16

Feb

2024

எம்டன் மகன்…

எம்டன் மகன் என்றவுடன் சினிமாக் கதை என்று எண்ணிவிடாதீர்கள். மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு மகன் ஒரு நாள் அவனை ஒரு கல்லறையில் சந்தித்தேன். ஒரு கல்லறையின் முன் கலங்கிய கண்களோடு நின்று கொண்டிருந்தான். ஏறக்குறைய அப்பாவை இழக்க வேண்டிய வயதுதான் அவனது வயது. இருப்பினும் இவ்வளவு கலங்குகிறானே? என நினைத்து அவன் அருகில் சென்று தோளில் கைவைத்து அப்பா மீது உனக்குள்ள பாசம் புரிகிறது. இருந்தாலும் இறப்பு இருக்கத்தானே செய்யும்!. அப்பாவிற்காக இன்னுமா அழுவது? என்றேன். அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு எங்கப்பாவிற்காக நான் அழவில்லை எனக்காக அழுகிறேன் என்றான். நான் அதிர்ச்சியடைந்தேன்!

உங்களை உங்கள் அப்பா படிக்க வைக்கவில்லையா? அல்லது உங்களை வசதியாக வாழ வைக்கவில்லையா? என்றவுடன் படிரென்று அவனுக்கு முகம் சிவந்தது. விரக்தியாகச் சிரித்தான். அவன் கண்ணில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது.

எங்கப்பாவும் எல்லா அப்பாக்களைப் போல் ஒரு ஏமாளிதான். தன் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும்? என்று தெரியாமலேயே பிடிக்கும், பிடிக்கும் என்று சேர்த்தது எல்லாம் எனக்குப் பிடிக்காமலேயே போய் விட்டது. என் அப்பா கொடுமைக்காரர் அல்ல ஆனால் கோபக்காரர். அந்தக் கோபம் என் அம்மாவைக் காயப்படுத்தும் போதெல்லாம் என்னையும் காயப்படுத்தி விட்டது. ஆனால் எங்கம்மாவிற்கு ஆறிவிட்டது. எனக்கு இன்னும் இதயத்தில் ரணமாக இருக்கிறது.

அம்மா என்பவள் நம்மைத் தந்தவளல்லவா! அப்பா என்று யாருக்குத் தெரியும்? அறிவியலுக்குத் தெரியலாம். அறிவதற்கு அம்மா சொன்னால்தானே! அந்த அம்மாவையே காயப்படுத்தினால் அப்பன் என்பவன் நமக்கு அரக்கன் தானே!

அப்பா என்பவர் நம்மைக் கண்டிப்பாக வளர்க்க ஒரு போலீஸ்காரராகவோ, கற்றுத்தெரிய வேண்டுமென்று ஆசிரியராகவோ வீட்டில் நடக்க ஆரம்பித்தால் அதைவிட நரகம் வேறேது? எல்லா அப்பாக்களும் வீட்டிற்குள் வரும்போது அப்பாவாக நடந்து கொள்ளுங்கள். மற்றதையெல்லாம் நான் வெளியில் சந்தித்துக் கொள்கிறேன். சம்பாதித்துக் கொள்கிறேன்.

உனக்காகப் பார்த்து பார்த்து கட்டியது இந்த வீடு என்பார். என்னைப் பார்த்துக் கொள்ளாமல் வீட்டைப் பார்த்துக் கட்டினால் அது வீணானது தானே! நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது இந்தச் சொத்து என்பீர்கள். ஆனால் என்னைக் கஷ்டப்படுத்தியதை நீங்கள் சொல்லவே இல்லையப்பா.

அம்மா மீது இருக்கிற பிரியம் அவளின் அம்மா மீதும் எனக்கு இருக்கும். அவள் என்னை மகள் பிள்ளை பேரன் என்று மடியில் வைத்துக் கொஞ்சுவாள் சீராட்டி, பாராட்டி, தாலாட்டி உறங்க வைப்பாள். ஊரெல்லாம் எனைக் கொண்டு உச்சிமுகர்ந்து மகிழ்ந்திருப்பாள். ஆனால் என் பாட்டியை நீங்கள் அலட்சியப்படுத்தியதால் உங்களையும் எனக்குப் பிடிக்கவில்லை உங்களை மதிக்கவும் தெரியவில்லை அப்பா! காரணம் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஏதாவது ஒன்றைச் செய்து பார்ப்போம் என்று நான் முயற்சி செய்தால்? என்னைக் கேட்காமல் என்ன செய்தாய்? என்றும் உங்கள் அதிகாரத்தை மீறிவிட்டதாகவும் இந்த அடிமையை நீங்கள் அடித்ததுதான் அதிகம். சினிமாவிற்குப் போனால் கெட்டுப்போவான், அவனிடம் பேசினால் கெட்டுப்போவான் என்று சொல்லிச் சொல்லியே என்னைப் பட்டுப்போக வைத்துவிட்டாயே அப்பா. நீங்கள் ஜவுளிக்கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் நான் விரும்பிய கலரை எடுத்தால் கூட அது நல்லாயிருக்காது என்று சொல்லி நீங்கள் விரும்பியதைத் தானே எனக்கு எடுத்தும் கொடுப்பீர்கள்! போகிற இடத்திற்கு எல்லாம் நாம் வளர்க்கிற நாயைக் கூட்டிக் கொண்டு போவோம். ஆனால் அது விரும்புவதை நாம் கேட்கவே மாட்டோம். அதற்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் தெரியலையப்பா?

என் பிள்ளை இராசா என்று மார்தட்டிப் பொது வெளியில் சொல்வீர்கள் ஆனால் என்னை 23ஆம் புலிகேசி மாதிரியே வளர்த்து விட்டீர்கள். இதைச் சாப்பிட வேண்டும், இதைப் படிக்க வேண்டும், இதைக் குடிக்க வேண்டும், இந்த ஆடை அணிய வேண்டும், இப்படிப் பேச வேண்டும் எனச் சொல்லிச் சொல்லியே நான் சின்னப் பிள்ளை எனக்கு ஒண்ணும் தெரியாது என்று சொல்வீர்கள். நான் முட்டாள் என்றே முடிவு செய்து வீட்டீர்களா? அப்பா. என் பிள்ளை என் கோட்டைத் தாண்ட மாட்டான் என்று சொல்வீர்களே! உண்மையைச் சொன்னால்! உங்களிடம் வளர்ந்ததால் எனக்கு எந்தக் கோட்டையும் தாண்டும் துணிச்சல் இல்லையப்பா!

ஒரு நாள் ரோட்டோரம் போய் கொண்டிருக்கும்போது ஒரு கூத்தாடி தன் குழந்தையைத் தன் கழுத்தில் வைத்துப் போய்க் கொண்டிருந்தான். அது எனக்கு காணக்கிடைக்காத சொர்க்கம்! ஆனால் நீங்கள் காருக்குள் வைத்து அழைத்துச் சென்றாலும் நான் கட்டுண்ட சிறைக்கைதி போலதான் நினைத்தேன் அப்பா. என்னுடைய மகிழ்ச்சிக்காகத்தான் எல்லாம் செய்தீர்கள் என்று பெருமையாகச் சொல்வீர்கள். ஆனால் என் மகிழ்ச்சி எதுவென்று கடைசிவரைத் தெரியாமலேயே கல்லறைக்குப் போய்விட்டீர்கள் அப்பா.

ஊருக்குள் நீங்கள் உயர்ந்த மனிதராய் தெரிந்தாலும் எனது மனசிற்குள் நீங்கள் எட்டிக்கூடப் பார்க்கல. நான் பார்க்கும்போது எட்டிக்காயாய் தெரிவீர்கள். நீங்கள் ஊருக்குப்போனீர்கள் என்றால் நான் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பேன்.

சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போய் வருவேன், நண்பர்களுடன் விளையாடுவேன் ஆனால் யாராவது உங்கப்பாவிடம் சொல்வேன் என்று கூறி விட்டால் என் உயிரே போய்விடும். அப்படியென்றால் நீங்கள் எனக்கு அப்பாவா? இல்லை அதிகாரியா? அப்பா என்னை நீங்கள் விரும்பின மகனாய் வளர்த்தீர்களே! ஆனால் நீங்கள் ஒரே ஒரு நாள் எனக்கு அப்பாவாய் வாழ்ந்துவிட்டு இறந்திருக்கலாமே அப்பா? இதைத்தான் நீங்கள் இறந்த அன்று சொல்லி அழுதேன் அப்பா?

நீங்கள் வீட்டில் அம்மாவிடம் சண்டைபோடும் போதும், கத்தும் போதும் நாங்கள் அழுத அழுகை உங்கள் இழவுக்கு அழமுடியாமலேயே போய்விட்டது. நீங்கள் கத்தும்போதும் அம்மா அழும்போதும் பக்கத்தில் உள்ளவர்கள் எங்களைப் பரிதாபமாகப், பரிகாசமாகப் பார்த்த பார்வை இன்னும் எனக்கு முச்சந்தியில் முழு நிர்வாணமாய் நின்றது போல் இருக்கிறது. பிறகு எப்படி உங்களால் நான் பெருமைப்பட முடியும்? இவன் இவருடைய மகன் என்பதற்கு முதலில் அப்பாவின் முதல் எழுத்தைச் சொல்வார்கள்! எனக்கு நீங்கள் தந்தது குடிகாரன் மகன் என்ற பட்டமே! நீங்கள் தண்ணி போடும் போதெல்லாம் நான் தடுமாறிப்போனேன்! ஆனால் அம்மா என்னைத் தடம் மாறாமல் பார்த்துக் கொண்டாள். அப்பா உலகில் உங்களை மட்டும் மன்னிக்கவும் முடியவில்லை! மறக்கவும் முடியவில்லை! எனக்கு அப்பன் என்ற அடையாளத்தை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.

ஆனாலும் அப்பா அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்? நீங்கள் தான் எனக்கு அப்பாவாக பிறக்க வேண்டும். என்னை அதட்டாமல் இருக்க வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். தண்டிக்காமல் திருத்த வேண்டும். நல்ல அப்பாவின் மகனாக நான் நாள்தோறும் மகிழ வேண்டும். சொத்து சுகத்தை நானே சம்பாதிக்கவும், சொந்தக் காலில் நானே நிற்கவும் நீங்கள் சொல்லித் தர வேண்டும். குடிக்கவும் வேண்டாம், கோபப்பட வேண்டாம், பட்டம், பதவி வேண்டாம், சந்தோசம், சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு இவை மட்டும் போதுமப்பா! எனக்காக எதையோ தேடப் போகிறேன் என்று என்னைத் தொலைத்துவிட்டீர்களே! அதனால்தான் நீங்கள் தொலைந்த பின்னும் நான் உங்களைத் தேடவில்லை! ஆனால் இப்போது தேடுகிறேன்! வாருங்கள் மறுபடியும் பூமிக்கு! நான் விரும்பியது போல் வாழ்ந்து பார்ப்போம்! அப்பாவும், பிள்ளையும் அப்படி வாழ்ந்தார்கள் என்று அகிலம் சொல்லட்டும்! வா அப்பா! என்று வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. இங்கு பலர் பிறப்பிற்கு காரணமான அப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிரியமாய் இருக்கப் பாசத்தை கொடுக்கிற அப்பாக்கள் மிகக் குறைவு. உலகிலேயே உயர்ந்த வன்முறை என்பது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறேன் என நினைத்து அவர்களை நரபலி கொடுப்பது! ஆனால் அவர்களுக்கு நம்மீது உள்ள அன்பால் அதைச் சகித்துக் கொண்டு வாழ்வார்கள். புரியாத அன்பினால், மனக்காயங்களால் மடிந்து கொண்டிருக்கிறோம்! காலடிகளைப் பார்த்து வையுங்கள். நம் கண்ணுக்கும், கவனத்திற்கும் தெரியாமல் பல உயிர்களைக் கொன்று பயணித்துக் கொண்டிருப்போம்!

“அகில உலகம்
எனக் கெதுக்;கப்பா ஒரு
அப்பாவே அப்பாவா
வேணுமப்பா . . . “

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES