02

Jan

2023

அன்புள்ள அம்மாவுக்கு…

அம்மா உனக்கென நான் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு பொருள் நம்ம பையிலோ, கையிலோ இருக்கும்வரை அதன் பெருமை தெரியாது ஆனால் அதை இழக்கும்போது அதன் அருமை தெரியும் என்பார்கள் அதைபோல்தான் விளையாட்டுப் பிள்ளையாகச் சிலநேரம், விளையாட்டுக்காகச் சிலநேரம் உன்னைப் பிரிந்து வந்தநேரத்தை எல்லாம் விபரம் தெரிந்தபிறகு உன் பிரிவின் ஒவ்வொரு நிமிடமும் உயிரை உலுக்குகிறது அம்மா. என் வாழ்நாளில் வசந்தத்தையும், வருமானத்தையும் தேடிச் செல்லும் போதெல்லாம் உன்னைத் தொலைத்துவிட்டேனம்மா. இல்லை இல்லை நானே தொலைந்து போனேன் அம்மா. உன் முந்தானையில் நான் முகம் பதித்திருந்ததுதான் என் முதல் சொர்க்கம் அம்மா ஆனால் இழந்த சொர்க்கத்தை இப்போது எங்குபோய் தேடுவேன்? நீ இருக்கிறாய், நானும் இருக்கிறேன் நீ அருகில் இல்லாததால் பல நேரங்களில் நான் நெருப்பில் இருக்கிறேன். கண்ணீர் வடிக்கும்போது, கவலையில் துடிக்கும்போது நீ அருகில் இல்லையே என இப்போது அழுகிறேன்.

என் பயணத்தில் பல பெண்கள் என்னை ஏமாற்றியதை போல் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது பச்சைப்போய் நீ காட்டிய அன்பை அவர்களிடத்தில் எதிர்பார்த்துப் பார்த்து நான் ஏமாந்து போனேனே தவிர அவர்கள் அன்பில் குறையில்லை. ஆனால் நீ காட்டிய அன்பிற்கு ஈடுஇணையே கிடையாது என்னும் போது அதைத் தொலைத்துவிட்டு தொலைவில் நிற்கிறேனே எனக்கு யார் ஆறுதல் சொல்வது? அது சரி உனக்குத் தெரியும் அடிக்கடி பொருளைத் தொலைத்துவிட்டு அழுது கொண்டிருப்பவன்தானே? பொம்மைத் தொலைத்துவிட்டால் வேறொறு பொம்மையை வாங்கிக் கொள்ளலாம் அம்மையைத் தொலைத்துவிட்டால்?

அது சரி அப்பாதான் வேலைக்குப் போனார் நீ அதிகாலையில் எழுந்து அவருக்கு உணவு சமைக்க நெருப்போடு நேசம் கொண்டிருப்பாய் இரவு அனைவரும் உண்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் தூங்கப் போய் விடுவேன். நீ எப்போது தூங்கினாய்? என்று எனக்கு இப்போது கூடத் தெரியாது ஓ தெய்வம் தூங்காது எனத் தெரியாமலா சொல்லிருப்பார்கள். ஆனாலும் என் அப்பா ஆசிரியராய் இருக்கிறார் என் அம்மா சும்மாதான் இருக்காங்க என்று பள்ளியியல் தொடங்கி இன்று வரை நான் சொன்ன பச்சைப் பொய்க்கு இன்றுவரை பாவ மன்னிப்பு உண்டாமா? எனக்குத் தெரியலே. ஆனால் எனக்குத் தெரிந்த ஒன்று அப்பா வீட்டுக்கு வந்து சும்மாதான் இருப்பாங்க நீ எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பாய் அப்படி இருக்க நீ சும்மா இருக்கிறாய் என சொன்ன தெப்படி?

அப்பா என்பது பல வீடுகளில் அரசாங்கம். குழந்தைகளின் குரல் தொழிலாளியின் குரல்போல் பல நேரங்களில் அவர்களுக்குப் பயந்து கொண்டு வெளியில் சொல்லாமல் உள்ளம் குமுறி இருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்காக இடைத்தரகராக வந்து அப்பாவின் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய குலதெய்வம் நீ. உலகமே நான் உருப்படமாட்டேன் என்று கூறும் போதும். என் மகன் உலகையே ஆளப்போகிறான் என்று உச்சி முகர்ந்து உலகிற்குச் சொல்வாயே. அந்த உத்வேகம் தான் இன்றுவரை என்னை உறங்கவிடாமல் ஓடிக்கொண்டே இருக்க வைத்திருக்கிறது.

மருத்துவம் கூட ஆற்றமுடியாத என் மனவலியை உன் மடியில் படுத்திருக்கும் போது ஆற்றி விடுகிறது அம்மா. தொட்டிலில் தூங்கும்போது எழுந்துவிட்டானோ என ஓடிவந்து பார்த்தவள் கட்டிலில் தூங்கும்போது கீழே விழுந்திடுவானோ என ஓடி வந்தவள் வீதியில் அம்மா என சத்தம் கேட்கும் போதெல்லாம் என் மகன் விழுந்து விட்டானோ? என வீதிக்கு வந்தவள் இப்படி எனக்காக ஓடி ஓடியே உன் கால்கள் தேய்ந்து போனதம்மா. உன் கால்களைத் தொட்டு இப்போதாவது கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். அம்மா!

கால வோட்டத்தில் நானும் ஒரு தூசி எனத் தெரியும். ஆனால் நீயோ என்னைத் தவமிருந்து பெற்றதாகக் கூறிக் கொள்வாய். கிளிக்குஞ்சுக்கு இறகு முளைத்தால் அதன் அழகு தெரியும்! ஏன அடிக்கடிச் சொல்வாயே. எனக்கு இப்போது இறகு முளைத்துவிட்டது ஆனால் என் வானம் நீ அருகில் இல்லையம்மா. பணமும் புகழும் என்ற போதையில் இருப்பவனுக்கு மட்டுமே அம்மாவின் வீட்டுக்குப் பாதைத் தெரியாது சொர்க்கத்திற்குப் போகிற பாதை அம்மாவின் கால் தடந்தான் என அனுபவித்த ஒவ்வொருவருக்கும் தெரியும். அம்மா.

உன்னைப் போன்று அன்பு செய்தவள் உலகில் வேறு யாருமே இல்லையென்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் உன்னை உயர்த்துகிறேன் என்று மற்றத் தாய்களை மட்டம் தட்டி விடும் மடத்தனத்தை உன் மகன் செய்ய மாட்டான். உன்னைப் போன்று அன்பு செய்கிற ஒவ்வொருவரையும் நான் தாயாகத்தான் பார்க்கிறேன்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்பார்கள். மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன் என்பார்கள். ஆயுளை அதிகப்படுத்தும் அதிசய நெல்லிக் கனியை ஒளவைக்குத் தந்த அதிகமான் என்பார்கள். இவர்கள் எல்லாம் இவனுக்கு முன்னால் இப்போது இவர்கள் எல்லாம் இவனுக்குப் பின்னால். தன் தாயையே எனக்குத் தாரைவார்த்துத் தந்த என் தனயன் உண்டு அந்தத் தாயோ. தன் குஞ்சுகளைவிட தன்னை நம்பி வந்த குயிலின் குஞ்சுகள் மீது காட்டும் காகத்தின் அன்பைப் போல தன் பிள்ளைகளைவிட என் மீது அவர்கள் காட்டும் அந்த அன்பின் தாயை நான் மறக்க முடியாதே அப்படி நான் மறந்து விட்டால் நான் இறந்து விட்டேன் என்றல்லவா அர்த்தம். அந்த அம்மா ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் என்னைத்தேடி ஏக்கமாய் இருப்பார்களே எப்படி மறக்கமுடியும்?

துன்பம் வரும்போது துணைக்கு வருவதுபோல அழுகை வரும்போது கை துடைக்க வருவது போல நொடிந்து விழும்போதும் இடிந்து அழும்போதும் எனை துயர் துடைத்து தூக்கி நிறுத்தி கரம்பிடித்து அழைத்து கண்ணீர் துடைத்து தன்பிள்ளை இருந்த இடத்தில் என் பிள்ளை இவன் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்றுவரை அவர்கள் இல்லாமல் நானில்லை என்ற மதுரை அம்மாவை மறக்க முடியுமா? தாய்மை உள்ளத்தோடு எனக்கு தைரியம் ஊட்டி தடம் காட்டிய அத்தனை பேருமே எனக்கு அம்மாக்கள் தானே!

என் அம்மாவுக்குத் தெரியும் எல்லா இடத்திலும் எல்லா நிலையிலும் எப்போதும் தன் மகனோடு இருக்க முடியாது என்று ஆனால் எனக்கு அம்மாவின் பாசம் வேண்டும் என்ற என் தேடல் தான் உருவத்தில் மாறுபட்டு அதே அன்பைக் காட்டுகிற ஒவ்வொருவருமே எனக்கு அம்மாக்களே! இன்று என்னோடு பயணிக்கிற ஆசிரியைகள் சகப்பணியாளர்கள் நட்புறவில் இருக்கிறவர்கள் துன்பத்தில் தோள் கொடுக்கின்ற தோழிகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்ற மகள்கள் உடன் பயணிக்கும் உழைப்பாளிகள் தக்க சமயத்தில் சரியாய் வழிநடத்தும் தலைவர்கள். இப்படி பல்வேறு உருவத்தில் என்னை பக்குவமாய் பாசமாய் வழிநடத்துகிற அத்தனை பேருமே என் அம்மாக்களே. நான் கண்ணீர் சிந்தவைத்தாலும் என்னைக் கலங்காமல் பார்த்துக்கொள்ளும் தாய்மையுள்ளம் கொண்ட தாய்களுக்கே மனந்திறந்த இந்த மகனின் மடல்.

– காலமெல்லாம் அன்போடு

………………………………

“யார் கொடுத்த அன்பையும் ஒரு
தாய் கொடுக்க முடியும்! ஒரு
தாய் கொடுத்த அன்பை இனி
யார் கொடுக்க முடியும்?”

ARCHIVES