21

Nov

2021

மரணம் தந்த பாடம்…

இன்று நாடெங்கும் பரபரப்பாகப் பேசக்கூடிய செய்தி கோவையில் தங்கை பொன் தாரணியின் மரணம்! இதில், அந்த ஆசிரியர் ஒரு அயோக்கியன்? இப்படியா படிக்கிற பிள்ளைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பான்? என்று ஒரு குரல் ஒலிக்கிறது. ஐயோ பாவம் ஆசிரியர் மட்டுமா தப்பு செய்தார்? என்று ஒரு குரல் மறுக்கிறது. ரொம்ப நல்ல குணம் படைத்தவர்கள் அப்பள்ளியின் முதல்வர் அவர்களைப் போய்… என்று சில ஆதங்கம் வேறு. அந்த பெண்ணின் அம்மா அழுகிறது ஆனா ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்ற கேள்விக் கணைகள் வேறு. இதில் ஒருவரையும் சும்மா விடக்கூடாது என்று அந்தப் பெண் எழுதியதை யாரும் கண்டுகொள்ளாத நிலை கூச்சல்களை அமைதிப்படுத்த காவல்துறையின் தூரிதமான நடவடிக்கை ஊடகங்களுக்கு உண்மை விளங்கு முன் போராட்டம். இப்படியே அது வாலியின் வாலைப் போல் வளர்ந்து கொண்டே போகிறது.

இதில் எதையும் நான் ஆராயப்போவதில்லை ஆனால் எதற்கு இந்த மரணம்? இந்த மரணம் சொல்லும் பாடம் என்ன? எனது பார்வையில் இந்தச் சமுதாயம் எங்கேயோ தனது சாரம்சத்தையும் சமத்துவத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறது. சகதிகளை அள்ளிப் பூசிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் வளர்ப்பில் நாம் குற்றவாளியாகிறோமோ? என்ற பயம் எனக்குள் எழுகிறது.

நாம் ஒவ்வொருவருமே இரண்டு பிள்ளைகளுக்கு ஆசைப்படுகிறோம் அதில் ஒன்று ஆணாய் மற்றொன்று பெண்ணாய் இருக்க ஆசைப்படுகிறோம். பெரும்பாலும் இப்படிக் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாக்கியமாக அதனை எண்ணுகிறோம். ஆனால் வளர்ப்பதில் தான் நாம் பெருத்த வேறுபாடு காண்கிறோம். ஆண் என்பது ஆளப்பிறந்ததாகவும் பெண் என்பவள் அடக்கமாக இருக்க வேண்டும் வளர்க்கும் போதே நாம் வேறுபாடு பார்க்கிறோம்.

இப்போது அனைவருக்கும் கல்வி எட்டிய தூரத்தில் வந்துவிட்ட பிறகு பெண்கள் படிப்பதற்கும் பழகுவதற்கும் ஆண்களுக்கு மிக அருகிலே வாழ வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது.

ஆனால் ஆண்குழந்தையை வளர்க்கும்போது முதலில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்து வளர்த்தோம் அது தேவைப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வான். ஆனால் இப்போது அவன் ஆசைப்படுவதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனை அனுபவிக்க விட்டு விடுகிறோம். கடன் வாங்கி அலைபேசி வாங்கிக் கொடுப்பதும் தாலியை விற்று இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கின்ற கண்றாவியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இங்குதான் இருவேறு துருவங்கள் சமுதாயத்தில் சந்திக்கின்றன.

அனுபவிக்க வேண்டும் என்று வளர்க்கப்பட்ட ஆணும் சமுதாயத்திற்கு வருகின்றான். பெண்தானே படித்தவள் தானே என்று சுதந்திரத்தோடும் உரிமையோடும் பெண் சமுதாயத்திற்குள் நுழைகிறாள். பெண்களைப் பொறுத்தமட்டில் அன்பை விட்டுப் பிரியவும் முடியாது. அன்பைப் பிரிக்கவும் முடியாது. இதுதான் அவர்களை இதுவரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. ஆகவே சகசமாக சகோதரனாக பழக ஆசைப்படுகிறாள்.

இதனால்தான் அன்பு செய்யும் ஆணிடம் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வாள். ஓடிஓடி உதவி செய்வாள், தொட்டுப் பேசுவாள்.. நமக்கு ஒண்ணு என்றால் கண்ணீர் வடிப்பாள் இவை எல்லாமே அன்பின் அடையாளம் தான். இந்த இடத்தில் தான் ஆண் தன் தவற்றை ஆரம்பிக்கிறான். பெண் அன்பினால் செய்கின்ற அத்தனையும் இவன் தன்மேல் உள்ள ஆசையினால் தான் இவ்வளவு செய்கிறாள் என்று எல்லை மீற ஆரம்பித்து விடுகிறான். அவள் அன்பை மறந்து அவளையே.

ஊடகங்கள் நம் வீட்டுப்பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த ஒரே பாடம் காதல் காதலித்தால் அவன் கதாநாயகன். இந்தத் தப்பெண்ணத்தைத் தகர்த்தெரிய வேண்டும். நட்பைப் பற்றி நல்ல விதமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆணைப் பொறுத்தமட்டில் ஒரு பெண் தன்னைப் பார்த்து சிரித்துவிட்டால் அதனை சிக்னல் என்று எண்ணுகிறான். தொட்டுப் பழகினால் கட்டித்தழுவ எண்ணுகிறான். பெண்ணின் இந்தப் பாசமான பழக்கங்களை ஆண் தன் பழக்கத்தினால் பச்சையாகவும், கொச்சையாகவும் கொண்டு செல்கிறான். சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிறான். அதனால்தான் அடிக்கடி இந்த அத்து மீறல்களும். பாலியல் சீண்டலகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு வேலைக்காரி முதலாளியை பாசமாகக் கவனித்தாலே உடனே முதலாளி படுக்கைக்கு அழைத்து விடுகிறான். ஏழ்மை, இயலாமை, எதிர்க்க முடியாத தன்மை என்ற காரணத்தினால் எல்லை மீறும் எந்த ஆணையும் அவனை வார்த்தவர்களையும் சுட்டுக் கொன்றால் நாடு நன்றாக இருக்கும்.

ஆகவே நம் வீட்டுப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுங்கள். காமம் கலக்காத பாசத்தைக் கற்றுக் கொடுங்கள். பெண் குழந்தையிடம் கற்றுக் கொடுங்கள். எல்லை மீறாத நட்பை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். இரட்டை அர்த்தம் இல்லாத வார்த்தைகளைப் பேசச் சொல்லுங்கள். நட்பு என்பது தொடுவதும் தழுவுவதும் உரசுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவதுமல்ல. உடனிருப்பதும் உற்சாகப் படுத்துவதும். நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதுமே ஆகும். காலம் வரும்வரை காத்திருக்கப் பழகச் சொல்லிக் கொடுங்கள். காதலும், காமமும் கண்ணை மறைப்பது. கல்யாணம் மட்டுமே சமுதாயத்தில் மதிப்பானது என்பதனை ஆழமாக விதையுங்கள். எந்த ஒரு ஆண்மகனைப் பார்க்கும்போது பெண்ணுக்கு நம்பிக்கை வருகிறதோ அவனே ஆண்மகன் கழுத்துக்குக் கீழே கண்பார்ப்பவன் கீழ் மகன் பாசமோ நட்போ பக்குவம் வந்தபிறகு பக்குவம் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் இன்னும் பல தாரணிகளை நாம் இழக்க வேண்டியிருக்கும். கவனமாய் இருப்போம்.

“காதல் காமம் களையப்பட வேண்டியது
தோழன், துணைவன் தூய்மையானது”

ARCHIVES