16

Dec

2022

நான் எனும் அகந்தை…

உலகம் முழுவதும் நெஞ்சை உதைத்துக் கொண்டிருக்கிற அனல் பறக்கும் கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அணிதான் இறுதிப்போட்டிக்கு வரும் அந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு வரும் என்று ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு காட்சி உள்ளத்தை உலுக்கியது.

அதாவது கால்பந்தின் பிதாமகன் ஏகோபித்த ரசிகர்களின் இதயம் கவர்ந்தவன் போர்ச்சுகல் கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் ரொனோல்டோ ஒரு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ஏனோ நடுவரால் போட்டியின் போது விதியை மீறியதற்காக அல்ல. நன்னடத்தையில் இருந்து தவறியதற்காகக் கால்பந்தாட்டம் நடக்கும்போது சிறிது நேரம் அவரை வெளியே வரச்சொல்லியும் அதற்கு ஒரு மாற்று ஆளை அனுப்பியும் பயிற்சியாளர் கட்டளையிட்டிருந்தார். ஆனால் அதனை ரொனோல்டோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம் அவர்தான் அந்த குழுவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அவர் நம்புகிறார். அதனால் அவரை வெளியே எடுத்தவுடன். பாட்டிலைத் தூக்கி எறிகிறார். தரையை உதைக்கிறார் வெறுப்பை உமிழ்கிறார் நெருப்பாய் கொதிக்கிறார்.

பயிற்சியாளர் எதனையும் கண்டு கொள்ளவில்லை அடுத்தப் போட்டியில் அவரை இறக்கவே இல்லை. அதற்குப் பதிலாகப் பயிற்சியாளர் இருபத்தி ஒன்று வயதுடைய ஒரு இளைஞனை இறக்குகிறார் அந்த அணி எதிரணிக்கு எதிராக ஆறு கோல் போட்டு வெற்றியடைகிறது. இதிலிருந்து யாரையும் நம்பி எதுவுமில்லை ஆனால் அவரவர் நான்தான் எல்லாம், தனக்குத்தான் எல்லாம் தெரியும். தன்னைவிட்டால் யாருமில்லை என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு தான் என்ற அகந்தையின் உச்சியில் ஏறி நின்று தன்னை அழிப்பதுடன் தரணியையும் அழித்துவிடுபவர்களின் அவலச் செயலால் இந்தப் பூமி இப்போதும் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று இந்தப் பூமி இன்னும் முழுமையடையாமல் முன்னேறாமல் பல பகுதிகள் இருக்கக் காரணம் ஆங்காங்கே முக்கியப் பொறுப்புகளில் பல அதிமேதாவிகள் உட்கார்ந்து கொண்டு தன்னால் தான் எல்லாம் முடியும் என நந்திபோல் முந்தி நின்று முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தான் இல்லாவிட்டால் வீடு இல்லை தான் மட்டும் இல்லை என்றால் இந்த நிறுவனம் இயங்கவே முடியாது.

தான் மட்டும் இல்லையென்றால் இந்தத் தரணியே இயங்காது என்று தம்பட்டம் அடிப்பவர்கள் இன்று ஏராளம் பெருகிவிட்டார்கள். ஏனென்றால் இவர்கள் எப்போதுமே அடுத்தவர்களை முட்டாள்கள் என்று எண்ணும் மனவியாதிக்காரர்கள்.

தற்போது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் IPLல் வெற்றி கேப்டன் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோகித் சர்மா தலைமையில் இருபோட்டியிலும் கத்துக் குட்டியிடம் மண்ணைக் கவ்வியது. இச்சமயத்தில் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட மூன்றாவது போட்டியில் அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் என்ற இளம் வயதினன் ஒருவனை இறக்கினார்கள் ஆட்டம் அனல் பறந்தது. வரலாற்றுச் சாதனையாக 227 ரன் விகிதத்தில் வெற்றி பெற்றது. அந்த இளைஞனும் தொடக்கத்தில் இறங்கி எளிதில் இரட்டைச்சதம் அடித்து அசத்தினான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. பலர் தான்தான் சகல கலா வல்லவன் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களே பலரின் வாய்ப்பையும் வசதியையும் நீங்கள் பதுக்கி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குக் கிடைத்த பயிற்சியும், முயற்சியும் உங்கள் அருகில் இருப்பவர்களுக்குக் கிடைத்திருந்தால் இன்று அவர் எங்கேயோ போய் இருந்திருப்பார் நிறுவனத்தையும் எப்படியோ மாற்றியமைத்திருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காததால் மௌனமாய் மரணித்துப்போய் இருக்கிறார்கள் மறந்து விடாதீர்கள்.

இன்னும் சிலர் எந்த உயர்ந்த நோக்கமும் இல்லாமல் எதையும் உயர்த்தும் எண்ணமும் இல்லாமல் அற்பச்சுகத்திற்காகத் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக்கொண்டு நாய் வாயில் அகப்பட்ட தெங்கம் பழம்போல தனக்கும் உதவாமல் யாருக்கும் பயன்படாமல் சுடுகாட்டில் அலங்கறிக்கப்பட்ட கல்லறைபோல் சுற்றிவருவார்கள். சாதி அடிப்படையிலும் பணத்தின் ஆக்கிரமிப்பாலும் தகுதியில்லாத பல தலைவர்கள் உருவாக்கப்பட்டு பல நிறுவனங்களை ஒழித்திருக்கிறார்கள்.

தப்பாட்டம் ஆட நினைக்கும் ஒரு கூட்டம் தான் முன்னின்று செய்யத் தொடங்கும் செயல்களைச் செய்யத் துடிக்கும் ஒரு கூட்டம். தன்னோடு இருக்கும் ஒரு முட்டாளைத் தலைவனாக்கி பொம்மலாட்டம் ஆடும் புதிய யூக்தியில் தப்பான ஆட்டம் ஆடும் மனக்குறையுள்ள மாற்றுத்திறனாளிகள். இவர்கள் கன்று இறந்தபிறகு பசுவிடம் பால் கறக்க பொம்மைக் கன்றுக் குட்டி செய்வது போல பொம்மைத் தலைவரை உருவாக்குவார்கள். அதனால் தான் இன்றையக் காலக்கட்டத்தில் எதற்கும் தலையாட்டுகிறவர்கள் எளிதில் தலைவராகி விடுகிறார்கள்.

அத்தகையத் தலைவர்களை உருவாக்கினால் அது தரித்திரம் தகுதியில்லாதவனைத் தேர்ந்தெடுத்தால் அது தலைகுனிவு கோமாளிகள் நிறைந்திருந்தால் கொள்கையில்லாதவன் தலைவன் ஆகிவிடுகிறான். தரமான தலைவர்கள் இதனால் இன்று தலைகுனிந்து நடக்கிறார்கள். காலம் எப்போதுமே தனக்குரிய தலைவனைத் தானே தேர்ந்தெடுத்துவிடுகிறது. ஆனால் இப்போது காசு கொண்டு அது தடுக்கப்படுகிறது. 500க்கும் 1000த்திற்கும் வாக்குறிமையை வாடகைக்கு விட்டவர்களால் வாங்கிவந்த தலைவர்கள் நமக்கு வரமல்ல! சாபம்!.

ஆகவே எல்லோரையும் மதிப்போம் எல்லோரையும் ஏற்போம் வாய்ப்பு கிடைத்தால் எல்லோருக்கும் வாய்ப்பளிப்போம், வாய்ப்பு கொடுக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் தலைவன் வெளியே வருவான். ஒரு நல்ல தலைவனுக்கு உரிய நல்ல பண்பு எது தெரியுமா? தன் உடன் பயணிக்கும் அத்தனை பேரையும் நல்ல தலைவனாக உருவாக்கினால் மட்டுமே அவன் நல்ல தலைவனாய் இருக்க முடியும். மற்ற எந்தக் குணமும் அவனைத் தலைவனாக்க முடியாது. ஒரு கெட்ட தலைவன் என்பவன் தன்னுடன் இருக்கும் எவனையும் தலைவனாகமல் தடுப்பதுதான் காரணம் தனக்குப் போட்டியாக அவன் உருவாகிவிடுவானோ என்ற பயத்தில் எவனையும் எந்த நல்ல செயலையும் செய்யவிடாமல் தடுப்பதுதான் இதைவிட மோசமான ஒன்று உண்டு அதாவது பல மூடர்கள் சேர்ந்து ஒரு முட்டாளைத் தேர்ந்தெடுத்து தப்பாட்டம் ஆடுவதுதான்.

நல்லவர்களே என்னைப் பொறுத்தமட்டில் எனக்குத் தெரிந்த ஒரு ஒப்பற்ற தலைவன். நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து. அவர் ஒரு படத்தில் ஆடுகளைப் பற்றிக்கொண்டு போவார் அது என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஒப்பற்ற தலைவன் நான் என்று முன்னால் நின்று வழி காட்டுபவனல்ல, ஆடுகளை அவரவர் விருப்பப்படி போகவிட்டு தவறாமல் தடுக்கி விழாமல் பின்னால் வந்து எச்சரிக்கை செய்துவிட்டு அவரவர் பாதையிலேயே பயணிக்கவும் விட்டுவிட்டு, தான் முன்னால் நின்று தனக்குத் தெரிந்த வழியைக் காட்டாமல், அல்லது வழியை மறிக்காமல் சுதந்திரமாகப் பயணிக்கவிட்டு ஆனால் நான் உங்கள் பின்னால் வந்து கொண்டே இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுப்பவனே தலைவன். எனவே நானும் தலைவனல்ல தலைமையை நோக்கிப் பயணிப்பவன்.

“முன்னால் நிற்பவன்
எல்லாம் தலைவனல்ல – பலரை
முன்னேற வைப்பவனே
தலைவன்”.

ARCHIVES