13

Jan

2023

அன்புள்ள விவசாயிக்கு…

நலம் நலமறிய ஆவல் எனக்கேட்க ஆசை. எங்கே நீ நலமாக இருக்கிறாய்? நலமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. உன்னை கண்டுவர வேண்டும் புறப்பட்டேன். ஆனால் என் கால்கள் தடுக்கிறது கனத்த இதயத்தோடு மனம் பின்னால் நகர்கிறது. எனக்கு உணவு கொடுத்து வளர்க்கின்ற தெய்வம் நீ. ஆனாலும் உன்னைப் பிறர் ஒடுக்கும் போதெல்லாம் நான் வேடிக்கை பார்க்கும் விந்தை மனிதனாகவே நிற்கிறேன். வெட்கித் தலைகுனிகிறேன். விவசாயியே! என்னை மன்னித்துவிடு.

பணத்தை ஊதியமாகப் பெறலாம். தங்கத்தில் முதலீடு செய்யலாம். பளிங்குக் கல்லில் வீடுகள் அமைக்கலாம். அலங்கார விளக்குகள் அமைக்கலாம். கண்ணைக் கவரும் வண்ணமிகு தோட்டங்கள் அமைக்கலாம். ஆனாலும் உணவு மட்டும் உனக்கு இல்லாது போனால் காலப்போக்கில் நீ கல்லறையில் இருக்கும் எலும்புக்கூடுதானே உன்னைச் சுற்றி இருப்பவையெல்லாம் கல்லறைத் தோட்டங்கள் தானே! என்ன இருந்து என்ன பண்ண உண்ண உணவு இல்லாதபோது!

வாழ வைத்த என் விவசாயத் தெய்வமே உன்னை வாழவிடாமல் பண்ணிவிட்டோமே! விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகிப்போனது. வயல்வெளிகள் எல்லாம் தொழிற்சாலைகள் ஆக்கப்பட்டது. குளங்கள் குறைக்கப்பட்டது. நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. ஆற்று மணல்கள் அபகரிக்கப்பட்டது. மழைதர உதவி செய்த மரங்கள் வெட்டப்பட்டது. மலைகள் தகர்க்கப்பட்டது. இப்படி விவசாயியின் உறுப்புகள் எல்லாம் நறுக்கப்பட்டு உயிர் வாழ் என்கிறேன். இருப்பினும் எஞ்சி இருக்கிற இடங்களை வைத்து எங்களைப் பசியாற வைக்கின்ற இரண்டாம் தாய் நீ! தன் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் வானம் வஞ்சித்து விட்டதே என வருந்தி தற்கொலை செய்து கொண்ட தன்மானச் சிங்கமே! உன்னைத் தகனம் செய்யும் போதும் ஒரு செய்தியாகக் கடந்துப் போகிறேனே நான்! எவ்வளவு பெரிய அயோக்கியன்?

என் உயிர் (கொடுத்த) தோழனே! நான் சோற்றிலே கை வைத்த போதெல்லாம் நீ சேற்றிலே கால் வைத்த ஞாபகம் வரணும் ஆனால் வரவில்லையே! எவ்வளவு நன்றி கெட்ட பிறவி நான்! என்னைப் பெற்றவளே ஆறு மாதம் சோறு ஊட்டியதை 6000 முறைச் சொல்லிக் காட்டிய போதும் ஆயுள்வரை எனக்குச் சோறு ஊட்டுவதை ஒருமுறை கூட சொல்லிக் காட்டாத உத்தம புத்திரன் நீ! பிறருக்குச் சோறு ஊட்ட பணி செய்கிற நீ எங்கே! தனக்குப் பொருள் சேர்க்கிற பெருங்கூட்டம் நான் எங்கே! உன்னை விட இவர்கள் எதில் உயர்ந்தவர்கள்? ஆனால் உலகம் இவர்களைத்தானே வணங்குகிறது!

விவசாயம் ஓரு நாட்டின் முதுகெலும்பு என்பார்கள் ஆனால் காலப்போக்கில் பல நாடுகள் இங்கு கூனலாகிக் குறுகிக் கிடக்கிறது சோமாலியா என்ற ஓரு நாடு இருந்தது. அது இன்று சோறு இல்லாமல் செத்துப்போய் விட்டது. இந்த நிலை இந்தியாவிற்கு வர வெகுதூரமில்லை எந்த நாடு விவசாயத்தையும் விவசாயிகளையும் மதிக்கத் தவறுகிறதோ அந்த நாடு தனது சவக்குழியை தானே வெட்டிக் கொள்கிறது விவசாயி! அரசையும், மக்களையும் காப்பாற்றுகிற அட்சய பாத்திரம் வைத்திருப்பவன் ஆனாய் அவன் இன்று வறுமையின் பிடியில் சிக்குண்டு வாழ்வாதரத்தை இழந்து பிறரையும் வாழ வைக்க முடியவில்லையே எனத்துடித்துக் கொண்டு இருக்கிறான்.

கடவுளைப் போல் தம்மைப் பராமரிக்கிற விவசாயி கேவலமாகப் பார்க்கப்படுகிறான். கையூட்டு வாங்குகிற ஒரு கல்வி அதிகாரியை நூறு முறை வணங்குகிறோம். ஓசியில் ஏசியில் இருப்பவன் அதிகாரி! வயல்வெளியில் மழையிலும் வெயிலிலும் பாடுபடுகிறவன் விவசாயி. தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்து மானிடத்திற்கு உணவளிக்க முடியாத போது விவசாயத்தைப் பெருக்க உற்பத்தியைப் பெருக்க அவன் போராடும் போது அவன் மீது அதிகாரத் திமிறில் காரை ஏற்றிக் கொல்லத் துணிந்த கயவர்கள் வாழும் நாடு இது. அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற கண்டனக் குரல் கூட எழுப்பாமல் மௌனம் காத்து விட்டோமே! என்ன கர்மம் டா இது! உயிர் கொடுப்பவனை உயிரை எடுக்கின்ற உலகமகா பொறுக்கித்தனம் எந்த நாட்டில் உண்டு? இதற்கு நாம் அடையப் போகிற துன்பமும் கிடைக்கப் போகிற மரணமும் நீங்கள் கேள்விப் படாத ஒன்றாக இருக்கும் காலம் பதில் சொல்லும்.

எனக்கு இப்போது சோறு கிடைக்கிறது என சந்தோசப்படுகிறவர்களே எதிர்காலம் சூனியமாக்கப்படுவதை யார் அறிவார்? ஒரு நாடு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் அந்த நாட்டில் விவசாயி கடவுளைப்போல் வணங்கப்பட வேண்டும். விவசாயம் அரசுத் தொழிலாக அறிவிக்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒரு விவசாயி கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். வறுமையின் பிடிக்குள் ஒரு நாடு வந்து விடாமல் பசி என்னும் கொடூர அரக்கனை கலப்பை என்னும் கொடும் வாளால் வெட்டித் தீர்ப்பவன் விவசாயி மட்டுமே!

இத்தனை நன்மைகளை நான் எப்படி மறந்தேன்? ஏன் நான் விவசாயியை இழந்தேன்? இந்த வாழ்வில் நான் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமென்றால் நான் விவசாயியாய் மாறியிருக்க வேண்டும். அந்தக் கொடுப்பனை எனக்குக் கிடைக்கலையே! எந்தத் தொழிலிலும் கலப்படம், கையூட்டு, சோம்பேறித்தனம், பற்றாக்குறை, பதுக்குதல், ஒதுக்குதல், மக்களைக் கெடுத்தல், புறக்கணித்தல் என எண்ணற்ற பாவச் செயல்களில் படுத்துக்கிடக்கும் போது தூய பணியினை செய்வதும் பலர் துயரங்களைத் துடைப்பதும் பலரை வாழ வைப்பதும் விவசாயம் தானே!

விவசாயியே! என்னை வாழ வைத்த தெய்வமே உன்னை மறந்த குற்றத்திற்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உன்னை மறப்பதும் உயிரைத் துறப்பதும் ஒன்றுதானே. என் கண்கண்ட தெய்வமே நீ தானே! உன்னை உலகம் மறந்தால் உணவுத் தட்டுப்பாட்டில் கலகம் விளையும். பின்பு நாடு சுடுகாடாக மாறும். கடவுள் இருந்த புண்ணிய பூமியில் கழுகுகளும், கோட்டானும் குடியேறும். சொர்க்கம் நரகமாகும் சோறு தண்ணியின்றி நாடு நாசமாய்ப் போகும். எத்தனை வளங்களை வரங்களாய் தரும் சாமியே உன்னை சங்கடப்படுத்தி விட்டேன். நான் சாப்பிட்டால் போதும் என இருந்துவிட்டேனே. ஊரே சாப்பிட உரமிட்டவனே! எனக்குக் கொஞ்சம் உப்பையும் சேர்த்து இடு. சூடு சொரனை வரட்டும் எனக்கு. இருப்பினும் இப்போதாவது விழித்துக் கொள்கிறேன். நீ நலமாக வேண்டும். இந்த நாடே அறிய வேண்டும். உன்னுடன் உழைத்தவர்களுக்கெல்லாம் உணவைக் கொடுத்தவர்களுக்கெல்லாம் நன்றியோடு நீ நினைத்துப்பார்த்து நீ பொங்கல் விழாக் கொண்டாடுகிறாய். உன்னை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமே. என் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருப்பவனே உந்தன் கை குலுக்க எனக்குக் கல்வியறிவு மட்டும் போதாது. உன் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

“களர் நிலத்தையும் பயிர் செய்பவனே – என
கல்நெஞ்சத்தையும் உழுது பழுது நீக்குவாய்
விவசாயம் எனது வேத பாடம்
விவசாயி என் கண்கண்ட தெய்வம்”

ARCHIVES