03

May

2023

ஞானம் பிறந்த கதை…

விடைத்தாள் திருத்தும் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். சந்தோசமாகச் சிரித்து கொண்டும் பேசிக் கொண்டும். எதிரே ஒருவன் அழுக்குத் துணிகள் அணிந்திருந்தான். கிழிந்த சாக்கு ஒன்று வைத்திருந்தான். குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தான். அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் கடந்து வந்து கொண்டு இருக்கும்போது விருட்டென்று ஒரு கேள்வியைக் கேட்டான். என்ன செய்து விட்டு வருகிறீர்கள்? என்றான் நாங்கள் அதனைச் சட்டை செய்யவில்லை. இருப்பினும் ஒருவர் பதில் சொன்னார் விடைத்தாள் திருத்திவிட்டு வருகிறோம். எவ்வளவு காலமா? இப்போது கோபம் வந்து விட்டது. அடக்கிக் கொண்டு பல வருசமாமா! எனக் கூறி விட்டு அவனைக் கடந்தோம்.

ஆனால் அவன் எங்களை மடக்கினான். பல வருசமா… பையன்கள் பேப்பரைத் திருத்திக்கிட்டு இருக்கீங்களே என்றைக்காவது உங்களைத் திருத்தி இருக்கிறீர்களா? என்றான். எங்களில் பலருக்குக் கோபம். அடக்கிக் கொண்டு, அவன் கிடக்கிறான் கிறுக்குப் பய… என்று நடந்தோம். ஆனால் அவன் எங்களைப் பார்த்துச் சொன்னான். அதுசரி நீங்க திருத்த வேண்டியதை திருத்த வேண்டிய நேரத்தில் திருத்தினால் இந்தக் காகிதங்கள் ஏன் குப்பைக்கு வருகிறது? என்று அந்தக் காகிதத்தை எடுத்து தன் பையுக்குள் போட்டுக் கொண்டான். இப்போது கோபம் வந்தது. அவன்மேல் அல்ல என் மீது! எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக என்னைத் தொடுமளவிற்கு இல்லை சுடுமளவிற்குச் சொல்லிவிட்டு அவன் செல்கிறான்!

ஊரையெல்லாம் திருத்த வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும்போது உங்களையும் கொஞ்சம் திருத்துங்களேன் என்று உரக்கச் சொன்னான். இல்லை இல்லை சற்று உரைக்கும்படியே சொல்லிவிட்டான். அவன் சொன்னதில் எனக்கு இரண்டு விசயம் புரிந்தது. ஒன்று உலகம் கெட்டுப் போகிறதற்குக் காரணம் அடுத்தவர்களைக் குற்றம் சொல்லி அவர்களைத் திருத்த முனைவது தான். இரண்டு, உலகம் திருந்த வேண்டுமென்றால் முதலில் திருத்த வேண்டியது நம்மை மட்டுமே. இதனை விட்டுவிட்டு உலகம் கெட்டுவிட்டது என்று தத்துவம் சொன்னால்… சிங்கம், சைவம் சாப்பிடுங்கள் என்ற சித்தாந்தத்தைச் சொல்லுவது போன்று இப்போது பாருங்கள் நாம் ஒவ்வொருவரும் தமது அலைபேசி Status ல் உலகமே புனிதமாகுமளவிற்கு தத்துவத்தைக் கக்கி இருப்போம். அதில் ஏதாவது ஒன்றை நாம் கடைப்பிடித்தாலே… உலகம் என்றைக்கோ சுத்தமாகி விடும். ஊருக்கெல்லாம் புத்திமதியைத் தன் அலைபேசி வழியாகச் சொல்லுகின்ற புத்தர்களே. நீங்கள் முதலில் கடைப்பிடியுங்கள். அப்புறம் அடுத்தவர்களுக்குப் பகிருங்கள் இல்லையென்றால் அந்த வார்த்தை உங்கள் கைப்பட்டதால் களங்கப்பட்டு விடும் புரிந்து கொள்ளுங்கள்.

கண்ணாடியின் முன் நின்று சரியாய் இருப்பதையெல்லாம் இன்னும் சரியாக இருக்கிறதா? எனச் சரி செய்வோம். வீட்டைப் பூட்டி விட்டு பூட்டை இழுத்துப் பார்ப்போம். எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சாலையில் நடந்து போகும் போது அல்லது சில தூரங்களைக் கடந்து போகும் போது சாலையின் நிற்கின்ற வாகனங்கள் கண்ணாடியில் கூட நம்மை சரி செய்வதற்கு உரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்வோம். ஆனால் நம் வாழ்க்கைப் பயணத்தை மட்டும் நாம் ஏன் சரி செய்து கொள்ள இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லையே! ஏன்?

என் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ பக்கங்கள் எப்படி எப்படியோ பதில்கள். பல நேரங்களில் சிலரது கேள்விகளைத் தப்புத் தப்பாகவே புரிந்து கொண்டு பதில் கொடுத்திருக்கிறேனே…! இன்னும் அதை திருந்தவில்லையே! சிலரைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் அவர்களது கேள்விக்கு நான் பதிலே கொடுக்கவில்லையே! இதையும் திருத்தவில்லையே! சில கேள்விகளுக்கு என் சுய புத்தியில்லாமல் பிறர் சொன்னதைக் கேட்டு, காப்பி அடித்து பதில் கொடுத்திருக்கிறேனே! அதனைத் திருத்தவில்லையே! சில நேரங்களில் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்துக் கொண்டு தெரியாததையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு என் பக்கங்களைத் தப்பாக்கிவிட்டேனே! இதனையும் இன்னும் திருத்தவில்லையே! பல நேரங்களில் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்தே என் நேரங்களை வீணாக்கி விட்டேனே! அதனையும் திருத்தவில்லையே! என் தேர்வில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் கனவு இருக்கிறது என்பதனை மறந்து அதனைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேனே! அதனையும் திருத்தவில்லையே! புரிந்து கொண்டேன். திருத்த வேண்டியது பிறரை அல்ல என்னை! இனி இந்தப் பிழையைச் செய்யமாட்டேன்.

அந்தக் குப்பைக் காரன் கடைசியாக ஒன்று சொல்லிவிட்டுப் போனான். நீங்கள் ஒழுங்காகத் திருத்தினால் ஏன் இந்தக் காகிதம் குப்பைக்கு வருகிறது! என்றான். ஆம் நான் திருத்தாததால் தவறாகத் திருத்தியதால், கவனக் குறைவாகத் திருத்தியதால் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட காகிதங்கள் குப்பையாகி இருக்கின்றன. ஆனால் அவன் அதையும் உரமாக்கக் கொண்டு செல்கிறான். இப்போது அவன் குப்பைக்காரன் அல்ல என் மகான்! இப்போது தெருவில் ஒரு விசில் சத்தம் கேட்டது என் மகன் ஓடி வந்து அப்பா குப்பைக் காரன் வந்திருக்கிறான் என்றான். நான் சொன்னேன் அவன் சுத்தக்காரன் சுத்தம் செய்ய வந்திருக்கிறான். நான் குப்பைக்காரன் எனவே குப்பைகளை அவனிடம் கொடுக்கிறேன் என்றேன் எனக்கு புத்தி தெளிந்தது. என் மகனுக்கு ஞானம் பிறந்தது.!

“திருத்திக் கொள்ளுங்கள்
இனி யாரையும்
திருத்த வேண்டாம்
திருந்தினாலே போதும்”

ARCHIVES