11

Nov

2022

வழிப்போக்கன்….

முகஸ்துதியை விட மோசமானது முகமூடி வாழ்க்கை. இந்த முகமூடி வாழ்க்கையை சில நேரங்களில் பச்சோந்தி எனப்பரிகசிப்போம். ஆனால் பச்சோந்தி எனும் உயிர் மரத்திற்கேற்ப தன் உடலின் நிறத்தை மாற்றுமே தவிர தனது குணத்தை ஒருபோதும் மாற்றாது. உடல், நிறம், குணம், பேச்சு, செயல் என நிமிடத்திற்கு நிமிடம் மாற்றி நாளுக்கு ஒரு வேசம் பொழுதுக்கு ஒரு நடிப்பு எனப் பொழுது போக்கும் ஒரு உயிர் பூமியில் நடமாடுகிறது என்றால் அது மனித இனமே தவிர மற்றது இல்லை.

வேசங்களில் எல்லாம் வேறுபட்ட வேசம் வித்தியாசமான மோசம் என்னவென்றால் உடல் முழுவதிலும் அகங்காரத்தின் அடையாளத்தை வைத்துக் கொண்டு வெளியில் அப்படியே தாழ்ச்சியாக நடிப்பதும், தரித்திரத்தின் உருவாகத் தன்னை சித்தரிப்பதும். பேச்சில் அடக்கம் போல் தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்வதும் ஆசையே இல்லாததுபோல் தன்னை அடையாளம் காட்டுவதும் உலகில் உள்ள சீட்டுக் கம்பெனிகளின் மோசடிகளை விடக் கீழ்த்தரமானது.

உயர்ந்த இடத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தன்னை முதன்மைப் பணியாளன் என அழைத்துக்கொள்வார். ஆனால் அவரைச் சுற்றி அவரது தேவைகளை நிறைவேற்றவே ஆயிரம் அல்லக் கைகளை வைத்துக் கொள்வார். தனது பெயரைக் கூட தாசன் என்று வைத்துக் கொள்வார். தன்னை மீறி எவனாவது முன்னேறிவிட்டால் அவன் முன்னேற்றத்தை எப்படித் தடுக்கலாம்? என்று மும்மரமாகச் செயல்படுவார். பெண்களை மதிப்பாகப் பெருமை பேசிக்கொள்வார். ஆனால் ஆணாதிக்கச் செருக்கு அவர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் இருக்கும். பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்.பார்க்குமிடமெல்லாம் பேசுவார். ஆனால் தனக்கு அவள் அடிமையாக இருக்க வேண்டும். தன்னைவிட எந்த விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது. உயர்ந்த இடத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார். கொள்கையாய் வடிப்பார்.

சிலர் மேடையில் பேசும்போது சொல்வார்கள். எனக்கு வாழ்த்த வயதில்லை என்பார்கள் நன்றாக யோசித்துப்பாருங்கள். வாழ்த்துவதற்கு வயது எதற்கு? நல்ல மனசு இருந்தால் போதாதா? ஆனால் அவர்கள் அடக்கத்தை மேடைக்கு அறிவிக்கிறார்களாம். சிலர் பேசும்போது இந்த அறிஞர்கள் நிறைந்த மாமன்றத்தில் நான் எப்படிப் பேச? என்பார்கள் அப்போ நீ என்ன முட்டாளா? இல்லை கேட்பவர்களை முட்டாள் ஆக்குகிறாயா? அடக்கத்தை அறிவிக்க வேண்டியதில்லை பணிவை பறைசாற்ற வேண்டியதில்லை எளிமையை எடுத்துரைக்கத் தேவையில்லை. இவையெல்லாம் உடல்மொழி வார்த்தை தேவையில்லை அது வாழும்வழி பிறருக்கும் வாசல் அமைத்துக் கொடுக்கும் மௌன கீதம். அதனை வார்த்தைச் சொல்லி அசிங்கப் படுத்தாதீர்கள். பலர் புகழ்வது எனக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டு புறவாசல் வழியாக அதனை அடைய நினைப்பார்கள். ஆகவே தாழ்ச்சி சொல் அல்ல செயல்.

ஒருமுறை மகாகவி காளிதாசன் மன்னரோடு குதிரையில் பயணித்துக்; கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது தாகம் எடுக்கவே அவன் பயணித்த பாதையில் ஒரு கிணற்றில் ஒரு கிழவி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று காளிதாசன் தண்ணீர் கேட்டான். அப்போது அந்தக் கிழவி நீ யார்? என்று கேட்டாள். அப்போது காளிதாசனுக்கு தான் மிகப்பெரிய கவிஞன் என மனதில் நினைப்பு. ஆனால் ஒரு கிராமத்துக் கிழவிக்குத் தன்னைப்பற்றி என்ன தெரியும்? என நினைத்துக் கொண்டு தான் மிக அடக்கமாகப் பதில் சொல்வதாக நினைத்து அவன் தன்னை ஒரு வழிப்போக்கன் என்றான்.

உடனே அந்தக் கிழவி என்னைப் பொறுத்த வரையில் இரண்டு பேர்கள் தான் வழிப்போக்கன் ஒன்று சூரியன் மற்றொன்று எந்திரன். ஏனென்றால் இவர்கள்தான் எங்கு போகிறோம்? எதற்குப் போகிறோம் என்று தெரியாமல் தினந்தோறும் அதேபாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்க நீ எப்படி வழிப்போக்கனாய் இருக்க முடியும்?. என்றாள்.

உடனே காளிதாசன் பாட்டி நான் ஒரு அதீதி என்றான். அதாவது அதீதி என்றால் அழையா விருந்தாளி என்று பொருள் உடனே அந்தக் கிழவி என்னைப் பொறுத்த வரையில் அழையா விருந்தாளி இருவர் தான் ஒன்று மரணம். மற்றொன்று நோய். ஏனென்றால் அவர்கள் இருவரும் தான் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் எந்தப் பாதையில் வருவார்கள் எந்த உருவத்தில் வருவார்கள் என்று தெரியாது என்றாள். அப்படி இருக்க நீ எப்படி அதீதியாய் இருக்க முடியும்? என்றாள்.

தாயே நீ என்ன சொன்னாலும் உன்னிடம் எப்படியாவது தண்ணீர் வாங்கிக் குடிக்கும் ஒரு பிடிவாதக்காரன் என்று எண்ணிக்கொள் என்றான் அதற்கு அந்தக் கிழவி என்னைப் பொறுத்தமட்டில் இருவர்தான் பிடிவாதக்காரன் ஒன்று முடி மற்றொன்று நகம் வளர வளர வெட்டிக் கொண்டிருந்தாலும் சளைக்காமல் வளர்த்துக் கொண்டே இருப்பான் எப்படி வெட்டினாலும் எதைக் கொண்டு வெட்டினாலும் வளர்ந்து கொண்டே இருப்பான் என்றாள். அப்படி இருக்க நீ எப்படி பிடிவாதக்காரனாய் இருக்க முடியும் என்றாள்.

தெய்வமே என்னை ஒரு முட்டாள் என எண்ணிக்கொள் என்றான். அதற்கு அந்தக் கிழவி என்னைப் பொருத்தமட்டில் இருவர்தான் முட்டாள் ஒருவன் தலைவன் மற்றவன் தொண்டன் தப்பான காரியத்தையும் கூச்சமில்லாது செய்பவனும் தவறு செய்து சிறைக்குப் போகும் போதும் வெட்கமில்லாமல் கைகாட்டுபவனும் தப்பானவன் எனத் தெரிந்தும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுபவனும் முட்டாள் என்றாள். அப்படி இருக்க நீ எப்படி முட்டாளாக இருக்க முடியும்? என்றாள்.

இப்போது காளிதாசன் பேசவில்லை நெடுசாண் கிடையாக அவள் காலில் விழுந்தான். கிழவி, பாட்டி, தாயே, தெய்வமே எனப் படிப்படியாக மரியாதையுடன் அழைத்தான் தான் அறிவாளி என எண்ணும்போது அகந்தை நம்மை ஆள்கிறது. நம் அறியாமை தெரியும் போது பிறரை மதிக்கும் பெருந்தன்மை வளர்கிறது.

சிலருக்கு அழகு, சிலருக்கு அறிவு, சிலருக்குப் பணம், சிலருக்குக் குணம், சிலருக்குப் புகழ், சிலருக்கு கல்வி சிலருக்கு வசதி, சிலருக்கு வாய்ப்பு, சிலருக்கு மதிப்பு சிலருக்கு மரியாதை, சிலருக்கு அன்பு, சிலரது நட்பு, சிலரின் காதல் சிலரின் உறவு நமக்கு சிறந்த மதிப்பையும் செல்வாக்கையும் தரலாம். அதனை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அது இல்லாமல் நம்மை எளிமையாகக் காட்டுவதுபோல் பிறரை ஏமாற்ற வேண்டாம். அடக்கம், பணிவு, தாழ்ச்சியைவிட அன்பு உண்மை, நேர்மை தேவை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இவ்வளவு எளிய ஆளாக என்ற விளம்பரத்திற்கு எதற்கு ஏங்குகிறீர்கள்? இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல வேண்டாம் இருப்பது எதனையும் எக்காரணம் கொண்டு மறைக்கவும் வேண்டாம். நாம் அடைந்திருக்கும் உயரம் நம்மால் உருவாக்கப்பட்டது. நாம் அதனைக் கொண்டாடுவோம். நாம் வடித்த பாதை நல்ல பாதை என்றால் அதில் நான்கு பேர் நடக்கட்டுமே. தாழ்ச்சி என்று அதற்கு ஏன் தாழ்பாள் போட வேண்டும் நான் நான் தான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

“நான் நிறைவு
நான்தான் அகந்தை
நானாவது தாழ்வு
நாறும் பணிவு”

ARCHIVES