03

Nov

2020

ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?

“பிச்சை எடுப்பவரை
கேவலமாகவும்
லஞ்சம் வாங்குபவனை
கௌவரமாகவும்
எண்ணும் சமூகம் இது”

ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று பிச்சை எடுப்பவர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல இது ஏனென்றால் ஒரு காலத்தில் உடல் நன்றாக இருந்து பிச்சை எடுப்பவர்களைப் பார்த்துச் சொல்வார்கள் உனக்கு கையும் காலும் நல்லாத்தானே இருக்கு? பிறகு எதற்கு இந்தக் கேவலமான தொழில்? என்பார்கள். ஆனால் இன்று அதைவிடக் கேவலமான செயலை ஆதரிக்கிறார்கள். ஆமோதிக்கிறார்கள்.

அதிகாரத்தில் இருந்து கொண்டு அரசுப் பணிசெய்து கொண்டு கௌரவ வாழ்வுக்காகக் கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்து இன்று உயர் நீதிமன்றம் உச்சந்தலையில் அடித்த வார்த்தைதான் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தமட்டில் எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி வார்த்தைகளைச் சொல்லி இருப்பார்கள் என்று தெரியும். ஆனாலும் இது ஒரு வகையில் பிச்சைக்காரர்களைக் கேவலப் படுத்துவது போல் அமைந்து விட்டது.

ஏனென்றால் அன்னைத் தெராசா தன்னிடம் இருந்த அனாதைகளுக்குப் பிச்சையெடுத்து உணவளித்துள்ளார். ஐயா காமராஜ் அவர்கள் பிச்சையெடுத்தாவது என் பிள்ளைகளைப் படிக்க வைப்பேன் என்றார். பத்திரிக்கைச் செய்தியைப் படித்தீர்கள் என்றால் ஒரு பிச்சைக்காரர் பிச்சையெடுத்து 20 முறை 1.40 இலட்சம் கொரோனா நிதி கொடுத்துள்ளார். இப்போது சொல்லுங்கள் பிச்சை எடுப்பவர்கள் கேவலமானவர்களா? இவர்களைப்போய் லஞ்சம் வாங்குகிறவர்களிடம் சேர்த்துக் கேவலப்டுத்தி விட்டீர்களே!

உடல் ஊனமுற்றவர்கள் தாங்களால் உழைக்க இயலாது என்பதற்காக உதவி கேட்கிறார்கள் அதனைப் பிச்சை என்று கேவலப்படுத்துகிறோம். ஆனால் மனம் ஊனமுற்றவர்கள் மான மரியாதையின்றி லஞ்சம் வாங்குவதைக் கௌரவமாகப் பார்க்கிறோம். என்ன கேவலமான சமூகத்தில் வாழுகிறோம்!.

உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என விவிலியம் சொல்கிறது. உன்னுடைய உழைப்பில் மட்டுமே உண்ணக் கற்றுக்கொள் பிறர் உழைப்பில் வாழும் பிணந்திண்ணிகளாகவோ குறுக்கு வழியில் தன் தேவையைத் தேடிக்கொள்ளும் குள்ள நரிகளாகவோ இருந்து விடாதீர்கள். சிங்கம் ராஜா என்று எதற்குச் சொல்லுகிறார்கள். தான் வேட்டையாடித் தான் உண்டதோடு பிறருக்கும் பயனடையும் வகையில் வேட்டை நடத்தும் அதனால் தான் அது ராஜா. ஆனால் இன்று இராஜாக்கள் எல்லாம் குடியானவனின் குடலை உருவுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது என்ன கோமாளித்தனம்?

ஏழைகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள், பாதசாரிகளைக் குறிவைத்து தன்னுடைய இலஞ்ச வேட்டையை நடத்தும் பிணந்திண்ணிகள் இன்று பெருகிவருகிறார்கள். சுதந்திர இந்தியாவின் கேவலமான செயல் என்னவென்றால் தியாகிகளுக்குப் பென்சன் வாங்க லஞ்சம் பெறுவதுதான். உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக காறி உமிழ்கின்ற காரியம் இது.

சமீபத்தில் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்தியாவில் 62% அரசு வேலைகள் லஞ்சத்தால் நிறைவேற்றப்படுகிறது. நேர்மையாய் இருந்த திரு. சகாயம் ஆட்சியர் தன் பணியைத் தொடர முடியாமல் விருப்ப ஒய்வில் வீட்டுக்குச் செல்கிறார். லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்றார். இலஞ்சம் தவிர்த்தார். நெஞ்சை நிமிர்த்த முடியாமலும் ஆட்சியாளர்களிடம் தன்னை அடகு வைக்க முடியாமலும் நேர்மையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார்.

ஒரு நேர்மையான அதிகாரியால் இந்தத் தமிழகத்தில் பணி செய்யமுடியாதது. இந்தத் தமிழகத்தின் தலை குனிவு, அதனை யாரும் தட்டிக் கேட்காதது அதைவிட அசிங்கம். ஓட்டுக்குக் காசு வாங்கிய வாக்காளர்கள் இருக்கும் வரை தன் வாய்க்கரிசியைத் தானே வாங்கி வாய்க்குள் போட்டுக் கொள்வார்கள்.

உறவோ, உழைப்போ இல்லாமல் எந்தப் பலனையும் அனுபவிக்காதவன் சங்கத் தமிழன். அதனால்தான் தன் சொத்தை தன் வாரிசுகளுக்குக் கொடுத்தான். அரசுச் சொத்துக்களையும், அடுத்தவர் சொத்துக்களையும் தொடுவதை அசிங்கமாகக் கருதினான். அப்படித் தொட்டால் அடுத்தவர் அங்கங்களைத் தொட்ட பங்கம் வரும் எனப் பயந்து வாழ்ந்தான். உறவுகளைத் தொட்டு உறவாடிய மனிதன். மணவாழ்க்கையில் தன் மனைவிக்கு பரிசம் என்று புடவை கொடுப்பான். அது மனைவியின் மானம் தாங்கி நிற்கும் தாலி என்ற பெயரில் அவள் கழுத்தை தழுவி நிற்கும். பின்பு கரங்கள் சேர்த்து கைபிடித்துக் கொடுப்பார்கள்.

இதன் மூலமாக ஒரு ஆடவன் தன் மனைவியை தழுவி நிற்பான். அந்தப் பெண்ணைத் தொடுகின்ற உரிமை அந்தக் கணவன் என்று ஆடவனுக்கே. அவன் இறந்த பிறகு ஆடைகள் மாறி வெள்ளை உடையில் துறவியாவாள். காரணம் உடையின் மகிமை, மேன்மை அதில் நிறைந்த கற்பு, காப்பு, அன்பு, காதல் கலந்து நிற்கும்.

ஆனால் இன்று யார் யாரோ கொடுக்கிற லஞ்சப் பணத்தில் தன் மனைவி மகளைத் தழுவி நிற்கின்ற, ஆடைகள் நகைகளுக்கு என்ன பொருள்? பணத்திற்காகத் தலைவர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் துரோகிகள் என்றால் வசதிக்காகத் தம்மவர்களை……. கொடுக்கிறவர்களை என்ன சொல்வது? இது கலாச்சாரச் சீரழிவல்லவா? தனது நிழலில் மட்டும் இளைப்பாறுவோம் தம் உணவில் தினம் பசியாறுவோம் முயன்று உழைப்போம் முடிந்தவரைக் கொடுப்போம். இலஞ்சம் தவிர்ப்போம். நெஞ்சம் நிமிர்த்துவோம்.

“நேர்மையாய் இருந்து
என்ன சாதித்தோம் என்றால்?
நேர்மையாய் இருப்பதே
சாதனை தானே”

ARCHIVES