06

Oct

2023

தன்னை இழந்தவர்கள்…

– அடிமைகள்

மேடு பள்ளங்கள் நிறைந்தது தான் பூமி என்றால் அதன் மேல் நடக்கின்ற மனிதர்களிடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் ஏராளம் இருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக ஆண்டான் அடிமை என்பது அசைக்க முடியாத ஆணிவேராக நம் மத்தியில் நங்கூரமாய் இருக்கிறது. வலிமையுள்ளவர்கள் எப்போதும் பலரை அடிமைகளாக வாங்கிக் கொள்கிறார்கள் அல்லது வரும்போது அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அடிமை என்பது தன்னுடைய ஆசைகளைக் கூட வெளியிடமுடியாமல் மனதிற்குள் மௌனித்து, மரணித்துக் கிடப்பவர்கள் தன்னுடைய தேவையைக் கூட தேடிக் கொள்ள முடியாமல் உறுப்பிருந்தும் ஊனமுற்றவர்கள். தன்னுடைய வாழ்க்கையைத் தனக்காக வாழாமல் யாரோ வளம் கொழிக்க இவர்கள் வறண்டு போனவர்கள்.

ஆதிகாலத்தில் வலிமையுள்ளவர்கள் எளிமையானவர்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள். இந்த வலிமை என்பது தொடக்க காலத்தில் உடல் வலிமையாக இருந்தது. இதனால்தான் உடல் வலிமையாக இருந்த ஆண் மெல்லினமாக, மென்மையாக இருந்த பெண்ணை தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். தனது தேவையை நிறைவேற்ற தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ளவும். தன்னுடனே ஒரு அடிமையை வைத்துக் கொண்டான் அதற்குப் பெயர் அவன் குடும்பம் என்றான்.

இப்போது எல்லோருக்கும் ஒரு கேள்வி வரும் மனைவி என்பது நமது அன்பின் அடையாளம் அது எப்படி அடிமையாகும்? இது முட்டாள் தனமான வாதம் என உச்சக்கட்டக் கோபத்தில் நீங்கள் உரைக்கலாம். உங்களிடம் ஒரு கேள்வியை வைக்கிறேன். நம் வீட்டில் குழந்தைகள் வளர்கிறது அது வாரிசா? அடிமையா? எப்படிக் கண்டுபிடிப்பது வாரிசு என்றால் நம் சொத்தில் உரிமை உண்டு! அடிமைக்குக் கிடையாது. உங்களில் எத்தனைபேர் சொந்த மகளுக்கு சொத்துரிமை கொடுத்து இருக்கிறீர்கள்? தகப்பன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யும் உரிமையை எத்தனைபேர் கொடுத்திருக்கிறீர்கள் இந்த இரண்டும் மறுக்கப்படுமேயானால் அவள் உங்கள் வீட்டில் மகாராணியாக வாழ்ந்தாலும் அடிமையே ஆவாள்.

இந்த வலிமை மனிதன் நாடோடியாய் இருக்கும் மட்டுமே, உடல் வலிமை ஊரை ஆண்டது. மனிதன் ஓரிடத்தில் குடியேற ஆரம்பித்த பிறகு அவன் சொத்தின் வலிமை பார்க்கப்பட்டது. அதிகமான சொத்து வைத்திருப்பவன் பண்ணையார், ஜமீன்தார், மிராசுதாரர், பணக்காரர் என்ற போர்வையில் பெண்களையும் வருவாய் குறைந்தவர்களையும் அடக்கி ஆண்டார்கள். தனிமனித உரிமைகளும் சுதந்திரங்களும், சுயமரியாதையும் ஒடுக்கப்பட்டன.

பின்பு ஜாதி என்ற பெயரில் செய்யும் தொழிலை பிரித்து மேல் ஜாதி என்ற பெயரில் கீழ் ஜாதி என்ற பெயரில் சிலரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள். பின்பு ஆரியர்கள் வருகைக்குப் பின்பு நாகரீகப் பாதையில் மனிதன் நடைபோட்ட பிறகு அறிவில் சிறந்தவர்கள் அறிவாளி என்றும் மற்றவர்களை முட்டாள் என்றும் அடக்கி வைத்திருந்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர்கள் காலத்தில் அடுத்தவர்களை அடக்க ஆயுதங்கள் வைத்திருந்தனர். அப்போது அதிகம் ஆயுதம் வைத்திருந்தவர்கள் ஆயுதம் இல்லாத நிராயுதபாணிகளை அடிமைப்படுத்தினார்கள்.

தற்சமயம் அவை ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் கைக்கு அது மாற்றப்பட்டுவிட்டது. இவர்களோடு இன்று பணம் வைத்திருப்பவர்களும் இணைந்து கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள். பணம் இருந்தால் கட்சியில் சேர்ந்து ஆட்சி அமைக்கக் காசு கொடுத்து வேட்பாளராகி காசு கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து அடிமைகளை உருவாக்குகிறார்கள்.

இவைகளுக்கு மத்தியில் திரையில் தோன்றி ஆபத்தில் காப்பவனாகவும், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவராகவும் நடித்து நடிப்பினால் சில அரைவேக்காடுகளை அடிமைப்படுத்துபவர்களும் உண்டு. இந்த அடிமைகளுக்குத் தொண்டன், இரசிகன் என்ற பெயரும் உண்டு. இப்படி பலநேரங்களில் அடிமைகள் உருவாக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அடிமைகள் தானாகவே உருவாகிவிடுகிறார்கள். ஆனால் எல்லா நிலையிலும் பாருங்கள் பெண்கள் நிரந்தர அடிமைகள். இந்த அடிமைகள் உருவான காலங்களில் எல்லாம் பெண்களே அதிகமாகப் பலவந்தப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதிகமான சட்டதிட்டங்களை அவர்களுக்குள் புகுத்தி அவர்களை அடக்கி ஆண்டார்கள் அவர்களும் இலவச வேலைக்காரிகளாகவும், இச்சைத் தீர்க்கும் தாசிகளாகவுமே பல காலங்களில் அவர்களது வாழ்க்கைப் பயணம் இருந்திருக்கிறது இல்லை இல்லை அவர்கள் வாழ்க்கையே பாலைவனமாக இருந்திருக்கிறது.

உலகம் உருண்டைதானே இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்திக்கின்ற போதெல்லாம் கிளர்ச்சிகளும், போராட்டங்களும், போர்களும் எழுந்திருக்கின்றன. எழுத்துக்கள் தோன்றின, நாடகங்கள் உருவாகின. திரைப்படங்கள் நெருப்பாய் சுழன்றன. ஆனால் எல்லாமே புத்தி சொல்ல வந்ததல்ல பொழுது போக்காய் மலர்ந்தது என நினைத்து விட்ட மானிடச் சமுதாயம் அதனை காலத்தால் அழிந்து விட்டன.

ஆனால் இன்றளவும் அடிமையின் வம்சமும் மாறவில்லை அதன் வர்க்கமும் குறையவில்லை. பெண்கள் சுதந்திரம் பெற்றதுபோல் ஒரு பிம்பம் வரையப்பட்டுள்ளது. ஆனாலும் வரதட்சனை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாரிசுரிமை மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பெண்களின் சுதந்திரத்தை மேடைதோறும் முழங்குகின்ற ஒருவன். ஆறு மணிக்குள் தன் மனைவி, மகள் வீட்டுக்கு வராவிட்டால் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்! எரிமையாகிவிடுகிறான்!. அடுத்தவர் உடன் அவள் அனுமதியில்லாமல் பேசிவிட்டால் தினந்தோறும் தீமிதிக்கும் சீதையைப்போல் மனைவியையும் மகளையும் ஆக்கி விடுகிறான்.

பெண்ணின் அழகு, பெண்ணின் அறிவு பெண்ணின் இரக்கம், பெண்கள் செய்கிற உதவி,பெண்கள் பேசுகிற கனிவான பேச்சு பெண்களின் ஆறுதலான பார்வை இப்படி ஒவ்வொன்றும் நம்மை அடிமைப் படுத்தியது தானே! தாயின் அன்புக்கு அடிமை, அரவணைப்பிற்கு அடிமை, உறவுக்கு அடிமை, உயிhதரும் உறுப்புக்கு அடிமை அதனைக் கடந்து தானே வந்தோம். அதனை இழக்க முடியாமல் மறக்கத் தெரியாமல் அதிகாரத்தோடும், அடக்குமுறையோடும் மறுபடியும் அடையத் துடிக்கும் மாறுபட்ட அன்புதானே மனைவியும், மகளும்!

தாயின் அன்பிற்கும், பாட்டியின் கொஞ்சலுக்கும் அத்தையின் ஆறுதலுக்கும், அக்காளின் அரவணைப்பிற்கும் தங்கையின் சீண்டலுக்கும், தோழியின் சிரிப்பிற்கும், டீச்சரின் கண்டிப்பிற்கும், உடன் பணியாளரின் உடனிருப்பிற்கும் மனைவியின் நெருக்கத்திற்கும் மகளின் புன்சிரிப்பிற்கும் நாம் எந்நாளும் அடிமைதானே! எல்லோரும் அடிமை தானே! இதை யாராவது மறுக்க முடியுமா? தானாய் கனிகிற கனியை ஏன் தடிகொண்டு அடித்துப் பழுக்க வைத்து அனுபவிக்கத் துடிக்கிறீர்கள்? அன்பைச் சுவைத்தவன் அன்புக்கு அடிமையாகத்தான் இருப்பான்! அன்பே அறியாதவன் அதனைச் சுவைக்கத் தெரியாதவன் தானே தனக்கென்று ஒன்றை தக்கவைக்க அடுத்தவர்கள் அடக்கியாள நினைப்பான். நாமே அடிமை! நமக்கெற்கு அடிமை!

“முரடனையும் திருத்தலாம்
முட்டாளையும் பழக்கலாம்
அன்பால் பெண்ணின்
அன்பால் மட்டுமே!”

ARCHIVES