கள். ஆனால் அது இன்று சமுதாயத்திற்குத் தொந்தரவாக வளர்ந்து விடுகிறது என்பதனை மறந்து விடுகிறார்கள். தன்னைத் தனிமைப்படுத்துவதால் சமுதாயத்தை அது மறந்து விடுகிறது. சங்கமிக்க மறுத்துவிடுகிறது. இதனை இன்று பெற்றோர்கள் புரிந்து கொள்ளாததால்தான் அது பெரும் பிழையாகி பூமியை நாசப்படுத்துகிறது.

இதனைத்தான் பாரதி சொன்னான் நல்லதோர் வீணை செய்து அதனை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!? என்பான். இறைவன் தன்னையே வரமாக மண்ணில் வர உங்கள் மழலையாகப் பூமிக்கு வந்துள்ளான். அதற்கு உங்கள் தழுவல்கள்தான் ஆராதனை உங்கள் தாலாட்டுதான் அர்ச்சனை அதனோடு இருக்கிற நேரம் எல்லாம் நீங்கள் பூஜையில் பொழுதைக் கழிக்கிறீர்கள் அதனை வளர்த்தெடுப்பது இந்தப் பூமியில் உங்கள் அவதாரம். வளர்க்கத் தெரியாத பெற்றோர்களால் வாங்கி வந்த குழந்தைகள் எல்லாம் வரமல்ல! உங்கள் குடும்பம் வழியாகப் பூமிக்கு வந்த சாபம் அத்தகைய குழந்தைகள் உங்கள் குடும்பத்தில் இருந்து வந்தால் அது பூமிக்குப் பாரம் சாமிக்குத் தூரம்.

பெற்றோர்களே! பிள்ளைகள் வளர்ப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுங்கள் அலட்சியப் போக்கு அதிகமாகவே இருக்கிறது. செல்லைக் கொடுத்து விளையாடவீட்டீர்கள். அவன் இப்போது அவனது வாழ்க்கையில் மட்டுமல்ல பலரது வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கற்க வேண்டியதை விட்டுவிட்டு விலக்க வேண்டியதைத் தேடி எடுத்துத் திளைத்து நிற்கிறான். ஆசிரியர்களிடம் அகப்படும் போது திருத்த முனையும் போது பெற்றோர்கள் குறுக்கே விழுந்து அவனைக் காப்பாற்றி விடுகிறீர்கள். அதுமட்டுமல்ல என் பிள்ளை புத்தன், ஏசு, காந்தி என்று போலித்தனமாக நம்புகிறீர்கள். இதனால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. இளைய சமுதாயத்தை இப்போது இனம் கண்டவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே ஆனால் அவர்களால் திருத்த முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள். அரசு நெருக்குகிறது. பெற்றோர்கள் மறுக்கிறார்கள். சமுதாயம் பழிக்கிறது என்ன செய்ய? என்று தன் இயலாமையால் ஆசிரியர் சமுதாயம் புழுங்கிச் சாகிறது. இப்படியே போனால் இந்தப் பூமியை யாரும் அழிக்க வேண்டாம். தன்னைத்தானே விரைவில் அழித்துக்கொள்ளும். தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்ளும்.

இதற்குமுன் குழந்தைகள் இறைவனின் வரமாக எண்ணியப் பெற்றோர்கள் இப்போது குழந்தைகள் இரவல் வாங்கிய பொருட்களாக அலட்சியமாக எண்ணுகிறார்கள். பாசம் என்ற பெயரில் படுகுழியில் தள்ளுகிறார்கள். பாதுகாக்கிறோம் என நினைத்து பாதகச் செயலை மறைக்கிறார்கள். குற்றவாளிகளைக் குழந்தை உருவில் உருவாக்குகிறார்கள். உடைந்த குடும்பங்களிலிருந்து உடைந்த மனங்களைக் கொண்ட குழந்தைகள் உருவாகி சமுதாயத்தை உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே, சமுதாயமே! கரம் கூப்பிக் கேட்கிறேன். அலட்சியம் வேண்டாம் பிள்ளைகளைச் சான்றோராய் வளர்க்கச் சபதம் எடுப்போம். ஆலயம் அமைப்பதை விட, சாமியைத் தொழுவதைவிட குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பதே இறைவனுக்குச் செய்தத் தொண்டாகும். பூமிக்குச் செய்த புண்ணியமாகும் வாழ்க வளமுடன்!.

“செல்லின் சத்தம்
குழந்தைகளின் முத்தத்தைத்
தடுக்கிறது”.

ARCHIVES