18

Nov

2022

தீண்டும் இன்பம்…

காலையில் கண்விழிக்கிறேன் கதிரவன் தெரியவில்லை புல்லின் நுனியெல்லாம் பொட்டுவைத்தது போல் பனித்துளி பரவி நிற்கிறது. சேவல் சிறகை சுருக்கி வைத்திருக்கிறது. குருவி கூட்டுக்குள் குருகி நிற்கிறது. வயல்வெளிகளில் வாழ்க்கையைத் தேடுகிற விவசாயியும் அவன் வைக்கின்ற புள்ளிகளுக்கெல்லாம் கோலம் போடுகின்ற தொழிலாளிகளும் சோம்பல் முறித்து ஆம்பல் மலர்போல் மெதுவாக உடலுக்குள் உற்சாகம் விரிய அத்தருணத்தில் நானும் வெளிவருகிறேன். என்மீதும் சில துளிகள் பட்டுத்தெரிக்கிறது. குண்டு துளைத்தால் கூட இவ்வளவு குலுங்காத என் உடல் ஒரு மழைத்துளியில் உடல் சிலிர்க்கிறது.

இது மழைக்காலம் உடம்பில் விழுகிற ஒவ்வொரு துளியும் மனசைக் குளிர வைக்கிறது. மழைக்குப் பயமில்லை. ஆனால் உடல் நடுங்குகிறது. அவன் துரத்தவில்லை ஆனாலும் நான் ஓடுகிறேன். அவன் விரட்டிப்பிடிப்பவனல்ல. ஆனால் சுற்றி வளைப்பவன் இருப்பினும் அதில் நனைந்து கொண்டே அதன் நினைவுகளில் மூழ்குகிறேன்.

இந்தப் பூமியில் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன செடிகள், கொடிகள், புற்கள், புழுக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் அத்தனை பேருக்கும் வரம் கொடுக்கிற ஒரே கடவுள், ஏன் வரமாகவே வருகின்ற ஒரே கடவுள் மழைதான். இதனை மற்ற உயிர்கள் புரிந்து கொண்டாலும் இந்த மனிதர்கள் மட்டும் ஏன் புரிந்து கொள்ளவில்லை வியக்குகிறேன். மனிதன் மட்டும் எங்கெங்கோ தேடுகிறான். எதை எதையோ நாடுகிறான் எதிர்திசையில் தேடுகிறவனை எட்டி உதைக்கிறேன். ஒரே திசையில் தேடுகிறவனை அடிமை என்கிறான். கேட்டால் எனக்கு இருப்பது ஆறாவது அறிவு என்கிறான். இது ஆறாம் அறிவு அல்ல நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அறிவு.

அட முட்டாள்களே! கடவுள் என்பவன் தன்னைத்தேட வைப்பவனல்ல. மலையில் இருக்கிறேன், குகையில் இருக்கிறேன் அலையில் இருக்கிறேன் சிலையில் இருக்கிறேன். நதியில் இருக்கிறேன் தலைவிதியில் இருக்கிறேன் என்று அலைய வைப்பவனல்ல. ஆபத்தில் இருக்கும்போது தம்மைத் தேடி வருபவன். அப்படி நோக்கினால் என்னைப் பொறுத்தமட்டில் இந்தப் பூமி வறட்சியால் வாடி நிற்கும்போது பூமியை வளப்படுத்தப் புறப்பட்டு வருகிறவன் மழை எனவே வருண பகவானைப் போல வாழ வைக்கின்ற தெய்வம் வேறு எதுவாக இருக்க முடியும்?.

மழை பூமியை முத்தமிட்டவுடன் புதிய புதிய செடிகளும், மரங்களும் புத்தெழுச்சியுடன் பூமியை விட்டு எழும்பும் இவையெல்லாம் எப்போதோ விழுந்த விதைகள் எப்படியோ விழுந்த விதைகள் இவை வருமென்று நினைத்திருக்காது. நமக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது என்று தெரிந்திருக்காது சில நேரங்களில் விதைகள், தான். செத்துவிட்டோம் சமாதியில் படுத்திருக்கிறோம் என சங்கடப்பட்டுக் கொண்டிருந்திருக்கும். ஆனால் திடிரெனப் பெய்த மழை அவைகளுக்கு உயிர் கொடுத்து உருக்கொடுக்கிறது. புதிய உயிரைக் கொடுப்பதும் இறந்து விட்டோம் எனத் தன்னை இழந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதும் இறைவனின் செயலல்லவா! அப்படியென்றால் மழையும் ஒரு பகவானே!

விதை பூமியில் விழுந்ததும் மழைபெய்ததும் உயிர் பெறுகிறது. இந்த உயிர் விதையினால் வந்ததா? நீரினால் வந்ததா? நிலத்தினால் வந்ததா? இவ்வாறு விதையும் நீரும் நிலமும் மூன்றும் இணைந்து உருவாகுவதுதானே ஜனனம் இவைதானே பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிர்களுக்கும் சூத்திரம்.

மழை பெய்யும் காலத்தில் ஊர் முழுவதும் சுத்தமாகிறது. கட்டிடங்கள் தாங்கள் மேல் கிடக்கும் தூசிகளை தட்டிக்கொள்கின்றன. இயற்கை அன்னை பச்சை என்னும் பட்டாடையைப் பூமி முழுவதும் போர்த்தி வைப்பாள் எந்த இறைவனுக்கும் பிடித்த ஆடை பச்சைதானே ஆனால் இந்த இறைவன் மட்டும் தனக்காக ஆடையை தானே நெய்து கொள்கிறான்.

மழையானது சிதறிக் கிடக்கிற நீர்களையெல்லாம் சூரியக் கதிர்களின் உதவியோடு முகர்ந்து எடுத்து மீண்டும் பூமிக்கே தருகிறது. ஒன்று பரவிக்கிடக்கிற நீர்களை எடுத்துப் பகிர்ந்து அளிக்கிறது. அதாவது கடல், ஏரி, குளம், குட்டை என உறிஞ்சி எடுப்பதால். அதுபோல் இருப்பவர்களிடமிருந்து செல்வத்தைப் பெற்று இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதுபோல மழையும் எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கிறது. மழையினுக்காக சூரியன் எடுக்கும் தண்ணீரானது சாக்கடையிலிருந்தும், சகதியில் இருந்தும் உப்புகரிக்கும் கடலிலிருந்தும் உவர்க்கும் மணலிலிருந்தும் எடுத்தாலும் அத்தனையும் சுத்தம் செய்து சுத்தமான தண்ணீரையும், பலவற்றைச் சுத்தமாக்கும் தண்ணீராகவும் மீண்டும் பூமிக்குத் தருகிறது. கடவுள் பணிகளில் ஒன்று மனிதனைப் பாவத்திலிருந்து கழுவி புனிதத்திற்கு இட்டுச் செல்வதுதானே அதையே தான் மழை செய்கிறது.

வெயிலடிக்கும் போது தாங்கிக் கொள்ளும் மக்கள் மழைபெய்யும்போது ஓடி ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதுதானே உலகம் அக்கிரமங்களை அனுமதிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக் கொள்கிறவர்கள் உண்மையைக் கண்டு ஓடுவதுபோல மழையைக் கண்டு ஒதுங்குகிறார்கள்.

புதிய உயிரைத் தோற்றுவிப்பதும், நம்மை புனித நிலைக்குச் சுத்தம் செய்வதும், இலவசமாக வரம் தருவதும் இருப்பவர்களிடம் எடுத்து வந்து இல்லம் தருவதும். எல்லோருக்கும் சமமாகத் தருவதும் எல்லோருக்கும் நல்லதையே செய்யும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது மழையே எனவே தான் இளங்கோ அடிகள் இறை வாழ்த்தில் மழையைப் போற்றுவோம். மழையைப் போற்றுவோம் என்றார். எனவே மழையை நினைப்போம் மழை நம்மை நனைக்கும் “என்மேல் விழும் மழைத்துளியே இறைவன் அனுப்பிய கடிதாசியே கன்னிப் பெண்ணைப் போல் என்னைத் தொட்டவுடன் தேசம் சிலிர்க்கிறது. அகம் குளிர மனம் மகிழ கண்மூடிக் கனவு காண்கிறேன்.”

“மழையின் சத்தமும்
மழழையின் முத்தமும்
மண்ணின் சொர்க்கங்கள்”

ARCHIVES