07

Nov

2020

பக்கா…வாதமா? பக்கவாதமா!

“செய்யத் தெரியாதவன்
போதிக்கிறான்
செய்யத் தெரிந்தவன்
சாதிக்கிறான்”

ஊடகங்கள் பெருகிவிட்டது. விவாதங்கள் அனல் பறக்கிறது. ஒருவர் ஒருவரை உயர்த்துவதற்கு இமயம் வரைத் தொடுகிறோம். ஒருவர் ஒருவரைத் தாழ்த்துவதற்குச் சாக்கடையைக்கூட அள்ளுகிறோம். இது எல்லாம் எதற்காக? இதனால் என்ன சாதித்தோம்? பிரிந்து கிடக்கிறோம் மனம் முறிந்து கிடக்கிறோம். ஒருவர் ஒருவரைத் தாழ்த்துவதற்கும் வீழ்த்துவதற்கும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவா நம் வளர்ச்சி? இதுதான் நாம் வகுத்துக்கொண்ட வீழ்ச்சி……!

பெண்ணியம் பேசுவதில் நானும் ஒருவன். அவர்களுக்குரிய சுதந்திர வெளிக்கு அவர்கள் இன்னும் வந்து சேரவில்லையோ? என நினைப்பவன் ஊடகங்களில் வந்து உரையாற்றினால்தான் அவர்களது உண்மையை அனைவரும் அறிவார்கள் என்று ஆதங்கப்பட்டேன். இன்று ஊடகங்கள் முழுவதும் அவர்கள் முகம்தான் தெரிகிறது. ஆனால் கேட்பவை எல்லாம் கீழ்த்தரமாகத் தெரிகிறது. கெட்ட வார்த்தைகள் வெட்ட வெளிச்சத்தில் வந்து விழுகிறது.

அறைக் கூவல்கள் எல்லாம் காட்டுக்கத்தல் ஆகிவிட்டது. முற்போக்குச் சிந்தனையில் எல்லாம் மூடநம்பிக்கைகள் விதைக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் எம் பெண்கள் விவாதம் நடத்துவது பெருமையாக இருக்கும் என நினைத்தால் குழாயடிச் சண்டையைவிடக் கேவலமாக இருக்கிறது. காட்டைக் காப்பாற்றவில்லை. ஆனால் கடவுளைக் காப்பாற்றத் துடிக்கிறோம். மனிதனைக் காப்பாற்றவில்லை. ஆனால் மாட்டைக் காப்பாற்றத் துடிக்கிறோம். மாறுபட்ட சிந்தனையால் வேறுபட்டு நிற்கிறோம்.

இப்போது பாருங்கள் ஊடகத்தில் சமூகப் போராளிகள் என்ற போர்வையில் சமூகத்தைக் காப்பாற்ற உடல் பொருள் ஆவியை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்தது போல குரலை ஒலித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது பள்ளி திறப்பு என்றவுடன் ஐய்யய்யோ…. பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்….! என்று அழுகையும் கண்ணீருமாய் அலட்டிக் கொண்டிருக்கிற விசும்பல் சத்தமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் ஏன் இந்தக் கேள்வி? எதற்கு இந்த நாடகம்? அரசு அறிவித்தது என்ன? பள்ளி திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளி திறக்கலாம், திறக்காமலும் போகலாம்! மாணவர்கள் வரலாம் வராமலும் இருக்கலாம்! பெற்றோர்கள் அனுப்பலாம் அனுப்பாமலும் இருக்கலாம் அதற்குமுன் உயிருடன் விளையாடாதீர்கள் என்று எதற்கு ஓலமிட வேண்டும். இதற்குத்தான் கிராமத்தில் சொல்வார்கள் கத்தரிக்காய் என்றால் பத்தியம் முறிந்தா விட்டது? இதனைப் பெற்றவர்களே முடிவு செய்து கொள்ளலாம் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?

அப்படியென்றால் சமூதாயத்தின் மீது அக்கறை காட்டக் கூடாதா? சரியான கேள்வி. மாணவர்கள் மட்டில் அக்கறையுள்ள மகான்களே! உங்களுடைய பொன்னான எண்ணத்திற்குக் கோடான கோடி வணக்கங்கள் இன்னும் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறேன். இதற்காகவும் உழைத்துப் போராடி இளைய தலைமுறைகளைக் காத்துக் கொள்ளுங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

7.5% என்பதனை எப்படியோ முட்டிமோதி பெற்று இருக்கிறோம். அதனை முழுமையாக நிறைவேற்றிவிடப் போராடுங்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள 50% கிடைக்கும் வரைக் கிளர்ந்து எழுங்கள். பள்ளிக்கு வந்தால் பிள்ளைகளுக்குக் கொரோனா வந்து விடும் என்று பயப்படுகிறவர்களே. இப்போது பிள்ளைகள் எல்லாம் சந்தைகளுக்கோ, மால்களுக்கோ செல்லாமல் விளையாட்டு, வேடிக்கை என்று கூட்டம் கூடாமல் வீட்டுக்குள் பத்திரமாகத்தான் இருக்கிறார்கள் என்று உத்திரவாதம் தர முடியுமா?

பள்ளியில் வைத்துப் பிள்ளைகளைப் பயிற்றாமல் இப்போது ஏதாவது தேவைக்குப் பள்ளிக்கு வரும்போது அவன் முடியும் சரியில்லை முழியும் சரியில்லை. அப்படியென்றால் கல்வி என்பது பெற்றோரையும் சார்ந்தது முறையாய் வளர்க்க வேண்டியது நமது கடமை என்பதை புரிந்திருக்கிறோமா? புரிய வைத்திருக்கிறோமா? ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா? என்பார்களே என்னுடைய கேள்வி ஆன்லைன் கல்வி ஆளுமையைத் தருமா? இந்த நோய்க்கு மருந்து இல்லை மூன்று ஆண்டுகள் இருந்தாலும் மூடிக்கொண்டு இருக்கப்போறோமா? சிந்திப்போம். சவால் விடுவதை விட்டுவிட்டு செயலில் இறங்குவோம்.

இப்போது நமது தேவை எதிரும் புதிருமாக நின்று அறிக்கை விடுவதல்ல, அரசியல் நடத்துவதல்ல, விவாதிப்பதல்ல ஒன்றாய் நின்று உருப்படியான வேலையைப் பார்த்தால் நன்றாய் இருக்கும். சாதிக்காகவும் மதத்திற்காகவும், அடித்துக் கொண்டும் அவதூறு பரப்பிக் கொண்டும் எத்தனை நாள் இங்கிருந்து என்ன பயன்? இறந்தபின்னும் வாழ்கிறவர்கள் இருக்கிறவர்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்து விட்டுச் செத்தவர்கள்தான். நீங்களும், நானும் சாவுமுன் சாதிக்காவிட்டாலும் நம்மைச் சார்ந்தவர்களுக்காக வாழ்ந்துவிட்டுத்தான் சாவோமே! சத்தியமாய் இறந்தபின்னும் வாழ்வோம் எப்போதும் வாழ்வோம்.

‘வாழ்ககை
வாழ்வதற்கு மட்டுமல்ல
வாழ வைக்கவும் தான்….’

ARCHIVES