26

Apr

2020

மருத்துவர்களே! எங்களை மன்னித்து விடுங்கள்.

உலகம் இருண்டு கொண்டு இருக்கிறது. உலக மக்கள் அரண்டு கொண்டு இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடிய நோய் மனித இனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டு இருக்கும் போது மரணத்தின் வாயிலிருந்து மனிதர்களை மீட்பவர்கள் மருத்துவர்களே! மருத்துவர்கள் மட்டுமே. அவர்கள் இறப்பின்போது இறுதி மரியாதையையைக் கூட அசிங்கப்படுத்தி விட்டோமே? மருத்துவர்களே மன்னித்து விடுங்கள்.

இது தெரியாமல் நடந்ததல்ல! ஏனென்றால் ஆந்திரா டாக்டர் ஒருவரின் மரணம், கோவையில் ஒரு டாக்டர் மரணம், இப்போது டாக்டர் சைமன் அவர்களின் மரணம், இந்த மூன்று இறுதி மரியாதையின் போதும் நாம் நடந்து கொண்ட விதம், இறந்தவர்கள் நமக்காக மரித்த தெய்வங்கள், ஆனால் பிணங்களான நம்மால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை மன்னித்து விடுங்கள்.

கடவுள் கைவிட்டுவிட்டான். நம்பிக்கைகளெல்லாம் நசிங்கிப் போய்விட்டது. வல்லரசுகள் என்று மார்தட்டியவனெல்லாம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிரைத் துப்பிக் கொண்டு இருக்கிறான். உலகப் பணக்காரர்கள் எல்லாம் வீட்டுக்குள் சுருண்டுக் கிடக்க, விஞ்ஞானிகள் எல்லாம் கையை மீறிப் போய் விட்டனவே! என கண்கலங்கித் தவிக்க, நாங்கள் இருக்குமட்டும் இல்லை இல்லை இறக்குமட்டும் உயிர்கொடுத்து உலகைக் காப்போம் என சாவை மடியில் வைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்து கொண்டடிருக்கிறார். மருத்துவர்களை அசிங்கப்படுத்தி விட்டோமே! மன்னித்து விடுங்கள்.

இது தெரியாமல் நடந்ததல்ல முதன் முதலில் கொரோனா நோயைக் கண்டுபிடித்த மருத்துவர் இறந்து விட்டார். ஒரு மருத்துவர் மரணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை தின்று கொண்டு இருக்கிறது எனத் தெரிந்ததும், தன் மனைவி இரண்டு சிறு குழந்தைகளிடமும் வாசலில் நின்று விடைபெற்றுச் சென்றாரே! இதனை ஒரு காணொளியில் கண்டோமே! மறந்து விட்டோமா? அப்படி இருந்தும் பிற உயிர்களைக் காப்பதற்காகத் தெரிந்தே இந்தத் தீராத்துயரத்தில் விழுகிறார்கள். அவர்களை நம் அறியாமையால் வீழ்த்தி விட்டோமே! மருத்துவர்களே மன்னித்து விடுங்கள்.

இறந்த பின்னும் ஒருவரின் அடக்கத்திற்கு என்று ஒரு சுய மரியாதை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அது புதைக்கும் வரை, அல்லது எரிக்கும் வரை தொடரும். அந்த இறுதி மரியாதையைக் கூட நாம் அசிங்கப்படுத்தி விட்டோமே! மருத்துவர்களே மன்னித்து விடுங்கள்.

மருத்துவர்களை விரட்டினார்கள், வாகனங்களை நொறுக்கினார்கள், அப்போது மானிடமே நொறுங்கிவிட்டது. அவர்களைக் கேட்டால் எங்களுக்குத் தெரியாது மொத்தப் பிணங்களையும் இங்கு மூடப் போகிறார்களோ? எனப் பயந்தோம் என்கிறார்கள். அவர்களிடம் விளக்கிச் சொல்லாதது யார் குற்றம்? ஊரடங்கு நேரத்தில் இருவர் மூவர் கூடுவதே குற்றம் என்று இருக்கும்போது ஒரு கும்பலே திரண்டு வரும் அளவிற்கு அங்கு கண்காணிப்பு இல்லாமல் இருந்ததா? இல்லைத் தடுக்கப்படவில்லையா? புகையும் போதே அணைப்பதுதான் புத்திசாலித்தனம். எரிய விட்டுக் கத்துவதல்ல. அது சரி! இந்தக் கும்பலாகச் சென்று தாக்குவதை எங்கிருந்து கற்றோம்? தமிழனுக்கு இது தலைகுனிவு! அல்லவா? தமிழன் தூக்கி விடுவானே தவிர தாக்க வரமாட்டான். ஒட்டுமொத்தத் தமிழகமும் தலை குனிந்து நிற்கிறது. அடுத்தவர்கள் உங்கள் சாதி, மதத்தவர்கள் என்று அவர்களிடமிருந்து அசிங்கத்தைக் கற்றுக் கொள்ளாதீர்கள்.

மருத்துவர்களை மனதில் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். நமது மரணத்தை பலமுறை ஒத்தி வைத்தவர்கள். ஆயிரம் முறை நம்மைக் காப்பாற்றினாலும் ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்வோம். ஒருமுறை அவர்கள் தவறி விட்டால் அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம். எப்போது சென்றாலும் நம்பிக்கையான வார்த்தைகளை மனதிற்குள் நட்டு வைப்பவர் அவர்கள் மட்டுமே. பெண்களைத் தீட்டு என்று பெரியோர்களும், தெய்வங்களும் ஒதுக்கிய போதும் உதிரப் போக்கை நிறுத்தியவர் அவர்களே. விபத்துகளில் விழுந்த போதும் உறுப்புகள் வேலை நிறுத்தம் செய்த போதும் உடனே உதவி செய்தவர் அவர்கள்தானே! மனைவியிடம் கூட சொல்ல முடியாத மர்ம நோய்களையும் கணவன் கூட தொட்டுப்பார்க்காத கருப்பையையும் உரிமையோடு தொட்டு உயிர் கொடுத்தவரல்லவா! அவர்கள்.

தொழுநோயை தழுவியவர்கள், தீக்காயங்களைக் கழுவியவர்கள், சிதறிக்கிடந்த எலும்புகளையும் சதைகளையும் பொறுக்கி எடுத்து நமது உடம்பைப் பூட்டிக் கொடுத்தவர். அந்தத் தெய்வங்களையே மறந்துவிட்டோமே! எத்தனை முறை கையெடுத்துக் கும்பிட்டிருப்போம். கண்ணீரீல் நன்றி சொல்லியிருப்போம். நம்மைத் தனியே இப்போது இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் தனியாகவே நமக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு நாள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினோமே! அது எதற்கு? நடிப்பா? நாடகமா? அவர்களுக்கு நன்றிக்கடன் கழிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் இறக்கலாம். அதைவிட நம் உயிரென்ன பெரிய …..? தேசத்தைக் காக்க உயிர்நீத்த ஒரு இராணுவ வீரருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் இவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இப்போது ஒரு ஆறுதலான செய்தி திருவாளர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய இடத்தைத் தருகிறேன் என்கிறார். வாடிப்பட்டியில் ஒரு 9ஆம் வகுப்பு மாணவி தன் இடத்தை தருகிறேன் என பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாள். இதெல்லாம் பார்க்கும் போதுதான் இன்னும் மனிதநேயம் இறக்கவில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் எமக்காக இறந்த மருத்துவரை புதைக்க விடாமல் மனித நேயத்தைப் புதைத்தவர்களை நினைக்கும்போதுதான் ஒட்டுமொத்தத் தமிழகமே தலை கவிழ்ந்து நிற்கிறது. மறுபடியும் கேட்கிறேன் மருத்துவர்களே மன்னித்து விடுங்கள்.

ARCHIVES