24

Dec

2020

பகிர்வோம் மகிழ்வோம்….

“சொல்லிக் கொடுத்த
கரங்கள்…..
அள்ளிக் கொடுக்கும்
கரங்களாக…..எம்
ஆசிரியர்கள்…

2020 ஆம் ஆண்டு அனைவரையும் சட்டையைப்பிடித்து உலுக்கி சங்கடப் படுத்திவிட்டது. மக்களின் அன்றாட வாழ்வையே புரட்டிப் போட்டு அலங்கோலப்படுத்தி விட்டது. பிழைப்புத் தேடி நகரங்களில் குடியேறியவர்களை எல்லாம் நகரத்தின் நெருக்கடியில் நசுக்கப்பட்டு சொந்த ஊருக்கே நொந்த மனதுடன் நடைபிணமாய் நகர்த்திவிட்டது. கவலையின்றி வாழ்ந்தவர்கள் எல்லாம் வேலை பறிபோய் கண்ணீர் கடலில் மிதந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் அனைவரும் துக்கத்தைத் தோளில் சுமந்து கொண்டு தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்.

இச்சமயத்தில் இளகிய மனம் படைத்தவர்கள், இரக்கக் குணம் மிகுந்தவர்கள். பிறர் துயர் துடைக்கத் தம் கரம் நீட்டினார்கள், உணவு வழங்கினார்கள், உடை வழங்கினார்கள். மருந்து வழங்கினார்கள் மறுவாழ்வு தந்தார்கள். இதற்கு மத்தியில் இயற்கைச் சீற்றம் வேறு அவ்வப்போது வந்து நம்மை அசைத்து விட்டுப் போகிறது. இவ்வளவையும் பார்த்து விட்டு இதயம் உள்ளவர்கள் எவ்வாறு சும்மா இருக்க முடியும். நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நல்ல உள்ளங்கள் நிறையப்பேர் முன்வந்ததால்தான் இந்தப் பூமி இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ தன் அச்சில் இருந்து கழன்று காணாமல் போயிவிடும்.

எல்லா மனிதர்களுக்கும் முக்கியமான கடமைகளில் ஒன்று தர்மம் செய்வது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தர்மத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் கடவுளே கர்ணனின் முன் கைகட்டி நின்றான். காரணம் அவனது தர்மம். இந்தத் தர்மம் தலையையும் காக்கும் நம் தலைமுறையையும் காக்கும் ஆகவே தர்மம் பண்ணுவோம்.

எனது மாணவர்களிடம் நான் கூறுவது இல்லாதவர்களோடு இருப்பதைப் பகிருங்கள் என்பதுதான் எமது மாணவர்கள் உண்ணும்போது உணவைப் பகிர்வார்கள் நமது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். தேவையில் இருப்போர்க்கு நிதி என்று சேகரித்து பகிர்வு விழாவில் தேவைப்படும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பணியாளர்களுக்கும் பகிர்வு விழா அன்று கொடுத்து மகிழ்வார்கள். தாங்கள் பிறந்த நாளில் இனிப்புகள் வழங்குவதைத் தவிர்த்து இல்லாதவர்களுக்கு எழுது பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். தாங்கள் பிறந்த நாளன்று ஒரு மரக்கன்று வைத்து வளர்ப்பார்கள் அவர்கள் வயது எத்தனையோ அத்தனை மரங்களை நீங்கள் வளர்க்க வேண்டுமென்று அவர்களிடம் கூறி அவர்களை நான் வளர்த்து வருகிறேன்.

கடந்த வருடம் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருத்தி தன் வகுப்பில் படிக்கும் சக மாணவிக்கு தீபாவளி அன்று ஒரு புத்தாடை வாங்கி காலை வழிபாட்டு நிகழ்வில் மேடையில் வைத்து வழங்கினாள். அடுத்த வாரத்தில் அவளைக் காலை வழிபாட்டில் மாணவர்கள் மத்தியில் முதல் மரியாதை செய்து அவள் கரங்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அடுத்த மாதம் கிறிஸ்மஸ் பகிர்வு விழாவில் 160 மாணவ, மாணவிகள் தன் சக மாணவர்களுக்குப் புத்தாடை வழங்கி தாங்கள் இல்லங்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தர்மம் செய்யும் குழந்தைகளைத் தத்து எடுங்கள். தக்க மரியாதையும் கொடுங்கள் இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமையை இழந்துவிடும்.

எங்கள் ஆசிரியர்கள் தங்கள் வகுப்புக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பவர்கள். ஒவ்வொரு நாட்களிலும் அவர்களோடு உடன் வைத்துக் கொள்வார்கள். பெற்றோரை இழந்தவர்கள், பேண மறந்தவர்கள், மறுத்தவர்கள் ஏழைகள் என அவர்கள் இதயத்திலேயே ஒரு வகுப்பறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனையும் தாண்டி கொரோனாக் காலங்களில் வீதி வீதியாக இறங்கி வேலை செய்தார்கள் அவர்களிடம் இதோ கிறிஸ்மஸ் வருகிறது. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவுவதானே உண்மையான கிறிஸ்மஸ் என்றவுடன் அவர்கள் அள்ளி வழங்கியதுதான் இது. அத்தனை ஆசிரியர்களின் புகைப்படங்களையும் நான் அடுக்கி வைக்கவில்லை ஒரு சிலவற்றை உதாரணத்திற்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தச் செயலை மாணவர்கள் மட்டுமல்ல மனிதம் பேணுகிற அத்தனை பேரும் பின்பற்றலாமே!

கிறிஸ்மஸ் – புத்தாண்டு கொண்டாடப்போகிறோம். சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்துவதுதானே! அடுத்தவர் மகிழ்விற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எதைச் செய்தாலும் இல்லாதவர்களுக்கு இல்லாததை இனிமையோடும் கனிந்த இதயத்தோடும் செய்யுங்கள். உங்களுக்கு இனிய கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

“இறக்கத் தானே பிறந்தோம் – அதுவரை
இரக்கத்தோடு இருப்போம்”

ARCHIVES