05

Aug

2022

நன்றி மறவேல்…

நான் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள் என்ற செய்தியே கண்முன் வந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டார்கள். மருது சகோதரர்களைக் கொன்றார்கள், வீரன் அழகு முத்துக் கோன், தீரன் சின்னமலை, மருதநாயகம், திப்பு சுல்தான் ஜான்சிராணி என்று மன்னர்களைப் பார்த்தே வேட்டையாடியிருக்கிறார்கள். அவர்களோடு போர் வீரர்களையும் கொன்றிருக்கிறார்கள். காரணம் நிலையான ஆட்சி, நீடிய ஆட்சி எதுவும் இல்லாது குட்டிக் குட்டி இராஜ்ஜியங்கள் அமைத்துத் தமக்குள்ளே போராடி அழிந்திருக்கிறார்கள். வளமான வாழ்வு மக்கள் வாழ்ந்ததாகவோ மன்னர்கள் மக்களுக்குச் செய்ததாகவோ எந்தத் தடயங்களும் இதுவரை இல்லை. மன்னர்களுக்குக் கோட்டைகள் இருந்திருக்கிறது. மக்கள் ஏழ்மையில் தான் வாழ்ந்திருக்கிறார்கள் பின்பு எதைக் கொள்ளையடிப்பதற்காக ஆங்கிலேயர்களும் யாரைக் காப்பாற்ற மன்னர்களும் போரிட்டார்கள் என்றுதான் எனக்கு இதுவரை விளங்கவில்லை.

காந்தியடிகள் கடைசிவரை ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் கடைசிவரை அவரைக் காப்பாற்றி வந்தார்கள். ஆனால் அவர் சுதந்திர இந்தியாவைச் சுற்றி வரும்போது தான் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று சுட்டுக் கொன்றவரைத்தான் சிலர் கொண்டாடி மகிழ்கிறார்கள். அப்படியென்றால் யாருக்காகக் காந்தி சுதந்திரம் வாங்கித் தந்தார். இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோமா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் ஆட்சியாளர்கள் கொடுமைப்படுத்தினார்களோ! இல்லையோ? ஆங்கிலேயர்கள் பலர் இன்றைய மதராஸை உருவாக்கியவர்கள் அவர்கள்தான் அன்று சென்னை சிதறிக்கிடந்தது. சேட்டுகள் நிறைந்த ஊர் சேத்துபட், ஆடுமாடு மேய்ப்பவர்கள் இருந்த இடம் மந்தவெளி, துணி துவைப்பவர்கள் இருந்த இடம் வண்ணாரப்பேட்டை, பிராமணர்கள் இருந்த இடம் மைலாப்பூர், ஏரிக்கரையில் இருந்த இடம் நுங்கம்பாக்கம், கல்பாக்கம், மீனம்பாக்கம், நெசப்பாக்கம், சேப்பாக்கம் ஆகிய இடங்கள் இவ்வாறு சாதிக்கு ஏற்ப வசதிக்கு ஏற்ப ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களை கூவம் நதி இணைத்தது. அன்று செழிப்பாக இருந்த இந்த நதியின் மூலம் மக்களை ஒன்றாக இணைத்து மதராஸியாய் உருவாக்கியது ஆங்கிலேயர்கள்தான். ஆனால் இன்று கூவத்தைக்கூட நாற்றமெடுக்கச் செய்து விட்டோம்.

அதுமட்டுமல்ல சென்னைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்து சென்னையைச் செழிப்பாக்கியவர்களும் ஆங்கிலேயர்கள் தான் இன்று சென்னையில் 52 தெருக்கள் ஆங்கிலேயர்கள் பெயரைத் தாங்கியிருக்கும் அவர்கள் எல்லாம் அப்போதே சிங்காரச் சென்னையாக மாற்றியவர்கள்.

இங்கு பிரேசர் சாலை என ஒன்று உண்டு. அவர்தான் சென்னைக்குக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர். மேட்லிரோடு என ஒன்று உண்டு இவர்தான் சென்னைக்குக் கழிவுநீர்த் திட்டம் கொண்டு வந்தவர். பால்பர் சாலை என ஒன்று உண்டு. இவர்தான் சென்னையில் அருங்காட்சியத்தையும், மிருகக் காட்சி சாலையும் அமைத்தவர். ஸ்டீபன் சாலை என ஒன்று உண்டு. இவர்தான் பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலையைத் துவக்கியவர். மூர்சாலை என ஒன்று உண்டு. இவர்தான் மூர்மார்க்கெட்டையும் எஸ்.ஐ.ஏ.ஏ விளையாட்டுத் திடலையும் உருவாக்கி விளையாட்டு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

ஏனென்றால் எப்போதும் தமிழன் நன்றி மறந்தவன் அல்ல. எது செய்தாலும் நல்லவைகளை எதிரியே செய்தாலும் அவனை நெஞ்சில் வைத்துப் போற்றக் கூடியவன் தமிழன் ஆங்கிலேயர்கள் சென்னை மட்டுமல்ல சென்ற இடத்திலெல்லாம் நன்மைகளைச் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு அளப்பறிய சேவை செய்த கால்டுவெல், ஜீ.யு போப்பை யாரால் மறக்க இயலும்? எப்படி மறக்க முடியும்?.

பென்னிக்குயிக் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு வந்து முல்லைப் பெரியாரைக் கட்டித்தந்தாரே அவரை எளிதில் எப்படி மறக்க முடியும்?. இன்று மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓங்கி வளர்ந்திருக்கும் தேக்கு மரத்திற்கு வித்திட்டவர். ஹியூகோ உட் என்னும் ஆங்கிலேயர் காட்டு இலாகா அதிகாரியாக இருந்தார். இவர் தார் தேக்கு மரச் சாகுபடியைக் கொண்டு வந்தவர். இன்றளவும் டாப்சிலிப் பகுதியில் அடர்ந்த காட்டில் உள்ள கல்லறையில் அயர்ந்து தூங்குகிறார்.

நெல்லையில் பல கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தவர் மர்காஷிஸ். ஊட்டி நகரம் பியூட்டி நகரமாக உருவாகக் காரணம் ஜான் கல்லிவன். இவர் தான் மலை வாழ் மக்களுக்கு விவசாயம் கற்றுத்தந்து உருளைக் கிழங்கை உருவாக்கினார் இன்றளவும் ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். வரலாற்றில் கிழிக்க முடியாத கிறுக்க முடியாத பக்கங்களாக அங்கம் வகித்துள்ளார்கள். அவர்களை மறந்தால் தமிழன் நன்றி கெட்டவன் என்று நாளேட்டில் பதிப்பட்டுவிடுவான். நன்றியுடனே நடைபோடுவோம்!

சில கொடுங்கோல் ஆட்சி செய்த ஆங்கில அதிகாரிகள் இருந்தால் அவர்கள் சிலைகளைக் கூட சிரச்சேதம் செய்யலாம் தப்பில்லை. ஆனால் அவசரமாய் அப்புறப்படுத்தப் போகிறோம் என்று நம்மில் அங்கமாகிப் போன ஆங்கிலேயர்களை அவசரக்கதியால் அப்புறப்படுத்தி விடாதீர்கள். நாம் நன்றி மறந்தவர்கள் அல்ல இன்றும் அவர்களை நாம் இதயத்தில் சுமப்பதால் தான் நாம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று உரக்கக் கத்தி உலகிற்குச் சொன்னோம்.

நாம் 75வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடப் போகிறோம் நமது பாட்டன், பூட்டன், விடுதலைக்கு உழைத்தவர்களை வீர முழக்கம் இடப்போகிறோம். பாரதத்தைத் தூக்கிப்பிடிக்கப் போகிறோம் என்று தூரத்துச் சொந்தங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லி அற்புத மனிதர்களை இழந்து விடாதீர்கள், இகழ்ந்து விடாதீர்கள், வருகின்ற தலைமுறைக்கும் வரலாற்றைத் தப்பாகக் கற்பித்து விடாதீர்கள். நாளும் பொழுதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நன்றியுடன் நடப்போம்.

“தன்னை மறந்தவன் மட்டுமே
நன்றி மறந்தவனாக இருப்பான்”

ARCHIVES