07

Jan

2023

தமிழா! தலை நிமிர்….

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று அன்று சொன்னார்கள். அது இன்று சற்று மாறுதலாகி வடக்கு தெற்கால் வளருகிறது தெற்கு வடக்கால் வீழ்கிறது என்று மாற்றிச் சொல்லும் அளவிற்கு காலம் மலிந்து விட்டது. தமிழன் மெலிந்து விட்டான். பொருளாதாரத்தில் நலிந்து விட்டான். நமக்கு இருக்கிற பல்வேறு வேலை வாய்ப்புகளை வடநாட்டவர்கள் தட்டிப் பறித்து விட்டார்கள். அடிப்படை வேலை வசதிகளைக்கூட நமது சோம்பேறித்தனத்தால் விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கிறோம். வெட்டிக் கௌரவத்தால் சில வேலைகள் செய்வதைக் கேவலமாக விட்டு விலகி நிற்கிறோம். இதனால் உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாக எண்ணுகின்ற வடநாட்டவர்கள் மெல்ல மெல்ல ஊடுருவி இப்போது நம்மைவிட மேலானவர்களாக நிற்கிறார்கள். இப்படியே போனால் இருப்பதையும் இழந்துவிட்டு அவர்களிடமே கையேந்தும் நிலை வெகு தொலைவில் இல்லை.

தொடக்கத்தில் பிராமணன் வேதம் ஒதவும், சத்திரியன் நாட்டை ஆளவும், வைஷ்ணன் வியாபாரம் செய்யவும் சூத்திரன் துப்புரவுப் பணிகளைச் செய்யவும் என வகுத்துக் கொடுத்து ஒவ்வொருவருக்கும் பணி உண்டு என்று நிர்ணயித்தார்கள். அவர்கள் அவர்களது பணியைச் செய்தார்கள். பின்பு இது சாதியாக மாறி குலத்தொழிலாக வளர்ந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை என்பதை விட்டுவிட்டு இன்னாருக்கு இந்த வேலை தான் என இளக்காரமாக ஒதுக்கி வைத்ததோடு இல்லாமல் அதனைச் செய்கின்ற தொழிலாளிகளையும் ஒதுக்கி வைத்தார்கள். சாதி என்ற அரக்கன் உருவாகினான். ஏற்றத்தாழ்வுகள் எங்கும் விரவிக் கிடந்தன. அந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெரியத்தான் குலத் தொழிலைப் புறக்கணித்தார்கள் போராடினார்கள். தாழ்ந்த தொழில் என்று நினைப்பதனை விட்டொழித்தார்கள்.

ஆனால் இன்றைய நாளில் இளைஞர்கள் வேலை செய்வதையே இழிவாக எண்ணுகிறார்கள். வந்தால் மகாராஜாவாக வருவேன் இல்லாவிட்டால் மரணத்தை தழுவி நிற்பேன் என்பதுபோல் படித்தால் மருத்துவம், பொறியியல், வேலை செய்தால் வெளிநாட்டுக் கம்பெனி இல்லையென்றால் வீட்டில் சும்மா இருப்பது. இந்த நிலைமை நீடித்தால் தமிழகத்தில் தொழில்கள் பெருகியும் தொழிற்சாலைகள் பெருகியும், தமிழனின் பொருளாதாரம் மட்டும் வீழ்ச்சியடைந்து நிற்கும். சாலைகள் போடுவது சைக்கிள்கள் பொருத்துவது உணவகங்களில் வேலை செய்வது, மால்களில் வேலை செய்வது என அனைத்திலும் வெளி மாநில மக்கள் வேலை செய்யும்போது தமிழன் மட்டும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.

வறட்டுக் கௌரவத்தில் வாழ்ந்து பழகிய தமிழனால் கிடைக்கும் வேலைகளைச் செய்ய மனமில்லை. இதனால் அவன் பட்டு வேட்டிக்கு கனாக் கண்டு கொண்டு இருக்கும்போது கட்டியிருக்கிற கோவணமும் களவாடப்படுவதுத் தெரியாமல் கண்மூடி இருக்கிறான். கேட்டால் இது தவம் கலைத்து விடாதீர்கள் என்று சொல்கிறான். தமிழா இது தவமல்ல தரித்திரம் புரிந்து கொள் இருப்பதையெல்லாம் இழக்கும் முன் விழித்துக் கொள். எப்போது நீ தூக்கத்தில் இருந்து விழித்தெழப்போகிறாய்?. உன் துயரத்தில் இருந்து எப்போது விடுபடப் போகிறாய்?.

எப்போதுமே நாம் ஆண்ட பரம்பரை என தழிழர்கள் என்று மார்தட்டிக்கொள்வோம். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தோனேசியா என்ன எண்ணற்ற நாடுகளில் தமிழனின் ஆதிக்கமும் அரசாட்சியும் இருந்தது என மார்தட்டிக் கொள்கிறோமே இன்று நம் சொந்த வீட்டில் முடமாகிக் கிடக்கிறோமே ஏன்? பக்கவாதம் இல்லாமலே படுத்துக் கிடக்கிறோமே. உலகில் சிறந்த இலக்கியமே எங்கள் இலக்கியம் என்று மார்தட்டிய நாம் இன்றையப் பயணத்தில் கால் தட்டி விழுந்து கிடக்கிறோமே? டாஸ்மார்க் விற்பனையில் சரித்திரமும் போதையில் தடுமாறுவதில் தரித்திரமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது தெரியவில்லையா?

ஆண்ட பரம்பரை அடிமையாகக் கிடக்கிறதே இங்கு சாதிக்கு அடிமை அதனால் சாதிக்க முடியவில்லை மதத்திற்கு அடிமை அதனால் ஒற்றுமை இல்லை, நடிகனுக்கு அடிமை அதனால் வேலையில் வறுமை அரசியலுக்கு அடிமை அதனால் சுயபுத்தி இல்லை. யாரும் விழத்தட்டாமல் தானே விழுந்து தரையில் கிடக்கிறோமே தமிழா இதுதான் உன் விதியா? இதுதான் இனி தமிழனின் மதியா?

ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில் என்று சொல்லி வந்த நாம் இப்போது எல்லோரும் ஒரே தொழிலைச் செய்து வருகிறோம் அது என்ன தொழில் என்றால் அதுதான் வியாபாரம். ஏன் வியாபாரம் செய்கிறோம்?. கோடிஸ்வரனாய் வாழ குறுக்கு வழியைத் தெரிந்து பலருக்கு நாம் கூட இருந்தே குழிபறித்து எளிதில் ஏமாற்றி இல்லாததை இருப்பதாய் காட்டி ஆசை காட்டி மோசம் செய்து அதில் அரசியலும் செய்து வாழத்துடிக்கிறோமே இது வாழ்க்கையா? இதற்கு நாம் வாழ்வதை விட சாவதே மேல். மருத்துவமும் வியாபாரம், கல்வியும் வியாபாரம், அரசியலும் வியாபாரம், மோசடிகள் வியாபாரம், இதோடு சூதாட்டம் போன்ற விளையாட்டுகள் அப்பப்பா மனிதனைத் தின்று மனச்சாட்சியைக் கொன்று முன்னேறத் துடிப்பது வாழ்க்கையா?

தமிழா விழித்தெழு பக்கத்து மாநிலத்தவர்கள் உனக்குப் பாடை கட்டவில்லை. பக்கவாதத்தில் நீ விழவும் இல்லை. சாகாமலேயே நீ சவக்குழியில் படுத்திருக்கிறாய். இப்படியே இருந்தால் உன் குழந்தைகள் உன் வீட்டில் அயலாருக்கு அடிமையாய் இருப்பார்கள் உன் கல்லறைத் தோட்டத்தில் அவர்கள் குழந்தைகள் கால்பந்து விளையாடுவார்கள். உன்னுடைய குலதெய்வக் கோவிலில் அவர்கள் தெய்வம் குடியிருக்கும் உன்னுடைய கடையில் நீயே தொழிலாளியாக இருப்பாய் இதை உணர். யாரும் உனக்கு விலங்கிடவில்லை நீயே மாட்டி வைத்திருக்கிறாய் உடைத்துவிட்டு வெளியே வா! உன் சொர்க்த்தை நரகமாக்காமல் உன் சொத்தை நாசமாக்காமல் உன் தொழிலுக்கும் தொழிற்சாலைக்கும் நீயே அதிபதியாகு எழுந்திரு! விழித்திரு! உழைத்திரு! உன்னையே நீ அறிவாய்!

“தொழிலை இழிவெனக் கருதினால் நீ
காலத்தின் கழிவு ஆவாய்!”

ARCHIVES