13

Oct

2023

கானல் நீர்…

சின்ன வயதில் நான் கற்ற ஒரு வார்த்தை கானல் நீர். அதாவது நாம் பார்க்கும்போது நீர் இருப்பதாகத் தெரியும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கு நீர் இருக்காது. அதுபோல் தான் இங்கு, எங்கு பார்த்தாலும் பக்தி மார்க்கங்கள் பெருகிவிட்டது. ஆனால் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து விட்டது. கோவில்கொடைகள் பெருகிவிட்டது. குடிப்பழக்கமும் பெருகிவிட்டது. சாமிகளை எல்லாம் அலங்கரித்து அர்ச்சனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சாதிவெறியும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. ஆண்டவன் அதிகமாக அதிகமாக அக்கிரமங்களும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன காரணம் என்ன?

அமைதியையும், அன்பையும் பூமியில் விதைக்க வந்த மகான் இயேசு. ஆனால் அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரே ஒரு முறை கோபத்தில் கொந்தளித்து சவுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார் காரணம் அது கோவில். கோவில் என்பது இறைவன் வாழும் இடம் அதனை கொள்ளையடிக்கும் வியாபாரிகளின் கூடாரமாக்கிவிடாதீர்கள் என்கிறார். அவர் எழுப்பிய குரல் இன்றளவும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றளவும் மக்கள் திருந்தியது போல் தெரியவும் இல்லை. குருமார்கள் திருந்த விட்டதும் இல்லை.

எந்த மதத்திலாவது பெண்கள் குருமார்களாக இருந்திருக்கிறார்களா? இல்லை பீடத்தில் நின்று பூசை செய்திருக்கிறார்களா? இல்லையே? அப்படியென்றால் மதத்திலிருந்துதான் மாதர்களின் அடிமை தொடங்குகிறதா? ஆனால் எல்லா மதத்திலும் பெண் தெய்வங்கள் இருக்கிறது வழிபாடு நடக்கிறது. சிலைக்கும், படத்திற்கும் மாலைபோட்டு மரியாதை செலுத்தும் இச்சமூகம் பெண்கள் கோவிலுக்குள்ளோ, பீடத்திற்கோ வந்தால் தீட்டு என்று தீர்க்கத் தரிசனம் சொல்கிறது. சில கோவில்களுக்குப் பெண்கள் வரக்கூடாது எனப் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படியென்றால் அன்னையும் பிதாவும் எப்படி முன்னறி தெய்வம் ஆகும்?.

பக்தி பெருகப் பெருக பாவங்கள் குறைய வேண்டுமல்லவா? ஆனால் பாவம் செய்வதுதான் பக்தி என்று பழகிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்தவர்கள் கோயிலை இடிப்பது அடுத்தவர் வழிபாடுகளைத் தடுப்பது. அடுத்தவர் கலாச்சாரத்தைச் சிதைப்பது இதுதான் தன் மதத்தின் மீது கொண்டிருக்கிற பக்தி என்று, தான்தோன்றித்தனமாகப் பல தற்குறிகள் அலைகிறார்கள். இதற்கு முன் விழாக்கள் என்றால் மதம் கடந்து எம்மதத்தவர்களும் ஒன்று கூடி வடம் பிடிப்பதும், வழிபாடு செய்வதும், பாங்க் ஒதுவதும் எனப் பங்கெடுத்து வந்தார்கள். ஆனால் இன்று திருவிழா என்றால் சண்டை இழுப்பது, சஞ்சலப்படுத்துவது, சரமாரியாக வெட்டுவது, வெடிகுண்டு வீசுவது, வேண்டாத வேலைகளைச் செய்வதுதான் விழாக்கள் என்றால் இந்தச் சமுதாயம் எங்கே உருப்படப்போகிறது? மதம் என்ற சட்டையைக் காப்பாற்ற உடம்பை ஏன் கிழித்துக் கொள்ள வேண்டும்.

கோயில்களில் இருந்த குருக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இப்போதெல்லாம் அங்கு வியாபரிகள் தான் நிறைந்திருக்கிறார்கள். தாவீது மன்னன் கோவிலிலுள்ள அப்பத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுத்தான் என்று கூறிக்கொண்டே மக்களிடம் இருக்கும் பணத்தைப் புடுங்கி ஆலயம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னர் பூசாரிகளிடத்தில் அர்ச்சனைப் பொருட்கள் இருந்தது. இப்போது அருவாள், கத்தி, வாளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் கற்பிழப்பது பக்தியின் பெயரில் தான் நடக்கிறது. இதற்கு பரவசநிலை என்கிறார்கள்!

அதிகமாகக் கொள்ளையடித்தவனை ஊரை அடித்து உலையிலே போட்டுட்டான் என்பார்கள். இப்போது ஊரைக் கொள்ளையடித்துக் கோயிலினுள் போட்டு விட்டார்கள். “தேரை இழுத்து தெருவில் விட்டு விடாதே” என்று பழமொழி சொல்வார்கள். இப்போது தலைவர்கள் தேரை தன் வீட்டிற்கே இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். கோயிலில் இருந்தத் தங்கக் கலசங்கள் எல்லாம் இன்று கொள்ளையடிக்கப்பட்டு விட்டன். ஆலயத்தின் சொத்துக்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டுவிட்டது. சாமிக்குப் போர்த்துகிற புடவைகள் கூட கட்டில் சொந்தங்களுக்குக் காணிக்கையாய் போவதாகச் செய்திகள் பரவுகின்றன. சாமிகளே இங்கு கடத்தப்படுவதால் மனிதர்களுக்குப் பாதுகாப்பில்லை பெண்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால் நாங்கள் ஆன்மீகத்தில் வளர்ந்து நிற்கிறோம் என்று மார்தட்டிக் கொள்கிறோம்

ஒரு பாடல் சொல்லும் ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி, பக்தியும் வளரணும் நல்ல செயல்களும் வளரணும் அதுதான் ஆன்மீகம் ஆனால் இங்கு பக்தி பகல் வேசமாகிப் போனது. துறவிகள் மட்டுமே அணிந்த காவி உடைகள் இன்று திரைப்படத்தில் வில்லன் அணிந்து வருகிறான். உடலில் இருந்த ஆன்மீக அடையாளங்கள் இன்று அழகுபடுத்த வந்து அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. கோயில்களை கட்டுவதற்கும் அழகுபடுத்துவதற்கும் குருக்கள் இன்று மக்களை இடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கோயில்கள் எல்லாம் மின்னிக் கொண்டிருக்கிறது. குடிசைகள் மழைக்கு ஒழுகிக் கொண்டிருக்கிறது. கோபுரம் உயாந்து கொண்டே இருக்கிறது. அகதிகள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் கோயில்களைப் புதுப்பித்தால் உங்கள் மதத்துக்காரர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் மற்றவர்களுக்கு வெறுப்பு . ஆனால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்குங்கள் அனைத்து மதத்தினருக்கும் ஏன்? கடவுள் இல்லையென்று சொல்பவர்கூட அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். கோவிலில் தரும் அடையாளங்கள் அனைத்துப் பிற மதத்துக்காரர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டும். ஆனால் பள்ளி தருகிற அடையாளம் அனைவரையும் சகோதரனாய் இணைக்கும். கோவிலில் குருவும், பக்தனும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் பள்ளியில் குருவும், மாணவனும் சாதிமத பேதமின்றி சங்கமமாகிறார்கள். இங்கு குரு வளர்கிறான். பக்தன் சுரண்டப்படுகிறான். பள்ளியில் குரு கரைகிறார். மாணவன் ஒளிர்கிறான். கோயில்களில் உண்டியல்கள் எல்லாம் குருவுக்குப் போகிறது பள்ளியில் குருவின் வளங்கள் மாணவனுக்குப் போகிறது. கோவிலில் குரு தனக்குத் தெரிந்ததை பக்தனுக்குப் போதிக்கிறார். பள்ளியில் குரு மாணவனுக்குத் தெரிய வேண்டியதைப் போதிக்கிறார்.

எனவே ஆன்மீகம் என்பது அடையாளங்கள் அல்ல அது வாழ்க்கைமுறை! பக்தி என்பது வேசங்களல்ல. அது வேள்விகள்! கோயில் என்பது பிரிப்பது அல்ல இணைப்பது! மதங்கள் என்பது மற்றவர்களை புண்படுத்துவது அல்ல. நம்மை பண்படுத்துவது! என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறரைப் பிரிக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற வேண்டாம். அடுத்தவர்களை மதிக்காத எந்த ஆலயத்திற்குள்ளும் நுழைய வேண்டாம். எல்லோரும் உங்கள் இதயத்தில் நுழைய இடம் கொடுங்கள் அதுதான் கோயில்!. அதுதான் ஆன்மீகம்! மதங்களைக் கடந்து மற்றவர்கள் உங்களை அன்பு செய்தால் நீங்கள் முக்தி அடைந்து விட்டீர்கள்! மதம் பெரிதா? மனிதம் பெரிதா? சாமி பெரிதா? மனிதன் பெரிதா? வழிபாடு வேண்டுமா? சமத்துவம் வேண்டுமா? கண்முன் தெரியும் மனிதனை அன்பு செய்ய வேண்டுமா? காணாத கடவுளை அன்பு செய்ய வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள், கடவுள் இருக்கிறானா? இல்லையா? என்றால் என்னைப் பொருத்தமட்டில் இருந்தால் நல்லா இருக்கும்!

“தொழுகிற கோயில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்”

-பாரதி

ARCHIVES