09

Dec

2022

பாதை மாறிய பயணங்கள்….

இதனைப் பற்றி எழுதும்போது மட்டும் எப்போதும் என் பேனா முனை ஈரமாகவே இருக்கும் அது இரக்கத்தின் ஈரம் அல்ல. அரக்கத்தின் கொடூரம். என் பேனா வடிப்பது கண்ணீர் அல்ல. இரத்தத் துளிகள். இதயம் இறுகி, இரத்தக் கண்ணீர் வடிக்கும். ஆம் இன்று இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் புரையோடுப் போயிருக்கும் போதைப் பழக்கம். இது புற்று நோயை விடக் கொடுமையாக இன்று இளைய சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கண்றாவிகள் கண்முன்னால் நடந்தாலும் கையில்லாத ஊமையின் தன் கழுத்தில் கடிக்கும் கட்டெறும்பை தடுக்க முடியாது தவிப்பது போல் இந்தச் சமுதாயம் கெட்டுக் குட்டிச் சுவராவதைத் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. புற்றுநோய் எவ்வாறு சிறு புண்ணாக ஆரம்பித்து புரையோடி உடலைச் சிதைத்து உயிரைப் பறிப்பதுபோல் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மானுடத்தை வீழ்த்தி மண்ணோடு மண்ணாக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் நற்பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் நாற்றங்கால் பள்ளிக் கூடாரங்களே! அந்தப் பள்ளிக் கூடங்களே இன்று பாழாகிக் கிடக்கிறது. கற்றுக் கொடுக்கும் ஆசிரியரைக் கையைக் கட்டி விட்டு வாயைப் பொத்தி விட்டு வித்தையைக் காட்டு என்று சொல்லுவது வீணர்களின் வாதமல்லவா! அல்லது விபரமற்றவர்களின் கூற்றல்லவா? இதற்கு யார் காரணம்?

ஒரு காலத்தில் மாணவன் தவறு செய்யும்போது ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். அதனை மாணவன் வீட்டில் சொல்ல அச்சப்படுவான். காரணம் வீட்டில் சொன்னால் நீ என்ன தப்பு செய்தாய்? என்று கேட்டு இன்னும் இரண்டு அடி அடிப்பார்கள் ஏனென்றால் ஆசிரியர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என அன்றையச் சமுதாயம் நம்பியது. அதுபோல் சமுதாயமும் நன்றாக இருந்தது. ஆனால் இன்று மாணவன் வீட்டில் வந்து சொல்லவும் பெற்றோர் சொல்லும் பதில் என் பிள்ளையை எப்படி அடிக்கலாம்? என்று கேட்டவுடனே மாணவனுக்கு எகத்தாளம் ஆகிவிடுகிறது. அவனை மேலும் மேலும் தப்புச் செய்யத் துண்டுகிறது.

அன்புப் பெற்றோர்களே உங்கள் ஆஸ்திக்குத்தான் உங்கள் குழந்தை பொதுவாக கிராமத்தில் சொல்வார்கள் நமக்குக் கொள்ளி வைக்க ஒரு குழந்தை வேண்டும் என்பார்கள். ஆனால் இன்று குழந்தைகள் தப்பு செய்யும்போது அதனைத் திருத்தா விட்டால் உயிரோடு அவனுக்கு நீங்கள் கொள்ளி வைக்கும் கொலைக் குற்றத்திற்கு ஆளாவீர்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

நமது முதல்வர் போதையில்லாத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனச் சூளுரைத்தார். ஆனால் இன்று தமிழகம் எப்படி இருக்கிறது? ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இன்றைய மாணவர்களுக்கு எளிதில் போதைப் பொருள் கிடைக்க யார் காரணம்? தயாரிப்பவர்களா? தடுக்கத் தயங்குபவர்களா? தரம் தாழ்ந்தவர்களா? தடுமாறியவர்களா? தடம் மாறியவர்களா? இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலம் என்னாவது? பள்ளிக் கூடங்கள் அருகில் டாஸ்மார்க் கூட இருக்கக் கூடாது என சட்டங்கள் போட்டுவிட்டு பள்ளியின் வாசலிலே இன்று கொண்டு வந்து கொடுக்கும் கொடியவர்களை இன்று அடக்கி வைக்காதது ஏன்?

இன்றைய இளைய சமுதாயம் தனது மானசீகத் தலைவராக எண்ணுகின்ற நடிகர்கள் திரைப்படங்களில் முழுவதும் புகைபிடிப்பதும் போதையில் இருப்பது போலவும் காட்டுகிறார்களே! இதனை தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் துப்பில்லையா? இல்லை துணிவில்லையா? அப்படித்தான் திரைத்துறை வளர வேண்டுமென்றால் அப்படி ஒரு துறை தமிழ்நாட்டிற்குத் தேவையே இல்லையே பொழுதுபோக்கு அம்சங்கள் சமுதாயத்தைப் பழுதுபார்க்க வேண்டுமே தவிர பாழ்படுத்தி விடக்கூடாது.

திரைப்படத்தில் காக்கி உடை அணிந்து கொண்டு கஞ்சாப் போடுவது போலவும், காவி உடை அணிந்து காமக் களியாட்டம் நடத்துவது போலவும் காட்டுவது அந்தந்த உடைக்கு உரிய மரியாதையே போய்விட்டது. அதனால் இன்று பள்ளிச் சீருடை அணிந்தே குடித்துக் கொண்டிருக்கின்ற காட்சிகளில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. புத்தகம் கொண்டு வர வேண்டிய பைகளில் இன்று போதைப் பொருள் பொட்டலமாகக் கிடக்கிறது. புத்தியைக் கூர்மையாக்க வேண்டிய நிலையில் போதை மயக்கத்தில் புதையுண்டு கிடக்கிறது.தட்டிக் கேட்கின்ற ஆசிரியர்களையும் தடி கொண்டு தாக்கும் தரங்கெட்ட செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாணவிகளைக் காக்க வந்த போக்சோ சட்டம் இப்போது பல நேரங்களில் அவர்கள் தவறுசெய்து தட்டிக் கேட்க ஆசிரியர் துணிந்தால் அவர்களை அரட்டுவதற்கும் மிரட்டுவதற்கும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதனால் நேர்மையான ஆசிரியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்குகிற நாசமாய் போன நிலையில்தான் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.

போதைப்பொருள் என்பது தொடக்கக் காலத்தில் இருந்தே தான் இருந்து வருகிறது. ஆனால் அதனைக் குற்றச் செயலாக எண்ணிப்பார்த்தார்கள். எட்ட நிற்கச் சொல்லி எதிரியைப் போல் எண்ணி விரட்டி அடித்தார்கள். வீட்டுப் பெண்கள். ஆனால் இன்று நடுவீட்டில் அமர்ந்து குடிப்பதை நாகரீகமாக்கிவிட்டார்கள். இந்த நாசமாய்ப் போனவர்கள். குழந்தைகள் இருக்கும்போது குடிக்கின்ற கீழ் மக்கள் ஆகிவிட்டார்கள். சந்தோசமா! குடி சங்கடமா! குடி இவர்களையெல்லாம் உயிரோடு புதைக்க வேண்டும் அதற்கு வெட்ட வேண்டும் ஒரு பெரிய குழி!

உலகப் பொருளாதாரச் சந்தையெல்லாம் விஞ்சி நிற்கின்றது. டாஸ்மார்க் விற்பனை இதில்தான் இன்றைய அரசாங்கம் வாழ்கிறது என நிலையிருந்தால் அந்த அரசாங்கம் வாழவே வேண்டாம் செத்துத் தொலையட்டும், தாய்மார்களின் கண்ணீரில்தான் இந்நாட்டை கட்டமைக்க வேண்டுமென்றால் அந்த நாடு கட்டையிலே வேகட்டும்.

அன்புமிக்கவர்களே எதிர்காலச் சமுதாயம் இருளை நோக்கிப் பயணிக்கிறது. தனக்குரிய குழியை குடி என்ற பெயரில் தானே வெட்டிக்கொள்கிறது. சொக்கமென நினைத்து நரகத்தை நேசிக்கிறது. விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப்போல் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறது. இதனைத் தடுக்க வேண்டும். தாமதிக்க வேண்டாம், தமிழகமே தள்ளாடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தாய்மார்களின் கண்ணீர் துடைக்கவேண்டும். துயர் துடைப்போம், தூய வாழ்வு வாழ்வோம் குடிகளுக்கு குழிவெட்டுவோம் குழந்தைகளை அதிலிருந்து மீட்டெடுப்போம். ஊடகங்களை சலவை செய்வோம். நல்லவைகளை மானிடத்திற்குக் கிடத்த சல்லடை வைத்து சலித்தெடுப்போம். முன்மாதிரியாய் வாழ்வைத் தொடங்குவோம். நாமே முன்னெடுப்போம் நான் ரெடி.. நீங்க…..

“உப்பே சாரமற்றுப்போனால் – வேறு
எதனால் சாரம் பெறும் – தெருவில்
கொட்டப்பட்டு மிதிபடும்”

-விவிலியம்

ARCHIVES