01

Dec

2011

நான் பேச நினைப்பதெல்லாம்…

சகோ. ம. செங்கோல் தி.இ.ச.,

மாநிலத் தலைவர்,

கவுசானல் மாநிலம்.

சகோ. இரா. ஜோ அன்டனியின் படைப்பான நான் பேச நினைப்பதெல்லாம்… புத்தகத்தை வாசித்தேன்; யோசித்தேன்; வியந்தேன்.  வாழ்க்கைக்கான கதைகள் 75 ஐத் தேர்ந்தெடுத்து, நாம் அனைவரும் கண்களால் வாசிக்கும் கதைகளை இதயத்தாலும் மூளையினாலும் வாசிப்பதால்தான் இவர் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறார்.

நாம் வாசிக்கும் கதைகளைத் தேவையான இடத்தில் பொருத்தி, சொல்ல வேண்டிய கதைகளைச் சொல்லி, விளக்கி விட்டு அவற்றை வீசி விடுகிறோம்.  ஆனால், சொல்ல வந்த கருத்து எது? அதற்கேற்ற கதை எது? அது உண்மை தானா? காலத்திற்குப் பொருத்தமானதா?  என்று கதைகளையே ஒரு ஆய்வாக மாற்றியுள்ளார்.

உதாரணத்திற்கு, ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டுகிறேன்.  திராட்சைப் பழத்தைத் தொட முடியாத நரி சீ… சீ… இந்தப் பழம் புளிக்கும் என்று சென்று விட்டது என்பதனை நரி மாமிசப் பட்சினி அதை கதைக்காகச் சைவப் பட்சினியாக மாற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்.

முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் நடத்திய கதையை எப்போது நடந்தது? என்று கேள்வி எழுப்பி மனிதன் தொடர்ந்து முயல வேண்டும் என்பதை மிருகத்தின் மீது புகுத்தி மாற்றிச் சொல்கிறார்கள் என்கிறார்.

தண்ணீரில் தன் நிழலைக் கண்ட சிங்கம் அதை அழிக்கத் தண்ணீருக்குள் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டது என்ற கதைக்கு சிங்கம் அவ்வாறு தன் நிழல் பார்த்துப் பயந்திருந்தால் இன்று சிங்க இனமே இருக்காது.  மனிதன் மட்டுமே தன்னை உற்று நோக்கப் பயப்படுகிறான் என்கிறார்.

காலத்திற்கு ஒவ்வாத கதைகளை காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்ட வேட்டைக்குப்போகும் சாமி கையில் அரிவாள் இருக்கிறது.  இன்று துப்பாக்கியல்லவா இருக்க வேண்டும் என்கிறார்.

இவ்வாறு 75 கதைகளுக்கும் இவர் கொடுக்கும் சிந்தனை மாறுபட்டது.  நம் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டது.  கதையின் நோக்கை அவரின் இதயம் அல்லது மூளை வாசித்த விதத்தை வெளிக்கொணர்கிறது.  20 வரிக் கதைகள் இவரது சிந்தனைகளான இரண்டு வரிகளில் வைரமாய் மின்னுகிறது.

இவரது சிந்தனை இன்னும் பல்வேறு கோணங்களில் செயல்பட்டு எழுத்து விருட்சமாய் வளர்ந்து கனி கொடுக்க வாழ்த்துகிறேன்.  இது இவரது ஐந்தாவது படைப்பு என்பதில் மகிழ்கிறேன்; பாராட்டுகிறேன்;  இறையருளை வேண்டுகிறேன்.

சகோ. ம. செங்கோல் தி.இ.ச.,

ARCHIVES