25

Jul

2022

திருமதி….

கடந்த 13.07.2022 அன்று ஒரு செய்தி என்னைக் கடந்து சென்றது கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மாணவி பள்ளிக்கூடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டாள் என்று. பல்வேறுக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு செய்தி வருவது சாதாரணமானதால் இதுவும் அவ்வாறு இருக்கும் எனக் கடந்து சென்றேன். ஆனால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் வன்முறைகள் அந்தச் செய்தியை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை திரும்பிப் பார்க்கிறேன்.

மகளே ஸ்ரீமதி என்பது தமிழில் திருமதி என்று தான் அழைப்பார்கள் மகளே உன் மரணம் இப்போது உலுக்குகிறது! உறங்க விடாமல் தவிக்கிறது. எங்கோ நடந்தது? என நினைப்பதால் தான் இப்படி இருக்கிறேன். எங்கள் வீட்டில் நடந்திருந்தால்? இதனைத் தவிர்த்திருப்பேனா? ஸ்ரீமதியின் தாயைப் போல நானும் தத்தளித்துக் கொண்டே அல்லவா தவித்துப்போயிருப்பேன். பல்வேறு நிகழ்வுகள் எல்லாம் பரவலாக நடந்தாலும் சரி, பக்கத்து வீட்டில் நடந்தாலும் சரி யாருக்கோ நடந்தது! என எளிதில் கடந்து விட்டுப் போவதால்தானே இன்றையப் பூமி சுயநலத்தால் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அன்பு மகளே அவசரப்பட்டுவிட்டாயோ? இல்லை என்றால் எதனைக் கண்டாவது அச்சப்பட்டுவிட்டாயா? அல்லது பொறுக்க முடியாத துன்பத்தால் அவமானத்தால் இந்தப் பூமியைவிட்டுப் புறப்பட்டு விட்டாயா? எது எப்படியிருந்தாலும் எதனை நிரூபிக்க இந்த மரணம்? எதிலிருந்து தப்புவிக்க இந்தக் காரணம்? இன்று பார் உன்முகம் கூட அறியாத பலர் உனக்கு நீதி கிடைக்கப் போராடுவது போல் ஒப்பாறி வைக்கிறார்களே இவர்களது கள்ளத்தனத்தையும் கயமைத்தனத்தையும் காணக்கூடாது என்று சென்று விட்டாயா?

உன் மரணம் என்ன தவிர்க்க முடியாததை தாங்க முடியவில்லையே தங்கச்சி பெற்றெடுத்த வயிறுகள் தான் பற்றிக் கொண்டு எறியும். பிள்ளை குட்டி இல்லாத எமனக்கு எங்கே புரியும்? உயர்ந்த இடத்திலிருந்து நீ விழும்போது உன் உடல் மட்டும் விழவில்லை எனக்கு இந்த ஒட்டுமொத்த உலகமே விழுந்துவிட்டது. விடியமுன் உன்னைப் பிணமாய் பார்த்ததால் எங்கள் வாழ்வு விடியாமலேயே போய்விட்டது.

நீ எட்டு வைத்து முன்னேறு என்று சொன்னது நீ வாழ்க்கையின் வசந்தங்களைக் காண்பதற்கு நீ மூன்றாவது மாடிக்கல்லவா எட்டு வைத்திருக்கிறாய்? இன்று பலர் உன் மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் அவர்கள் எல்லோரும் தான் தப்பிக்க வழி தேடிக்கொண்டிருக்கும் போது உன் மரணம் எங்களுக்கு மட்டும் வழியை மறித்து விழி பிதுங்கி நிற்க வைத்திருக்கிறது. மாணவ மாணவிகளின் மரணங்களுக்கு எப்போதும் தீர்வுகாண இரண்டு இளிச்சவாயன் ஆசிரியர் ஆசிரியைகள் மீது சட்டம் பாயும். அந்த அசிங்கத்தை நான் செய்ய விரும்பவில்லை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் என்றும் டார்ச்சர் பண்ணினார்கள் என்றும் பச்சப்பொய்யை ஊர் மெச்சச் சொல்லுவார்கள் ஆசிரியர் சொல் நமக்கு டார்ச்சர் இல்லை மகளே! இருண்ட உலகில் மீண்டு வெளிவர டார்ச்சு அடிப்பது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று வழக்கம் போல் கோர்ட்டும் காவல்துறையும் வாசித்து முடிப்பார்கள்.

மகளே நீயே போய்விட்டாய்! இனி நீதி வந்தால் என்ன? நேர்மை வந்தால் என்ன? எதனை நிரூபிப்பதற்கு மகளே இந்த மரணக் குளத்தில் நீ கு(ளி)தித்தாய்? இது காதல் விவகாரமாய் இருக்கும் என சில காட்டு மிராண்டிகள் சொல்லுகிறார்கள், சில கயவர்கள் உன் கற்போடு விளையாடி இருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள், சிலர் உன்னைக் கோழை என்பதால் நீ இந்த மரணத்தை தழுவி விட்டாய்! என்று சொல்லுகிறார்கள் எது எப்படியோ இந்தப்பருவ வயது (Teenage) அப்படித்தான் இருக்கும் அதனைப் பார்த்து வழிகாட்ட இந்தப் பாரினில் ஆட்கள் இல்லையோ? அதனை வைத்தே என் மகளைப் பயங்காட்டிவிட்டீர்களா?

சிலர் வந்து பள்ளியை அடித்து நொறுக்கினார்கள் சிலர் வந்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடினார்கள் எங்கள் நொறுங்கிப்போன உடம்புக்கு பள்ளியை நொறுக்குவதுதான் ஒத்தடமா? காவல் துறைக்கு கரன்சி நோட்டு கையூட்டாகத் தந்தார்கள் என்றார்கள் மகளே உன்னை கல்லறையில் வைத்ததால், அவர்களுக்கு வெகுமதி. அரசியல்வாதிகள் தாங்களுக்குத் தேவையான ஆதாயத்தைத் தேடிக் கொண்டார்கள் உனது அகால மரணத்தால் ஓட்டுமொத்த உலகமும் உன்னை எறியவிட்டு அவர்கள் குளிர்காய்ந்து கொண்டார்கள் இவர்கள் செயலைப் பார்த்துத்தான் இப்போதும் மனசு வலிக்கிறது.

மகளே இதில் யாரும் குற்றவாளியல்ல, நான்தான் மகளே நான்தான். உலகமே உன்னைத் தூற்றினாலும் ஓட்டு மொத்தமாய்க் காறி உமிழ்ந்தாலும் என் தந்தை மடி இருக்கிறது என்ற நம்பிக்கையை எப்போது தர மறுத்தேன்? மறந்தேன்? என் மகளுக்கு நம்பிக்கையைத் தரவேண்டியது நான் தானே! மற்றத் தந்தையைப் போலவே நானும் மாற்றான் தாயாக நடந்து கொண்டேனோ? மகளுக்கு துணிவோ! துணையோ முதலில் தகப்பன் தானே நாம் நம்பிக்கையைக் கொடுத்தால் அவளுடைய நாட்கள் நீளுமல்லவா! என் மகளே எந்நிலை வந்தாலும், தந்நிலை மறந்தாலும் மகளே மயங்காதே! தயங்காதே! தந்தை இருக்கிறேன் தயங்காமல் வா! தடையின்றி வா தடைகளை உடைத்துக் கொண்டு வா! சம்பிரதாயங்களைக் கிழித்துக் கொண்டு வா என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு பெண்ணுக்கும் தகப்பனாக நாம் சொல்லிக் கொடுப்போம் பெற்றோர்களே இறந்த குழந்தைகளுக்கு ஒப்பாறி வைப்பதை நிறுத்திவிட்டு இருக்கின்ற குழந்தையை காப்பாற்ற கரம் கொடுப்போம்.

தெய்வமும் பெற்ற தாயுமே மகளாகப் பிறப்பார்கள் என்பது ஒவ்வொரு பெண் குழந்தையைப் பெற்ற தகப்பனுக்கும் தெரியும் எனவே குழந்தைகளை கண்ணைப் போல் காப்போம் கண்கலங்காமல் பார்ப்போம்!

“என் மகள் என்
மிகப்பெரிய சொத்து – என்று
சொல்வதில் தான்
மிகப்பெரிய கெத்து!”

ARCHIVES